Ad Code

Responsive Advertisement

NEET - தேர்வில் ஓராண்டுக்கு விலக்களிக்க வாய்ப்பு: பொன்.ராதாகிருஷ்ணன்

நீட் நுழைவுத் தேர்வில் ஓராண்டுக்கு விலக்களிக்க வாய்ப்பு அதிகம் உள்ளது என்றார் மத்திய கப்பல், சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறைஅமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்.


திருச்சியில் சனிக்கிழமை நடைபெற்ற பாஜக}வின் மக்களவைத் தொகுதி அமைப்பாளர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் கூட்டத்தில் பங்கேற்க வந்த செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
தமிழக பள்ளிகளில் தகுதி நிறைந்த படிப்பு கற்பிக்கப்படாததால், நீட் தேர்வில் பிற மாநிலத்தவருடன் போட்டியிட முடியாத நிலை உள்ளது. நீட் நுழைவுத் தேர்வுக்கு கால அவகாசம் தேவை என்று தமிழக அரசு வைத்துள்ள கோரிக்கையை கவனத்தில் கொள்ள வேண்டும். மேலும் இந்த விஷயத்தில் ஓராண்டு காலத்துக்கு விலக்கு கொடுத்தாலும் தவறில்லை என்ற கருத்தும் நிலவுகிறது.
கிராமப்புற மாணவர்களுக்கும் மருத்துவப் படிப்பில் வாய்ப்பு தர வேண்டும் என்று மத்திய அரசு நினைக்கிறது. எனவே நீட் தேர்வில் ஓராண்டுக்கு விலக்குஅளிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. விரைவில் இதில் நல்ல முடிவு வரும் என்ற நம்பிக்கை உள்ளது. அதிமுக அணிகள் இணைந்தால் கட்சிக்கு நல்லது. ஆனால், அந்த கட்சியின் பிளவுகள் ஆட்சியைப் பாதிக்கக் கூடாது. ஒன்றுபட்ட சக்தியாக அரசு இருக்க வேண்டும் என்பதே எங்கள் விருப்பமாகும்.
மதிமுக பொதுச் செயலர் வைகோ தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து பின்னர் வெளியே சென்றார். அதன் பின்னர் மத்திய அரசைத் தொடர்ந்து விமர்சித்து வருகிறார். அரசியல் ரீதியாக சில விஷயங்களை விமர்சனம் செய்கின்றனர். அவை அனைத்தும் தவறு என்பதற்கு ஆதாரங்கள் உள்ளன. தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சியின் வளர்ச்சியை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது. பா.ஜ.க. ஆட்சிக்கு வரும் காலம் நெருங்கி கொண்டுள்ளது.
சென்னையில் சிவாஜி சிலையை அவரது குடும்பத்தினரோ, தனி நபர்களோ வைக்கவில்லை. தமிழக அரசுதான் வைத்தது. எனவே, அவரது சிலையை அகற்றியதற்காக பேரவையைக் கூட்டி மன்னிப்பு கேட்க வேண்டும்.

உலகம் போற்றும் கலைஞனை பெற்ற தமிழகமே அவமானப்படுத்துவது பெரும் தலைகுனிவாகும் என்றார் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்.
இதைத் தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்திலும் அமைச்சர் பேசினார். கூட்டத்தில் மாநிலப் பொதுச் செயலர் மோகன்ராஜுலு, மாநிலத் துணைத் தலைவர்கள் கருப்பு முருகானந்தம், சுப்பிரமணியம், பி.டி. அரசகுமார் மற்றும் அமைப்பாளர்கள் பங்கேற்றனர்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement