Ad Code

Responsive Advertisement

காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியீடு.

நாடாளுமன்ற தேர்தலுக்கான, காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. டெல்லியில் காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 
பிரதமர் மன்மோகன்சிங், கட்சித் தலைவர் சோனியா காந்தி, கட்சியின்துணைத் தலைவர் ராகுல்காந்தி ஆகியோர் கூட்டாக, தேர்தல் அறிக்கையை வெளியிட்டனர்.காங்கிரசின் 50 பக்க தேர்தல் அறிக்கையில், கல்வி, சுகாதாரம், வெளியுறவு என்பன உள்ளிட்ட 21 தலைப்புகளில் வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளன. நாட்டின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வரும் ஆண்டுகளில் பல ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்படும் என்று உறுதியளிக்கப்பட்டுள்ளது.பொருளாதார வளர்ச்சியின் பலன் சமூகத்தின் அனைத்துப் பிரிவினரையும் சென்றடைவதையே காங்கிரஸ் நோக்கமாகக் கொண்டிருப்பதாக பிரதமர் மன்மோகன்சிங் தெரிவித்தார்.

சுகாதாரத்திற்கு முக்கியத்துவம்

நாட்டு மக்களின் சுகாதாரம் மற்றும் மருத்துவத்திற்கு காங்கிரஸ் முக்கியத்துவம் அளித்து வருவதாக, அக்கட்சியின் தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார். டெல்லியில் தேர்தல் அறிக்கையை வெளியிட்டு பேசும்போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

ஏழைகளின் முன்னேற்றமே முக்கியம்

இந்தியாவில் வாழும் ஏழை மக்களை உயர்த்தினால் மட்டுமே நாட்டை முன்னேற்ற முடியும்என காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். காங்கிரஸ் தலைமையிலான அரசு ஏழைகளின் முன்னேற்றத்துக்கு பாடுபடுவதாக கூறிய அவர், பாரதிய ஜனதாவுக்கு இது குறித்து புரிதல் இல்லை எனவும் விமர்சித்தார்.ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருந்து வெளியேறிய கட்சிகளால் வெற்றி வாய்ப்பு பாதிக்கப்பட்டுள்ளதாக ஊடகங்கள்தான் ஆருடம் கூறுவதாக காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார்.அதேவேளையில், தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்தும் பல கட்சிகள் விலகியுள்ளதை பற்றி பத்திரிக்கைகள் விமர்சிக்காமல் மெளனமாக இருப்பது ஏன்? என்றும் ராகுல்காந்தி வினா எழுப்பியுள்ளார்.

சில முக்கிய அம்சங்கள்..

அனைவருக்கும் மருத்துவம் மற்றும் வீடில்லா ஏழைகளுக்கு வீடுகள் கிடைக்க வழிவகை செய்யப்படும் என்பன உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.பத்து கோடி புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கவும், நாட்டின் பொருளாதார வளர்ச்சி மீண்டும் 8 சதவிகித்திற்கு கொண்டுவருவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்உறுதியளிக்கப்பட்டுள்ளது.மருத்துவத்துறையில் 60 லட்சம் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், பொது சுகாதாரம் குறித்த மூன்று வருட டிப்ளமோ படிப்பு அறிமுகப்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.மகளிர் இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்படும் என்றும், மீனவர் நலனுக்காக மீன்வளத்துறை அமைச்சகம் ஏற்படுத்தப்படும் என்றும் உறுதியளிக்கப்பட்டுள்ளது. கிராமப்புறங்களில் குடிநீர் வசதி கிடைப்பதற்கு வழி வகை செய்யப்படும் என்றும், ஊராட்சிகளுக்கான நிதி அதிகரிக்கப்படும் என்றும், நிலம் தொடர்பான அத்தனை ஆவணங்களும் கணினிமயமாக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.ஊழலை ஒழிக்கும் வகையிலான மூன்று மசோதாக்கள் கொண்டுவரப்படும் எனவும் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் உள்ள தமிழ் மக்களின் வாழ்வை மேம்படுத்தவும், மரியாதையான முறையில் நடத்தப்படவும், சாத்தியமுள்ள அனைத்து விதமான மனிதாபிமான மற்றும் வளர்ச்சிக்கான உதவிகளை இந்தியா செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக ராணுவம் செய்ததாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் பற்றிய விசாரணையை குறுகிய காலத்தில் முடிக்க அழுத்தம் கொடுக்கப்படும் என்று காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் உறுதியளிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement