Ad Code

Responsive Advertisement

அலங்காநல்லூர், பாலமேட்டில் ஜல்லிக்கட்டு ஒத்திவைப்பு: முதல்வரை சந்தித்த பிறகு தேதியை அறிவிக்க முடிவு

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர், பாலமேடு ஆகிய இடங்களில் பிப்.1 மற்றும் பிப்.2ஆம் தேதிகளில் நடைபெற இருந்த ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. தமிழக முதல்வரை நேரில் சந்தித்த பிறகு, மறுதேதியை அறிவிப்பது என கிராமப் பொதுமக்கள் முடிவு செய்துள்ளனர்.


மதுரை மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையன்று அவனியாபுரத்திலும், மாட்டுப்பொங்கலன்று பாலமேட்டிலும், அதற்கு மறுநாள் அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு நடைபெறுவது வழக்கம். உச்ச நீதிமன்ற தடை காரணமாக, கடந்த 2 ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு நடைபெறவில்லை.
இந்நிலையில், நிகழாண்டில் அனுமதி கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தடை நீங்காததால் தமிழகம் முழுவதும் பல்வேறு அமைப்புகள் போராட்டம் நடத்தின. மாட்டுப் பொங்கலுக்கு மறுநாள் அலங்காநல்லூரில் தொடங்கிய இளைஞர்கள் போராட்டம் தமிழகம் முழுவதும் தீயாகப் பரவியது.
அதையடுத்து, ஜல்லிக்கட்டு நடத்த அவசரச் சட்டத்தை தமிழக அரசு கொண்டு வந்தது.
இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஜன. 22) அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஜல்லிக்கட்டுப் போட்டியைத் தொடக்கி வைக்க மதுரை வந்தார். இருப்பினும், அவசரச் சட்டத்தை ஏற்க மறுத்து போராட்டம் தொடர்ந்ததால், திட்டமிட்டபடி ஜல்லிக்கட்டு நடைபெறவில்லை. இதன் பிறகு, ஜல்லிக்கட்டுக்கு தடை ஏற்படாத வகையில், சட்டப்பேரவையில் சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது.
இதைத் தொடர்ந்து, பிப்.1ஆம் தேதி அலங்காநல்லூரிலும் பிப்.2-ஆம் தேதி பாலமேட்டிலும் பிப்.5-ஆம் தேதி அவனியாபுரத்திலும் ஜல்லிக்கட்டு நடத்த அந்தந்த கிராமக் குழுக்கள் முடிவு செய்திருந்தன.
இந்நிலையில், அலங்காநல்லூர் மற்றும் பாலமேட்டில் நடைபெற இருந்த ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.
மதுரை மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவ ராவை, வெள்ளிக்கிழமை சந்தித்த கிராமக் குழுவினர் ஜல்லிக்கட்டு தேதி ஒத்தி வைக்கப்பட்டுள்ள விவரத்தைத் தெரிவித்தனர்.
இதுகுறித்து அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு குழுத் தலைவர் ஜே.சுந்தர்ராஜன் கூறியது:
உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு கடந்த 2 ஆண்டுகளாக நடைபெறவில்லை. மாணவர்கள், இளைஞர்கள் போராட்டம் காரணமாக இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடைபெற உள்ளது. இதற்காக தமிழக அரசும் சட்டம் கொண்டு வந்திருக்கிறது. இதன் காரணமாக வழக்கத்தைக் காட்டிலும், அதிக எண்ணிக்கையில் காளைகள் பங்கேற்க இருக்கின்றன. மேலும், பார்வையாளர்களும் அதிகம் பேர் கூடுவர். ஆகவே, காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கான பரிசுகள், அவர்களுக்கான பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்து அம்சங்களிலும் விரிவான ஏற்பாடுகளைச் செய்ய அவகாசம் தேவைப்படுகிறது.
அதோடு, ஜல்லிக்கட்டு போட்டியை தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தொடக்கி வைக்க வேண்டும் என கிராம மக்கள் விரும்புகின்றனர். ஆகவே, கிராமக் குழு சார்பில் வரும் திங்கள்கிழமை முதல்வரைச் சந்திக்க உள்ளோம். அதன் பிறகு ஜல்லிக்கட்டு நடைபெறும் தேதி அறிவிக்கப்படும் என்றார்.
இதேபோல, பாலமேட்டிலும் ஜல்லிக்கட்டு தேதியை ஒத்தி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக பாலமேடு கிராம மகாலிங்க சுவாமி பொது மடத்துக் கமிட்டி செயலர் பி.கார்த்திகை ராஜன் தெரிவித்தார். தமிழக முதல்வரைச் சந்தித்த பிறகு தேதி அறிவிக்கப்படும் என்றார் அவர்.
அவனியாபுரத்தில் பிப்.5-ஆம் தேதி ஜல்லிக்கட்டு நடைபெறும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அதில் எவ்வித மாற்றமும் இல்லை. திட்டமிட்டபடி ஜல்லிக்கட்டு நடைபெறும் என்று அவனியாபுரம் கிராமக் குழுத் தலைவர் ஏ.கே.கண்ணன் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement