Ad Code

Responsive Advertisement

பி.ஏ, எம்.ஏ. படிப்பில் வெவ்வேறு பாடத்தை எடுத்து படித்தவருக்கு பதவி உயர்வில் முன்னுரிமை வழங்கியதை எதிர்த்து வழக்கு பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குநருக்கு ஐகோர்ட்டு உத்தரவு

பி.ஏ, எம்.ஏ படிப்பில் வெவ்வேறு பாடத்தை எடுத்து படித்தவர்களுக்கு முதுகலை பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வில் முன்னுரிமை வழங்கியதை எதிர்த்து தொடர்ந்த வழக்கில் பள்ளிக்கல்வித்துறை
இணை இயக்குனர் பதில் அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
பதவி உயர்வு
திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியான என்.எஸ்.வி.வி. ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆங்கில பட்டதாரி ஆசிரியராக பணியாற்றி வருபவர் ராஜேஷ்கண்ணா. இவர், மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறி இருப்பதாவது:–நான், ஆங்கில பாடத்தில் பி.ஏ முடித்து விட்டு எம்.ஏ படித்தேன். அதன்பின்பு, பி.எட் முடித்தேன். என்னுடன் ஸ்ரீகாந்த் என்பவர் தமிழ் பட்டதாரி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். அவர், பி.ஏ தமிழ் படித்த போது இரு பட்டங்களை பெற்றுக்கொள்ளும் திட்டத்தின் கீழ் பி.ஏ ஆங்கில பட்டமும் பெற்றுள்ளார். அதன்பின்பு, எம்.ஏ ஆங்கிலம் படித்துள்ளார். இந்த நிலையில் ஸ்ரீகாந்துக்கு, 3.10.2013 அன்று ஆங்கில முதுகலை பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு வழங்கி பள்ளி நிர்வாகம் உத்தரவிட்டது.

நியாயமற்றது

இந்த பதவி உயர்வுக்கு அங்கீகாரம் அளிக்க மாவட்ட தொடக்க கல்வி அதிகாரிக்கு பள்ளிநிர்வாகம் விண்ணப்பித்துள்ளது. ஒரே பாடத்தை எடுத்து பி.ஏ, எம்.ஏ படித்தவர்களுக்கு பதவி உயர்வில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று அரசாணை உள்ளது. இதுபோன்ற சூழ்நிலையில், தமிழ் பாடத்தில் பி.ஏ படித்து விட்டு ஆங்கில பாடத்தில் எம்.ஏ படித்தவருக்கு பதவி உயர்வில் முன்னுரிமை அளிப்பது நியாயமற்றது.எனக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குனரிடம் மனு கொடுத்தேன். ஆனால், அவர் எனது கோரிக்கையை 27.2.2014 அன்று நிராகரித்து உத்தரவிட்டார். இந்த உத்தரவை ரத்து செய்து விட்டு, எனக்கு ஆங்கில முதுகலை பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு வழங்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

நோட்டீசு

இந்த மனு நீதிபதி ரவிச்சந்திரபாபு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல் ஹேமாகார்த்திகேயன் ஆஜராகி வாதாடினார்.மனுவை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கு சம்பந்தமாக பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குனர், திண்டுக்கல் மாவட்ட தொடக்க கல்வி அதிகாரி ஆகியோர் பதில் அளிக்க நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement