Ad Code

Responsive Advertisement

பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்து சட்டப்பேரவை கூட்டத்தொடரில் அறிவித்திடுக



பகுதிநேர ஆசிரியர்களை பள்ளிக் கல்வித்துறைக்கு மாற்றி, பணிநியமனம் செய்வதற்கான அறிவிப்பை நடைபெறுகின்ற சட்டப்பேரவை கூட்டத்தொடரிலேயே அறிவிக்க வேண்டும் என்றுதமாகா தலைவர் வாசன் வலியுறுத்தியுள்ளார்.


இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''சர்வ சிக்ஷா அபியான் (SSA) - அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 2012 ஆம் ஆண்டில் அரசு நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிக்கூடங்களில் 6 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை 16,549 பகுதிநேர சிறப்பு ஆசிரியர்கள் பணியமர்த்தப்பட்டனர். இதில் 5,904பணியிடங்கள் - தொழிற்கல்விக்கும் (கம்ப்யூட்டர் அப்ளிகேஷன், தையல், தோட்டக்கலை, வாழ்க்கைக் கல்வி, கட்டிடப் பணி), 5,392 பணியிடங்கள் உடற்கல்விக்கும், 5,253 பணியிடங்கள் ஓவியப் பாடத்திற்கும் (கலை கல்வி) ஒதுக்கப்பட்டது.இவ்வாறு பணியமர்த்தப்பட்ட ஆசிரியர்கள் வாரத்தில் 3 அரை நாட்கள் பணி என்ற நியமனத்தில் மாதம் 12 நாட்கள் பணிபுரியும்போது மாதச் சம்பளமாக ரூபாய் 5 ஆயிரம் கொடுக்கப்பட்டது.


பிறகு 2014 ஆம் ஆண்டு முதல் 2 ஆயிரம் ரூபாய் உயர்த்தி 7 ஆயிரம் ரூபாய் ஊதியமாக வழங்கப்பட்டு வந்தது.பகுதிநேர ஆசிரியர்கள் பகுதிநேரம் மட்டுமே பள்ளிக்குச் செல்வதால் சம்பளம் போதுமானதல்ல என்ற நிலையில் கூடுதலாக வேறு பணிக்கு செல்ல முயற்சிக்கும் போது அதுவும் கிடைக்கவில்லை. மிக குறைவான சம்பளம் அவர்களுக்கே பற்றாக்குறையாக இருக்கும்போது அவர்களின் குடும்ப செலவிற்கு மிகவும் சிரமப்படுகிறார்கள்.இச்சூழலில் பகுதிநேர ஆசிரியர்கள் தங்களை பள்ளி கல்வித்துறைக்கு மாற்றி பணிநிரந்தரம் செய்யக் கோரி கடந்த 5 ஆண்டுகளாக மனுக்கள் கொடுத்தும், பல கட்டங்களில் பல ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் நடத்தியும் வந்தனர். ஆனால் இதனையெல்லாம் தமிழக அரசு முக்கியப் பிரச்சினையாக கருதவில்லை என்பது வேதனைக்குரியது.


மாணவ, மாணவிகளுக்கு பயிற்றுவிக்கும் ஆசிரியர்களின் அர்ப்பணிப்பு பணி மிகவும் போற்றுதலுக்குரியது. அப்பேற்பட்டவர்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்காக போதிய ஊதியம் கிடைக்காமல் இருக்கும் போது, அவர்களின் நியாயமானகோரிக்கைகளை ஆளும் ஆட்சியாளர்கள் கவனத்தில் கொள்ளாமல், நிறைவேற்றாமல் காலம் தாழ்த்துவது மிகவும் கண்டிக்கத்தக்கது.இருப்பினும் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு பகுதிநேர ஆசிரியர்கள் தமிழக கல்வித்துறை அமைச்சரை சந்தித்து கோரிக்கையை வலியுறுத்தியபோது, 700 ரூபாய் ஊதிய உயர்வும், பணியிட மாறுதலும் வழங்குவதற்கு கையொப்பம் போட்டுவிட்டேன் என்று தெரிவித்தார்.ஆனால் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற சட்டப்பேரவைகூட்டத்தொடரில் பள்ளி கல்வித்துறை மானிய கோரிக்கையின் போது பகுதிநேர ஆசிரியர்கள் குறித்த அறிவிப்பு வரவில்லை.


இது மிகுந்த ஏமாற்றத்தை அளித்திருக்கிறது. மேலும் மத்திய அரசு பகுதிநேர ஆசிரியர்களுக்கு ஒதுக்கீடு செய்த தொகையை இதுவரை தமிழக அரசு வழங்கவில்லை. இதனை முழுமையாக வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.எனவே தமிழக அரசு பகுதிநேர ஆசிரியர்களை பள்ளி கல்வித்துறைக்கு மாற்றி, பணிநியமனம் செய்வதற்கான அறிவிப்பை நடைபெறுகின்ற சட்டப்பேரவை கூட்டத்தொடரிலேயே அறிவிக்க வேண்டும்'' என்று வாசன் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement