Ad Code

Responsive Advertisement

கோடை விடுமுறைக்கு சம்பளம் இல்லை!; பகுதி நேர ஆசிரியர்கள் கவலை!!

பகுதி நேர ஆசிரியர்களுக்கு, பள்ளி விடுமுறை மாதமான மே மாதத்தில் சம்பளம் வழங்கப்படுவதில்லை என ஆசிரியர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
தமிழகம் முழுவதும், அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் கீழ், பள்ளிகளில் 16 ஆயிரத்து 582 பகுதி நேர ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு, 5000 ரூபாய் தொகுப்பூதியமாக வழங்கப்பட்டு வருகிறது.அரசு வேலை என்பதால், பணி நிரந்தரம் செய்யப்படும் என்ற நம்பிக்கையில் குறைந்த ஊதியமாக இருப்பினும் தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர். வாரத்துக்கு மூன்று நாட்கள், பள்ளிகளில் கற்பிக்கும் பணியில் ஈடுபடவேண்டும் என்பதால், தனியார் பள்ளிகளில் முழு நேரமாகவும், பகுதி நேரமாகவும் பணி வாய்ப்பு கிடைப்பதில்லை.
பகுதிநேர ஆசிரியர்களுக்கு, அரையாண்டு, காலாண்டு விடுமுறையின்போது ஊதியம் வழங்கப்படாமல் இருந்தது. ஆனால், தேர்வுகளுக்கு முன்பு கூடுதல் பணிகளுக்கு ஆசிரியர்களை பயன்படுத்திக்கொண்டு, முழு ஊதியத்தையும் வழங்க பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியது.ஆனால், மூன்று ஆண்டுகளாகியும் மே மாதத்தில், கோடை விடுமுறை என்பதால் ஊதியம் வழங்கப்படுவதில்லை. இதனால், ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சக ஆசிரியர்களை போன்று இவர்களுக்கும், மே மாத ஊதியத்தை வழங்க அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு கலை ஆசிரியர்கள் சங்க மாநிலத்தலைவர் ராஜ்குமார் கூறுகையில்,''பகுதி நேர ஆசிரியர்கள் எந்நேரத்திலும், பணியிலிருந்து நீக்கப்படலாம் என்ற அச்சத்தில் தான் பணியாற்றி வருகின்றனர். பகுதி நேரம் என்றாலும், பல இடங்களில் தலைமையாசிரியர்களின் வற்புறுத்தலால் பள்ளிகளில் பல்வேறு வேலைகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர். மே மாதத்தில், ஊதியம் வழங்கப்படாமல் இருப்பதால், ஆசிரியர்கள் வெகுவாக பாதிக்கப்படுகின்றனர். சக ஆசிரியர்களை போன்று, பகுதிநேர ஆசிரியர்களுக்கும் மே மாதத்தில், ஊதியம் வழங்க வேண்டும்,'' என்றார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement