Ad Code

Responsive Advertisement

நீட் தேர்வு முடிவுக்கு தடை விதிக்க வேண்டும்

நீட் தேர்வு முடிவை வெளியிடத் தடை கோரி தொடரப்பட்ட வழக்கில் சிபிஎஸ்இ  மற்றும் மத்திய அரசு பதில் தருமாறு நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

சென்னையைச் சேர்ந்த அபிஷேக் முகமது சார்பில் அவரது தாய் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: எனது மகன் கடந்த 7ம் தேதி நடந்த நீட் தேர்வு எழுதியுள்ளான். நீட் தேர்வில் கேள்விகள் அனைத்தும் சிபிஎஸ்இ  பாடத்திட்டத்தின்கீழ் கேட்கப்பட்டுள்ளது.

முக்கிய மொழிகளில் இந்த தேர்வு நடத்தப்பட்டாலும் ஆங்கில மொழியில் கேட்கப்பட்ட கேள்விகள் முற்றிலும் சிபிஎஸ்இ பாடத்தின்கீழ்தான் கேட்கப்பட்டன. அதே நேரத்தில் தமிழில் கேட்கப்பட்ட பல கேள்விகள் மாநில பாடத்திட்டத்தின்கீழ் கேட்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கேள்விகள் கேட்கப்பட்டதில் முரண்பாடுகள் இருந்துள்ளன. 

எனது மகன் தமிழக அரசின் பாடத்திட்டத்தின்கீழ் பிளஸ் 2 படித்துள்ளான். தமிழ் மொழியில் நீட் தேர்வை எழுதியுள்ளான். மாநில பாடத்திட்டங்கள் சிபிஎஸ்இ  பாடத்திட்டத்திற்கு இணையாக தரம் உயர்த்தப்படாதவரை மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்கள் நீட் தேர்வை சரியாக எழுத முடியாது. இதுபோன்ற குறைபாடுகளும், முரண்பாடுகளும் இருக்கும் நிலையில் மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களால் நீட் தேர்வில் தேர்ச்சி பெறுவது கடினமாகும். 

ஒரே சீரான பாடத்திட்டம்வரும் வரை நீட் தேர்வை நடத்துவதால் மாநில பாடத்திட்டத்தில் படித்தவர்களுக்கு எந்த பயனும் ஏற்படப்போவதில்லை. எனவே, கடந்த 7ம் தேதி நடந்த நீட் தேர்வை ரத்து செய்து உத்தரவிட வேண்டும். மேலும், ஒரே சீரான பாடத்திட்டத்தின்கீழ் நீட் தேர்வை நடத்துமாறு சிபிஎஸ்இக்கு உத்தரவிட வேண்டும். கடந்த 7ம் தேதி நடந்த நீட் தேர்வின் முடிவை வெளியிடத் தடை விதிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. 

இந்த மனு நீதிபதி ஆர்.மகாதேவன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, இந்த மனுவுக்கு பதில் தருமாறு சிபிஎஸ்இ மற்றும் மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு விசாரணையை (நாைள) 24ம் தேதிக்குத் தள்ளிவைத்தார். 

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement