Ad Code

Responsive Advertisement

"தமிழக மாணவர்களுக்காக முதல்வர் ஏன் உண்ணாவிரதம் இருக்கக் கூடாது?" - பிரின்ஸ் கஜேந்திர பாபு



மாணவர்களின் திறமையைப் பரிசோதிப்பதற்குத்தான் தேர்வுகள் வைக்கப்படுகின்றன. இப்படித் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற மாணவர்களை மீண்டும் சோதனை செய்யும் வகையில் உயர் கல்வி வாய்ப்புகளைப் பெறுவதற்கு நுழைவுத் தேர்வு நடைமுறை அமலுக்கு வந்திருக்கிறது.
பன்னிரண்டாம் வகுப்பில் 1000-க்கும் மேல் மதிப்பெண்கள் வாங்கி இருந்தாலும் கூட, நீட் தேர்வில் போதிய கட் ஆஃப் மதிப்பெண்கள் பெறவில்லை என்பதற்காக தமிழக மாணவர்கள் மருத்துவப் படிப்புகளில் சேர முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.நீட் தேர்வுக்கான கேள்விகள் என்பது சி.பி.எஸ்.இ பாடத்திட்ட அடிப்படையில் இருக்கிறது. எனவே, மாநில பாடத்திட்டத்தில் படித்த தமிழக மாணவர்களுக்கு இந்தத் தேர்வு கடினமாக இருக்கும். எனவே, அவர்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழகத்தில் கோரிக்கைஎழுந்தது.

 இதன் அடிப்படையில் தமிழக அரசு சட்டத்திருத்தம் கொண்டு வந்து மத்திய அரசின் ஒப்புதலுக்காக அனுப்பியது. ஆனால், இந்தச் சட்டத்திருத்தத்துக்கு மத்திய அரசு இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை. அதே நேரத்தில், தமிழக மாணவர்கள் பாதிக்கப்படாத வகையில் நாங்கள் விலக்கு பெற்று விடுவோம் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அடிக்கடி கூறி வந்தார்.எனவே, மாணவர்கள் நம்பிக்கையோடு காத்திருந்தனர். ஆனால், நீட் தேர்வுத் தேதியும் நெருங்கி வந்தது. தமிழக அரசு மீது நம்பிக்கை வைத்து பெரும்பாலான தமிழகமாணவர்கள் நீட் தேர்வு எழுதவில்லை. நீட் தேர்வு எழுதிய தமிழக மாணவர்கள் பெரும் அளவில் தேர்ச்சியும் பெறவில்லை. தேர்ச்சி பெற்ற மாணவர்கள் எல்லோரும் சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தில் தேர்வு எழுதியவர்கள்தான்.இந்தச் சூழலில் தமிழக மாணவர்களைக் காப்பாற்றும் வகையில் மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கையில், மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு 85 சதவிகிதம் இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்ற உத்தரவை தமிழக அரசு பிறப்பித்தது. ஆனால், அதற்கு உயர் நீதிமன்றம் தடை விதித்துவிட்டது.

இந்த நிலையில்தான் தமிழக மாணவர்கள் மருத்துவக் கல்விபடிக்க முடியாமல் திண்டாடுகின்றனர். பாதிக்கப்பட்ட மாணவர்களைக் கொண்ட தமிழ்நாடு மாணவர் இயக்கங்களில் கூட்டமைப்பைச்(COTSO) சேர்ந்தவர்கள் 17-ம் தேதி செய்தியாளர்களிடம் பேசினர். " கடந்த ஆண்டு +2 முடித்த மாணவர்கள் 'நீட்' தேர்வு எழுத வேண்டும் என்று கூறினர். ஆனால், அதில் இருந்து தமிழகத்துக்கு விலக்குஅளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. அதன்படி மத்திய அரசு, தமிழகத்துக்கு விலக்கு அளித்தது.

இதேபோல நமக்கும் நீட் தேர்வில் இருந்து விதிவிலக்கு கிடைக்கும் என்று கடந்த ஆண்டு ப்ளஸ் ஒன் படித்து, இந்த ஆண்டு ப்ளஸ் டூ தேர்வு எழுதிய நாங்கள் எதிர்பார்த்தோம். +2வில் அதிக மதிப்பெண்கள் பெற வேண்டும் என்பதற்காக இரண்டு வருடங்கள் இரவு பகல் பாராது படித்தோம். நீட் தேர்வு கட்டாயம் என்பது கடைசி வரை உறுதி செய்யப்படவில்லை. ஆனால், நாங்கள் எதிர்பார்த்ததற்கு மாறாக இப்போது நீட் தேர்வு கட்டாயம் ஆக்கப்பட்டிருக்கிறது. கட்டாயம் என்று சொன்ன பிறகு எங்களுக்கு படிக்க இரண்டு மாதங்கள் கூட முழுமையாக நேரம் கிடைக்கவில்லை.

மாநிலப் பாடத்திட்டத்தில் படித்த நாங்கள், சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தின் படி அமைந்த கேள்விகளைக் கொண்ட நீட்தேர்வில் எப்படி வெற்றி பெற முடியும். எங்களுடன் படித்த மாணவர்கள் +2 வில் குறைந்த மதிப்பெண்கள் எடுத்தும், நீட் தேர்வில் அதிக மதிபெண்கள் எடுத்ததால் இப்போது, அவர்களுக்கு மருத்துவ கல்வி படிக்க வாய்ப்புக் கிடைத்துள்ளது. தமிழக மாணவர்கள் பாதிக்காதவாறு மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர்.மாணவர்களுக்கு ஆதரவாக களமிறங்கிய பொதுப் பள்ளிகளுக்கான மாநில மேடை அமைப்பின் பொதுச் செயலாளர்பிரின்ஸ் கஜேந்திர பாபு பேசுகையில், "நீட் தேர்வினால் பாதிக்கப்பட்ட மாணவர்களில் ஒரு தரப்பினர் வசதியில்லை அதனால், நீட் தேர்வுக்கான கோச்சிங் கிளாஸுக்கு போக முடியவில்லை என்று சொல்கின்றனர். இன்னொரு தரப்பினர், ஓரளவுக்கு வசதி இருக்கிறது. ஆனால், கோச்சிங் சேர்வதற்கான நேரமில்லை என்று சொல்கின்றனர். இப்போது இருக்கும் மாநில அரசு, எம்.ஜி.ஆரை பின்பற்றுவதாகச் சொல்கிறது. இந்திரா காந்தி காலத்தில் அரிசி தட்டுப்பாடு ஏற்பட்டபோது மத்திய அரசு மாநிலங்களுக்கு அரிசி விநியோகம் செய்தது. அப்போது, தமிழகத்துக்குக் குறைவாக விநியோகம் செய்ததை எதிர்த்து எம்.ஜி.ஆர் உண்ணாவிரதம்இருந்தார்.

காவிரி பிரச்னைகாக முதல்வராக இருந்த ஜெயலலிதா எம்.ஜி.ஆர் சமாதியில் உண்ணாவிரதம் இருந்தார். ஜெயலலிதா கடந்த ஆண்டு தேர்தல் பிரசாரத்தில் பேசும்போது, 'அ.தி.மு.க ஜெயித்தால், நீட் தேர்வு கட்டாயம் தமிழகத்துக்கு வராது. வந்தாலும் தகுந்த சட்டம் அமைத்து அதற்கு தடைக் கோர முடியும்' என்று நம்பிக்கையுடன் கூறியிருந்தார். இப்போது ஆட்சி செய்யும் எடப்பாடி பழனிசாமி, எம்.ஜிஆரையும் ஜெயலலிதாவையும் பின்பற்றுவதாக சொல்கிறார். ஆனால், மாநிலத்தில் இப்போது மிகப் பெரிய பிரச்னையாக இருக்கும் நீட் தேர்வை எதிர்த்து அவர் ஏன் உண்ணாவிரதம் இருக்கவில்லை.

நீட் தேர்வு குறித்து அவர் ஏன் ஒரு வார்த்தைக் கூட பேசாமல் இருக்கிறார்? இங்கு கூடியிருக்கும் மாணவர்கள் முதலமைச்சரை சந்திக்கத் திட்டமிட்டுள்ளனர். முதல்வரை பார்ப்பதற்கு முன்பாக நீட் தேர்வு கட்டாயம் என்பதை கைவிட வலியுறுத்தி மெழுகுவத்தி ஏந்திப் போராட்டம் நடத்த உள்ளனர். கல்லூரிகள், விடுதிகள் என அனைத்து இடங்களிலும் மெழுகுவத்தி ஏற்றி அவர்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும்" என்றார்.

மாணவர்கள் கஷ்டப்பட்டு படித்து +2வில் மதிப்பெண்கள்வாங்கினாலும், இரண்டு மூன்று மாதங்கள் படித்து தேர்ச்சி பெறும் நீட் தேர்வுக்கு மத்திய அரசு முக்கியத்துவம் அளிக்கிறது. தமிழ்நாட்டு மாணவர்களின் நலனுக்காக உரிய சட்டத்திருத்தத்தைக் கொண்டு வர தமிழக அரசு முயற்சிக்க வேண்டும். அப்போதுதான் மாணவர்களின் மருத்துவக் கனவு நனவாகும்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement