Ad Code

Responsive Advertisement

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் வேலூர் மாவட்டத்தில் அரசுப் பள்ளிகள் அளவில் முதலிடம் பெறும் மாணவருக்கு ரூ.1 லட்சம் மதிப்பிலான 4 சவரன் தங்கச் சங்கிலியை பரிசாக அளிக்கவுள்ளார் டீக்கடைக்காரர் - தினமணி


வேலூரை அடுத்த விரிஞ்சிபுரத்தைச் சேர்ந்தவர் மகேஷ் (எ) வெ. மகேஸ்வரன் (53). ஏழ்மை காரணமாக பள்ளிப் படிப்பைக் கூட முடிக்காத இவர், இளம் வயதில் டீக்கடைகள் பலவற்றில் தொழிலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார்.

பின்னர் கடந்த சில ஆண்டுக்கு முன்பு வேலூர் புதிய பை-பாஸ் சாலை பகுதியில் டீக்கடை ஒன்றை தொடங்கிய இவருக்கு ஓரளவு வருவாய் வரத் தொடங்கியது.


இவரது மனைவி எழிலரசி (38). இவர்களுக்கு 5-ஆம் வகுப்பு பயிலும் சுனில் (10), 2ஆம் வகுப்பு பயிலும் சுவேதா (7) ஆகிய குழந்தைகள் உள்ளன.

வறுமையில் வாடிய இக்குடும்பம் டீக்கடை கடை மூலம் ஓரளவு நிரந்தர வருவாயை பெறத் தொடங்கியதும், அரசுப் பள்ளியில் நன்றாக பயிலும் மாணவர்களுக்கு ஆண்டுதோறும் உதவி புரிய வேண்டும் என்ற ஆவல் மகேஸ்வரனிடம் எழுந்தது. அதைத் தொடர்ந்து 2008-ம் ஆண்டு முதல் பள்ளி அளவில் முதலிடம் பெறும் மாணவ, மாணவியருக்கு தன்னால் ஆன உதவியை ஆண்டுதோறும் செய்து வருகிறார்.

கடந்த இரு ஆண்டுகளாக தோட்டப்பாளையம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 10ஆம் வகுப்பு தேர்வில் முதலிடம் பெறும் மாணவருக்கு ரூ.5 ஆயிரமும், பிற வகுப்புகளில் முதலிடம் பெறும் மாணவருக்கு தலா ரூ.1000-மும் வழங்கி வந்துள்ளார். இந்நிலையில், விரைவில் வெளிவரவுள்ள 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவில், மாவட்ட அளவில் அரசுப் பள்ளிகளில் முதலிடம் பெறும் மாணவருக்கு பரிசு வழங்குவதற்காக 4 சவரன் தங்கச் சங்கிலியை தயாரித்து வைத்துள்ளார்.

ஊரிசு கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அந்த சங்கிலியை முதன்மைக் கல்வி அலுவலரிடம் காண்பித்து தனது எண்ணத்தை வெளிப்படுத்தினார்.

தனக்கு கிடைக்கும் வருவாயில் சரிபாதியை சேமித்து நன்றாக பயிலும் மாணவ, மாணவியருக்கு உதவி செய்யும் வழக்கத்தை தனது இறுதிகாலம் வரை தொடர முடிவு செய்துள்ளதாக கூறும் இவர், தன்னால் படிக்க முடியாமல் போனதை இப்போதும் நினைத்து வருந்துகிறார்.

Ad Code

Responsive Advertisement