Ad Code

Responsive Advertisement

மாணவர்களுக்கு தொடர்ந்து 3 ஆண்டுகள் பொதுத்தேர்வுகள் சரியா - ஓர் அலசல்!



பொதுத்தேர்வு என்றாலே மாணவர்களுக்கு மட்டுமல்ல அவர்களின் பெற்றோருக்கும் அக்னி பரீட்சைதான். 10 மற்றும் 12 வகுப்பு பொதுத்தேர்வுகள் முடிவதற்குள் உறவினர் வீட்டு விசேஷங்கள், திருவிழா.. என எதற்கு பிள்ளைகளை அனுப்புவதில்லை. மாணவர்களும் நேரம் காலம் பார்க்காமல் அதிக நேரம் படிப்பில் மூழ்கிக் கிடப்பர். இந்த நிலையில் 10, 11 மற்றும் 12 ஆகிய மூன்று வகுப்புகளுக்கும் இனி பொதுத்தேர்வுகள் நடத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இது மாணவர்களுக்கு சாதகமா, பாதகமா என ஆசிரியர்களிடமும் கல்வியாளர் பேரா. பிரபா கல்விமணியிடமும் கேட்டோம்.

 மு.சிவகுருநாதன், ஆசிரியர், அரசு மேல்நிலைப் பள்ளி, காட்டூர், திருவாரூர் மாவட்டம்.

10-ம் வகுப்பில் பொதுத்தேர்வு எழுதி வரும் மாணவருக்கு 11 மற்றும் 12 வகுப்புகளுக்கு தொடர்ந்து பொதுத்தேர்வு வைப்பது என்பது மாணவர்களுக்கு நிச்சயம் சுமையாகத்தான் இருக்கும். இதை செமஸ்டர் முறையில் என அறிவித்தால் அந்தச் சுமை குறையும். ஒருவேளை செமஸ்டர் முறை இல்லையெனில் 11 வகுப்பில் 100 மதிப்பெண்களுக்கும் 12 வகுப்பில் 100 மதிப்பெண்களுக்கும் தேர்வு வைக்கலாம். அப்படி வைத்து இரண்டையும் கூட்டி மதிப்பிடலாம்.

11 -ம் வகுப்பு பாடங்களை நடத்தாமல் இரண்டு ஆண்டுகளுக்கு 12 வகுப்புப் பாடங்களை நடத்துகிறார்கள் என்பதால் பொதுத்தேர்வு முறை கொண்டுவந்தால் இதே சிக்கல் 9-ம் வகுப்பிலும் இருக்கத்தானே செய்கிறது. அப்படியெனில் அதற்கும் பொதுத் தேர்வு வைப்பதுதான் தீர்வாகுமா... அதைவிட, பள்ளிகளில் பாடங்கள் நடத்தப்படுவதை கண்காணிக்கும் விதத்தை முறையாக நடைமுறைப் படுத்துவதே இதற்கு ஒரு தீர்வாக அமையும்.

து.விஜயலட்சுமி, அரசுமேல்நிலைப் பள்ளி, கண்ணமங்கலம், வேலூர்.

11-ம் வகுப்பு பொதுத்தேர்வு வைப்பதை நான் வரவேற்கிறேன். பப்ளிக் எக்ஸாம்.. பப்ளிக் எக்ஸாம் என மாணவர்களைப் பயமுறுத்தவே கூடாது. காலாண்டு, அரையாண்டு தேர்வுகள் போல இதுவும் ஒன்று என தேர்வுப் பயத்தைப் போக்கவே நான் செய்வேன். மாவட்ட அளவில் வினாத்தாள் தயாராவதற்குப் பதில் மாநில அளவில் தயாரித்து வரும் அவ்வளவுதானே. எங்கு தயாரிக்கப்பட்டாலும் 100 அல்லது 200 மதிப்பெண்களுக்குத்தானே மாணவர்கள் விடை எழுதப் போகிறார்கள். அதனால் 11-ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு என்பது பப்ளிக் எக்ஸாம் பயத்தைப் போக்க உதவும்.

மாணவர்களுக்குச் சுமை என்று சொல்வதையும் ஏற்பதற்கு இல்லை. வழக்கமாக சில தனியார் பள்ளிகளில் 11-ம் வகுப்பு தொடங்கிய சில நாட்களிலேயே வினாக்கள் அடங்கிய சி.டியைத் தந்து அதற்குப் பதில் எழுதவே பயிற்சியளிக்கிறார்கள். மாணவர்கள் 11-ம் வகுப்பு பாடங்களைப் பார்க்கக்கூட முடியவில்லை. அதையெல்லாம் இந்த முறை சரிசெய்யும். உண்மையாக சொன்னால் பாடம் நடத்தாத ஆசிரியர்களுக்கும் நடத்த விரும்பாத பள்ளிகளுக்கும்தான் 11-ம் வகுப்பில் பொதுத்தேர்வு வைப்பது சுமையாக இருக்கும்.



சுகிர்தராணி, ஆசிரியர் ராணிப்பேட்டை.

மாணவர்களுக்கு தேர்வு என்பதே பெரிய சுமைதான். அதும் 10, 11 மற்றும் 12 வகுப்புகளுக்குத் தொடர்ந்து மூன்று வருடங்கள் அரசுப் பொதுத் தேர்வு எனும்போது அவர்களின் மனநிலை என்னவாகும் என்பதை யோசிக்கவே அச்சமாக இருக்கிறது! அரசுப் பள்ளிகளில் முறையாக 11-ம் வகுப்புப் பாடங்கள் நடத்தப்படுகின்றன. ஆனால், பல தனியார்ப் பள்ளிகளில் 11-ம் வகுப்புத் தொடங்குபோது 12-ம் வகுப்புப் பாடங்கள் நடத்தப்படுகின்றன. இதைத் தவிர்க்கவும் அந்தந்த வகுப்புகளில் அந்தந்த வகுப்புக்கு உரிய பாடங்களை நடத்தவும் கடுமையான நடவடிக்கை மற்றும் கண்காணிப்பை அரசு எடுக்க வேண்டும். அதை விடுத்து பதினொன்றிலும் பொதுத் தேர்வு என அறிவிப்பது சரிதானா என்ற கேள்வி எழுகிறது. அரசும், கல்வி அமைச்சரும்,கல்வித்துறை அதிகாரிகளும் மாணாக்கருடன் கலந்தாய்வு செய்து முடிவெடுக்க வேண்டும். முடிவெடுப்பது அரசு என்றாலும் தேர்வெழுதப்போவது மாணாக்கர்தாம். அவர்கள் கருத்தை அறிய கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவர்களின் சுமையைக் குறைக்கும் விதத்தில் அந்த நடவடிக்கை இருந்தால் மகிழ்ச்சியே!

ஶ்ரீ.திலீப், ஆசிரியர், அரசு மேல்நிலைப் பள்ளி, சத்தியமங்கலம், விழுப்புரம்.

11-ம் வகுப்புக்குப் பொதுத்தேர்வு என்பதை நான் முழு மனதாக வரவேற்கிறேன். இதனால் 11-ம் வகுப்புப் பாடங்கள் கவனம் பெறும். 11-ம் வகுப்பு பாடங்களை ஒரு சில மாதங்கள் மட்டுமே நடத்திவிட்டு 12-ம் வகுப்பு பாடங்களை நடத்தும் பல பள்ளிகளில் பெரிய மாற்றத்தைக் கொண்டு வரும். மாணவர்களுக்கும் அந்த பாடங்களைப் படிக்கும் வாய்ப்பு கிடைக்கும். 11 மற்றும் 12 வகுப்பு பாடங்களே அடுத்தடுத்து வரும் நீட் போன்ற நுழைவுத் தேர்வுகளுக்கு அடிப்படை. அதனால், அவற்றைப் படிப்பது அவசியமே. இதில் நடைமுறைச் சிக்கல் ஒன்று இருப்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். வழக்கமாக பொதுத்தேர்வு என்றாலே ஒவ்வோர் ஆண்டும் பிப்ரவரி மாதம் தொடங்கியதும் ஆசிரியர்களுக்கு பரபரப்பான வேலைகள் காத்திருக்கும். அதனால் மற்ற வகுப்பு பாடங்களில் கவனம் எடுத்து கற்றுக்கொடுப்பதில் சுணக்கம் ஏற்படும். அந்தப் பள்ளி தேர்வு மையம் என்றால் இன்னும் சிக்கல்தான். அதனால், மற்ற வகுப்பு மாணவர்களின் கற்றல் பாதிக்கப்படாமல் இந்தத் தேர்வை சாத்தியப்படுத்த வேண்டும். மூன்று வருடங்கள் தொடர்ந்து கவனம் குவித்து படிப்பது மாணவர்களுக்கு சுமைதான் என்றாலும் நுழைவுத் தேர்வுகளை எளிதாக எதிர்கொள்ள இந்தச் சிரமம் தேவை எனக் கொண்டால் சுமையாக தோன்றாது.

பேராசிரியர் பிரபா கல்விமணி, கல்வியாளர்.

மாணவர்களை மதிப்பெண்கள் பெற வைக்க வேண்டும் என்கிற ஒரே நோக்கில் பாடங்களை நடத்துகின்றனர் பல பள்ளிகள். அதில் அநேகம் தனியார் பள்ளிகள். அதனால் 12-ம் வகுப்பு பாடத்தை இரண்டாண்டுகளும் நடத்துகின்றனர். அதனால் 11-ம் வகுப்புப் பாடங்களை மாணவர்கள் படிக்க நினைத்தாலும் அதற்கான வாய்ப்பு இல்லாமல் போயிவிடுகிறது. இதனால் அகில இந்திய தேர்வுகளில் தமிழக மாணவர்கள் தேர்ச்சி பெறுவதில் பெரும் சிக்கல் இருக்கிறது. அவையெல்லாம் கலைவதற்கு இந்த முறை நமக்கு உதவும் என்றே நம்புகிறேன்.

தொடர்ந்து மூன்று ஆண்டுகள் பொதுத்தேர்வு என்பது சரி... சுமை... என இரண்டு விதமான கருத்துகளை ஆசிரியர்கள் கூறினாலும் அடிப்படையில் அவர்கள் மாணவர்களின் நலனையே முன்னிறுத்துகிறார்கள். எனவே, மாணவர்களின் கல்வித்திறனை உயர்த்தும் நடவடிக்கைகளில் அவர்களுக்கு சுமை ஏற்றாமல் இருப்பதும் கடமை. அதை கல்வித்துறை அதிகாரிகள் கவனத்தில் கொள்வார்கள் என நம்புவோம்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement