Ad Code

Responsive Advertisement

ஆப்ஸ் மூலம் அசத்துகிறார் ‘அர்ப்பணிப்பு ஆசிரியர்’ அரசு பள்ளியில் நடக்குது ஆன்ட்ராய்ட் 4டி பாடம்

‘அரசு பள்ளியா... அடிப்படை வசதிகள் இருக்காது. மாணவர்கள் இருந்தால் ஆசிரியர்கள் இருக்க மாட்டாங்க.. ஆசிரியர்கள் இருந்தால் மாணவர்கள் இருக்க மாட்டாங்கப்பா..’ - என்பது பொதுவான புலம்பல்தான். ஆனால், இருக்கும் வசதிகளோடு, புதுமையை புகுத்தி அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கைக்கு நம்பிக்கை ஊட்டுகின்றனர் சில ஆசிரியர்கள். அவர்களில் ஒருவர்தான்.. ஆசிரியர் செந்தில்நாதன் (36). 


ராமநாதபுரம் மாவட்டம், ஏர்வாடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது 4டி தொழில்நுட்ப பாடம் வாட்ஸப், பேஸ்புக் உள்ளிட்ட வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. ஆசிரியர் செந்தில்நாதனை நேரில் சந்தித்து, கைகுலுக்கி பாராட்டு தெரிவித்தோம். அவரது 4டி தொழில்நுட்ப பாடம் குறித்து பேசினோம். இனி அவரே பேசுவார்... ‘‘அரசு பள்ளிகளிலும் புதுமையை புகுத்தி, மாணவர்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் பாடம் நடத்துவது குறித்து யோசித்தபிறகுதான் இந்த ஐடியா தோன்றியது.

இதற்கு செய்ய வேண்டியது எல்லாம் இதுதான். உங்கள் ஆன்ட்ராய்ட் போனில் ஏர்டிராய்ட் (Airdroid) ஆப்பை கூகுள் பிளே ஸ்டோருக்கு சென்று டவுன்லோடு செய்து கொள்ளவும். அதேநேரம் இன்டர்நெட் இணைப்பு உள்ள கம்ப்யூட்டர் அல்லது லேப்டாப்பில் ஏர்டிராய்ட் வெப்சைட்டை ஓபன் செய்யவும்.

 இப்போது மொபைலில் உள்ள ஏர்டிராய்டிற்கு சென்று, இமெயில் முகவரியை பதிவு செய்யவும். ஆப் இயங்க தொடங்கியதும், மொபைலின் வலது பக்கம் உள்ள பட்டனை அழுத்தினால் கேமரா இயங்கும். இதனை லேப்டாப்பில் உள்ள ஏர்டிராய்ட் வெப்சைட் QR code அருகே கொண்டு செல்லவும். அவ்வளவுதான்... உங்கள் மொபைல் ஸ்கிரீன், லேப்டாப் ஸ்கிரீனில் தெரியும். இனி மொபைலை லேப்டாப் மூலமாக இயக்கலாம். இப்போது ஸ்பேஸ் 4டி (space 4d), அனிமல் 4டி (animal 4d), அனாடமி 4டி (anatomy 4d) போன்ற ஆப்ஸை மொபைலில் டவுன்லோடு செய்யவும். 

பின்னர் மொபைல் கேமராவில் பிஎஸ்எல்வி ராக்கெட், யானை, குரங்கு ஆகியவற்றின் படங்களை எடுக்கவும். இவற்றை லேப்டாப்பில் ஓபன் செய்து, பிற 4டி ஆப்ஸ் மூலமாக இயக்கி, ஆட வைக்கலாம். பாட வைக்கலாம். ராக்கெட்டை அந்தரத்தில் செல்ல வைக்கலாம்.

லேப்டாப்பை, புராஜெக்டரில் இணைப்பு கொடுத்து பெரிய சைஸிலும் யானை, குரங்கு அட்டகாசத்தை காணலாம். இதன்மூலம் பாடம் நடத்தும்போது, மாணவர்கள் மனதில் உற்சாகம் பிறக்கும். நாம் சொல்வதையும் எளிதில் புரிந்து கொள்வார்கள். தலைமையாசிரியர் தமிழரசியின் ஒத்துழைப்பும், ஆதரவும் இதற்கு முக்கிய காரணம்’’ என்று முடித்தார். அரசு பள்ளிகளில் இருக்கும் வசதிகளோடு, மாறுபட்டு யோசித்து அதை செயல்படுத்திய ஆசிரியர் செந்தில்நாதனை தாராளமாக பாராட்டலாமே...!


கருவேலம் வெட்டுங்க... பரிசை வெல்லுங்க...
கருவேல ஒழிப்பு தீவிரமாக இருந்தபோது செந்தில்நாதன், ஒவ்வொரு மாணவரும் 10 கருவேல மரங்களை வெட்டினால் பரிசு தருவதாக கூறியிருக்கிறார். 62 மாணவர்கள், இதனை நிறைவேற்றி பரிசு பெற்றார்களாம். பரிசாக இவர் வழங்குவது பெரும்பாலும் புத்தகங்களைத்தான். 

அதுபோக இறைவணக்கத்தின்போது மாணவர்களுக்கு கடினமான 2 கேள்விகள் கேட்பாராம். சரியாக சொல்பவர்களுக்கும் புத்தகம்தான் பரிசு. மேலும், வாசிப்புத்திறனை வளர்க்க 72 மாணவர்களை அரசு நூலகத்தில் உறுப்பினராகவும் சேர்த்திருக்கிறார்.

தனி(யார்) சீருடை
அரசு பள்ளி சீருடை தனியாக இருந்தாலும், வாரத்தில் 2 நாட்கள் தனியார் பள்ளிகளுக்கு நிகரான சீருடையை மாணவ, மாணவிகள் அணிந்து வருகின்றனர். இதற்காக தலைமையாசிரியை தமிழரசி, பெற்றோர்களுடன் கலந்துபேசி இதற்கான நடவடிக்கையை செய்துள்ளார். மேலும், இப்பள்ளி மாணவர்கள் பலர் தேசிய வருவாய் வழி திறனறி தேர்வில் அதிகளவு வெற்றி பெற்றும் வருகின்றனர்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement