Ad Code

Responsive Advertisement

சீருடையுடன் பள்ளி சென்று கலக்கும் மஹா., பாட்டிகள்

தானே: மஹாராஷ்டிர மாநிலம், தானேயில் உள்ள ஒரு பள்ளியில், 60 வயதுக்கு மேற்பட்ட பாட்டிகள், சீருடை அணிந்து, மற்ற மாணவர்களை போன்று தினமும் பள்ளி சென்று வருவது, அப்பகுதி மக்களிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது.


மஹாராஷ்டிர மாநிலத்தில், முதல்வர், தேவேந்திர பட்னவிஸ் தலைமையிலான பா.ஜ., - சிவசேனா கூட்டணி ஆட்சி நடக்கிறது. தானேக்கு அருகில் உள்ள, பங்கனே மாவட்ட நிர்வாகத்தின் கீழ் இயங்கும் தொடக்கப் பள்ளியில், யோகேந்திர பங்கட், 45, என்பவர், ஆசிரியராக பணிபுரிகிறார். இந்த மாவட்டத்தில் உள்ள கிராமத்து மக்களின் முக்கிய தொழில் விவசாயம்.
இங்கு வசிக்கும் படிப்பறிவில்லாத வயதான பெண்களுக்கு கல்வியறிவு வழங்குவதற்காக, பங்கட் ஒரு தொடக்கப் பள்ளியை துவக்கி நடத்தி வருகிறார். இந்தப் பள்ளியில், 30 பாட்டிகள் படிக்கின்றனர். இவர்களுக்கு, இளஞ்சிவப்பு நிற சீருடை சேலை, ஸ்கூல் பேக், சிலேட்டு, பல்பம் போன்ற அத்தியாவசிய பொருட்கள் மற்றும் பள்ளிக்கு தேவையான கரும்பலகையை, ஒரு தனியார் அறக்கட்டளை வழங்கியுள்ளது. தினமும், காலையில் பள்ளி மாணவர்களைப் போன்று சீருடை அணிந்து, முதுகில் ஸ்கூல் பை சுமந்து, பள்ளிக்கு வரும் பாட்டிகள், இறை வணக்கம் முடித்து, வகுப்புக்கு செல்கின்றனர்.இவர்களுக்கு எண் கணிதம், மராத்தி மொழி எழுத்துக்கள் எழுதும் பயிற்சி, நர்சரி பாடல்கள் உள்ளிட்ட அடிப்படை கல்வி கற்றுத் தரப்படுகிறது. இப்பள்ளியில், 60 முதல், 90 வயதுள்ள பாட்டிகள் சுறுசுறுப்பாக படித்து வருகின்றனர்.
பள்ளியில் படிக்கும், காந்தா பாட்டி கூறுகையில், ''துவக்கத்தில் பள்ளி செல்வதற்கு வெட்கமாகவும், தயக்கமாகவும் இருந்தது. என்னை விட வயதில் மூத்தவர்களும் பள்ளிக்கு செல்வதை அறிந்ததும், நானும் செல்லத் துவங்கினேன். தற்போது, எனக்கு மராத்தி மொழியில் நன்கு எழுதப் படிக்க தெரியும். இதனால் தன்னிறைவை உணர்கிறேன்,'' என்றார்.


Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement