Ad Code

Responsive Advertisement

பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடுகள் எப்போது தளர்த்தப்படும் ?

வங்கிகள் மற்றும் ஏடிஎம் மையங்களில் பணம் எடுப்பதற்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை ரிசர்வ் வங்கி படிப்படியாகத் தளர்த்தும் என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்தார்.

பட்ஜெட்டில் மதிப்பிடப்பட்ட அளவைக் காட்டிலும் கூடுதலாக நிகழ் நிதியாண்டின் வரி வசூல் தொகை இருக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தில்லியில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கைக்குப் பிறகு கருப்புப் பணப் பொருளாதாரம் ஒழிக்கப்பட்டு, அவை கணக்கில் கொண்டுவரப்பட்டுள்ளது.

பணம் எடுப்பதில் உள்ள சிரமங்கள் குறைந்து வருகின்றன. இந்நிலையில், நாட்டின் நிதிச் சூழலை ரிசர்வ் வங்கி தீவிரமாக கண்காணித்து வருகிறது.
நிலைமையைப் பொருத்து பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடுகளை படிப்படியாக ரிசர்வ் வங்கி தளர்த்தும்.

ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கை மூலம் கடந்த மூன்று மாதங்களில் நேரடி மற்றும் மறைமுக வரிவிதிப்புகளின் மூலம் வசூலான தொகை அதிகரித்துள்ளது. மத்திய அரசின் ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கையால் மேற்கு வங்கத்தில் வரி வசூல் 13 சதவீதம் குறைந்ததாக அந்த மாநில அமைச்சர் அமித் மித்ரா குற்றம்சாட்டியுள்ளார். அதேநேரத்தில் ஹரியாணா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களின் வரி வசூல் வழக்கத்தைக் காட்டிலும் அதிக அளவில் நடந்துள்ளது.

இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால், நல்ல ஆட்சி நிர்வாகம் இருக்கும் இடத்தில் வருவாயும் நன்றாக இருக்கும் என்பது புலனாகிறது.

நிகழ் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் வரி வசூல் மூலம் அரசுக்கு ரூ. 16.3 லட்சம் கோடி வருவாய் கிடைக்கும் என மதிப்பிடப்பட்டிருந்தது. தற்போது அந்தத் தொகையைக் காட்டிலும் கூடுதான வருவாய் கிடைக்கும் என்ற நம்பிக்கை மேலோங்கியுள்ளது.
நவம்பர் வரையிலான காலகட்டத்தில் மறைமுக வரிவிதிப்பின் மூலம் கிடைத்த வருவாய், அதற்கு முந்தைய ஆண்டைக் காட்டிலும் 26 சதவீதம் அதிகரித்துள்ளது. அதேபோன்று நேரடி வரிவிதிப்பு வருவாயும் அதிகரித்துள்ளது. பட்ஜெட் மதிப்பீட்டில் குறிப்பிட்டிருந்த வரி வசூல் அளவில் தற்போது 65 சதவீதம் எட்டப்பட்டுள்ளது. நிகழ் நிதியாண்டு இறுதிக்குள், எதிர்பார்த்த அளவை விட அதிகமான வருவாய் ஈட்டப்படும் என்றார் அருண் ஜேட்லி.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement