Ad Code

Responsive Advertisement

தனியார் பள்ளிகளில் இட ஒதுக்கீடு: விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் 15 நாள்களாக நீட்டிப்பு

இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, தனியார் பள்ளிகளில் ஏழை மற்றும் பின்தங்கிய மாணவர்களுக்கான 25 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை 15 நாள்களாக நீட்டிக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக ஏ.நாராயணன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனுவிவரம்:இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009-ன் படியும், உச்சநீதிமன்ற உத்தரவுப்படியும் தனியார் பள்ளிகளில் அறிமுக வகுப்புகளில் உள்ள இடங்களில் 25சதவீத இடங்கள் ஏழை மாணவர்களுக்கு ஒதுக்க வேண்டும்.கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 1-ஆம் தேதி அரசு ஒரு ஆணை வெளியிட்டது. அதில், தனியார் பள்ளிகளில் ஒதுக்கப்பட்டுள்ள 25 சதவீத இடத்துக்கு விண்ணப்பிக்கும் பெற்றோர்கள் ஆண்டுதோறும் மே மாதம் 3 முதல் 9-ஆம் தேதி வரை, காலை 9 முதல் மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டது.இந்த ஏழு நாள்களில், இரண்டு நாள்கள் வார இறுதியாக அமைந்துவிடுகின்றன. மீதம் உள்ள 5 நாள்களில் பின்தங்கியுள்ள, படிப்பறிவில்லாத பெற்றோர்கள் எவ்வாறு விண்ணப்பிக்க முடியும்?எனவே, தனியார் பள்ளிகளில் ஒதுக்கப்பட்டுள்ள 25 சதவீத இடத்துக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரப்பட்டது.இந்த மனு தலைமை நீதிபதி (பொறுப்பு) சதீஷ்குமார் அக்னிஹோத்ரி, நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் அடங்கிய முதல் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

விசாரணைக்குப் பிறகு நீதிபதிகள் புதன்கிழமை (ஏப்.16) பிறப்பித்த உத்தரவு:தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கான இடஒதுக்கீட்டில் விண்ணப்பிப்பதற்காக நிர்ணயிக்கப்பட்டுள்ள கால அட்டவணை தாற்காலிகமானது என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆண்டுதோறும் ஒரே கால அட்டவணை நிர்ணயிக்கப்பட்டால்தான் இந்த ஒதுக்கீட்டில் விண்ணப்பிப்பது குறித்து பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படும். கல்வி உரிமைச் சட்டம் இயற்றப்பட்டதே, கல்வி அறிவில்லாத பின்தங்கிய ஏழை பெற்றோர்களின் குழந்தைகளுக்கு கல்வி வழங்குவதற்காகத்தான்.இதற்காக விண்ணப்பிப்பதற்கு வழங்கப்பட்டுள்ள கால அவகாசம் குறைவு என மனுதாரர் தரப்பில் கூறியது சரிதான்.

அதனால் இந்த கால அவகாசத்தை 15 நாள்களாக நீட்டிக்கவேண்டும் என கருதுகிறோம்.எனவே, மே 3-ஆம் தேதி முதல் 18-ஆம் தேதி வரை இந்த இடஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை தமிழக அரசு நீட்டிக்க வேண்டும். இதற்கான தகுந்த உத்தரவை தமிழக அரசு பிறப்பிக்க வேண்டும். மேலும், இடஒதுக்கீட்டின் கீழ் 25 சதவீத இடங்களை நிரப்புவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுக்க வேண்டும் என உத்தரவில் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement