Ad Code

Responsive Advertisement

''TUTION FEES - க்கும் GST !" - குமுறும் பெற்றோர்

இந்தியா முழுக்க மக்கள் மனங்களில் பற்றி எரிகிறது ஜிஎஸ்டி. ஆனால், 'ஆடம்பரச் செலவுகள் செய்தால் மட்டும்தான் ஜிஎஸ்டி கையைக் கடிக்கும், மற்றபடி எளிய வாழ்க்கைக்கு எந்த பாதகமும் இல்லை' என்று அரசு தரப்பில் மீண்டும் மீண்டும் சொல்லப்பட்டது. என்றாலும், டீக்கடையிலிருந்து இளநீர் கடை வரை ஜிஎஸ்டியை காரணம் சொல்லி வழக்கமான கட்டணத்திலிருந்து குறிப்பிட்ட சதவிகிதத்தை உயர்த்திவிட்டனர். இந்தப் பட்டியிலில் குழந்தைகளின் ட்யூஷன் ஃபீஸும் தப்பவில்லை. 

குழந்தைகள் வீட்டுப்பாடங்களை முடிக்கவும், பொதுத் தேர்வுக்குப் படிக்கும் மாணவர்களும், அதைத் தொடரும் போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகவும் மாணவர்களும் தனியார் ட்யூசன் சென்டர்களை அணுகுகின்றனர். இங்கு கட்டணமாக அதிகபட்சம் ஒரு பாடத்துக்கு ரூபாய் 25,000 வரை செலுத்துகின்றனர். ஆனால் ட்யூஷன் சென்டர்களுக்கு 18% ஜிஎஸ்டி என்ற அறிவிப்பால், இனி ட்யூஷன் கட்டணமும் அதிகரிக்கும் பதற்றம் பெற்றோர் மனங்களில்.

மாணவர்களுக்கு மருத்துவம் மற்றும் பொறியியல் சார்ந்த படிப்புகளுக்கான போட்டித் தேர்வுப் பயிற்சிகள் கொடுத்துவரும் சென்னை, 'ரீச் அகாடமி' மையத்தில் பணியாற்றும் தமிழரசன் இது குறித்து கூறுகையில், ''தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் எங்கள் பயிற்சி மையக் கிளைகள் செயல்பட்டு வருகின்றன. இந்திய அளவில் நடத்தப்படும் போட்டித் தேர்வுகளுக்கு மாணவர்களைத் தயார்படுத்தும் பயிற்சிகளை நாங்கள் வழங்குகிறோம். வழக்கமாக சர்வீஸ் டேக்ஸ் என்ற பெயரில் 12%  வரை அரசுக்கு வரியாக செலுத்தினோம். இப்போது அரசுக்கு ஜிஎஸ்டி ஆக 18% வரை என்கிற நிலையில், அந்த வரியை மாணவர்களிடமே பெறவேண்டிய சூழலில் இருக்கிறோம்'' என்கிறார் தமிழரசன். 

மதுரையைச் சேர்ந்த குளோரி, தற்போது மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் படிக்கும் தன் மகனை கடந்தாண்டு ப்ளஸ் டூ தேர்வுக்காக ட்யூஷன் அனுப்பியவர்.  ''என் மகன் ப்ளஸ் டூ படிச்சப்போ கணிதப் ஜிஎஸ்டிபாடத்துக்கு மட்டும் ட்யூஷன்ல சேர்த்தேன். ஆண்டுக் கட்டணமா ரூபாய் 25 ஆயிரத்தை சிங்கிள் பேமென்ட்டா கொடுத்தேன். ஆனா அந்த டீச்சர் சொல்லிக்கொடுத்தது புரியலைன்னு சொன்னதால, வேற ஒரு டீச்சர்கிட்ட மறுபடியும் ரூபாய் 15,000 கட்டி சேர்த்துவிட்டேன்.  குழந்தைகள் எப்படியாவது படிக்கணும்னு நினைச்சுதான் இதெல்லாம் செய்றோம். ஆனா, இதுல ஜிஎஸ்டியும் சேர்ந்துட்டா பெற்றோருக்கு இன்னும் நிதி நெருக்கடி ஏற்படும்'' என்றார். 

மதுரையைச் சேர்ந்த ஜெயா தனது இரண்டு மகன்களையும் ஐசிஎஸ்இ சிலபஸ் பள்ளியில் படிக்க வைக்கிறார். ''ட்யூஷன் கட்டணமாக மகன்கள் ரெண்டு பேருக்கும் சேர்த்து மாசம் ரூ.5 ஆயிரம் வரை செலவளிக்கிறோம். இது கிட்டத்தட்ட பள்ளிக் கட்டணத்துக்கு சமமா வந்துடுது. இதுல ஜிஎஸ்டி 18% சேர்ந்தா..? எங்களுக்குத் தலை சுத்துது. பெற்றோரின் ஆண்டு வருமானம் 10% மட்டுமே உயருது. ஜிஎஸ்டி என்ற பெயர்ல காய்கறி, உணவுப் பொருள்னு எல்லா விலையும் ஏறிப்போயிருச்சு. இதையெல்லாம் சமாளிக்கவே கஷ்டமா இருக்கு. கல்விக் கட்டணத்தை வரையறை செய்ய அரசு எந்த உறுதியான முயற்சிகளும் எடுக்கிறதில்லை. ஆனா, பெற்றோரின் சுமையை மட்டும் கூட்டுது'' என்கிறார் ஜெயா. 

ட்யூசன் சென்டர் நடத்தி வரும் மதுரையைச் சேர்ந்த ஆசிரியை லட்சுமி கூறுகையில், ''நான் கடந்த அஞ்சு வருஷமா ஐசிஎஸ்இ சிலபஸ் மாணவர்களுக்குக் கணிதப் பாட ட்யூஷன் வகுப்புகள் எடுக்கிறேன். என்னோட ஆண்டு வருமானம் 20 லட்சம்.  ஜிஎஸ்டி வருமான வரம்பு என்னைக் கட்டுப்படுத்தாது. ஆண்டுக்கு 25 லட்சம் ரூபாய்க்கு மேல சம்பாதிக்கிறவங்கதான் ஜி.எஸ்.டி. கட்டணம் செலுத்தனும். ட்யூஷனுக்கும் ஜிஎஸ்டி வரி விதிக்கிறது எனக்கு ஆச்சர்யமா இருக்கு. ஒருவேளை அந்தச் சூழல் வந்தா, என் வருமானத்திலிருந்து நான் அதைக் கட்டுவேனே தவிர, ட்யூஷன் கட்டணத்தை அதிகமாக்கி பெற்றோரின் சுமையைக் கூட்டமாட்டேன். என் டீச்சிங்காக என்னைத் தேடி வர்றவங்களை வணிகநோக்கமா நான் அணுகிறதில்லை'' என்கிறார் லட்சுமி.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement