Ad Code

Responsive Advertisement

உடல்திறன் சான்றிதழ் பெற மாணவர்கள் அலைக்கழிப்பு

அரசு பொதுத்தேர்வு எழுத, ஒரு மணி நேர சலுகை பெறும் மாணவர்கள், உடல்திறன் சான்றிதழ் பெற, கடுமையாக அலைக்கழிக்கப்படுகின்றனர். பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகள், மார்ச் 2 மற்றும் 8ம் தேதிகளில் துவங்குகின்றன. தமிழகம் முழுவதும், 7,000 மையங்களில் நடைபெறும் இத்தேர்வில், 20 லட்சம் பேர் தேர்வெழுத உள்ளனர். பிளஸ் 2 தேர்வு, மூன்று மணி நேரமும்; 10ம் வகுப்பு தேர்வு, இரண்டரை மணி நேரமும் நடக்கும்.

இதில், சாதாரண மாணவர்கள் தவிர, 'டிஸ்லெக்சியா' என்ற கற்றல் திறன் குறைவான மாணவர்கள், மூளை வளர்ச்சி பாதிப்புள்ள சிறப்பு குழந்தைகள், மாற்றுத்திறனாளி மாணவர்கள் போன்றோருக்கு, கூடுதலாக ஒரு மணி நேரம் சலுகை அளிக்கப்படும்.

இந்த சலுகையை பெற, சம்பந்தப்பட்ட மாணவர்கள், தமிழக சுகாதாரத் துறையின் அரசு உடல்திறன் சோதனை கமிட்டியிடம் இருந்து சான்றிதழ் பெற்று, தேர்வுத் துறையிடம் வழங்க வேண்டும். 

இதற்கு பெரும்பாலான பள்ளிகள், மாணவர்களுக்கு உதவுவதில்லை. அதனால், சலுகை பெற விரும்பும் மாணவர்களும், அவர்களின் பெற்றோரும், அரசு மருத்துவமனையில், பல நாட்கள் காத்திருக்க வேண்டி உள்ளது. உடல்திறன் தேர்வு கமிட்டி, வாரம் ஒரு நாள் மட்டுமே கூடும் என்பதால் அதுவரை மாணவர்கள் அவதிப்பட வேண்டியுள்ளது.

மேலும் மருத்துவமனையில் மாணவர்கள் யாரை அணுக வேண்டும்; எந்தவிதமான ஆவணங்கள் எடுத்து செல்ல வேண்டும்; உடல்திறன் ஆய்வு கமிட்டியினர் கூடுவது எப்போது என, மாணவர்களுக்கு எந்த வழிகாட்டுதலும் இல்லை. 
'உடலளவில் பாதிக்கப்பட்டோரை, பள்ளிக்கல்வித் துறை, தேர்வுத்துறையும் அலைக்கழிப்பதால் மனதளவில் மேலும் பாதிக்கப்படுகின்றனர். இதற்கு தீர்வாக, சுகாதாரத் துறையுடன் பள்ளிக்கல்வித் துறை இணைந்து, உடல்திறன் சான்றுக்கான சிறப்பு முகாம்களை நடத்தலாம்' என, பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement