Ad Code

Responsive Advertisement

மாணவர்கள் சிந்தித்து படிப்பதற்கு ஏற்ப கல்வி கற்பிப்பது எப்படி? சென்னையில் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

பள்ளிக்கூட மாணவர்கள் பாடங்களை மனப்பாடம் செய்யாமல், சிந்தித்து படிப்பதற்கு ஏற்ற கல்வியை வழங்கும் வகையில் சென்னையில் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

மனப்பாடம் செய்யாமல்...

அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகளில் பெரும்பாலானோர் மனப்பாடம் செய்து படிக்கிறார்கள். அவர்கள் புத்தகத்தின் பின்பக்கத்தில் கொடுக்கப்பட்டு இருக்கும் கேள்விகளுக்கு உரிய பதிலை மனப்பாடம் செய்து தேர்வு எழுதுகிறார்கள். இவ்வாறு மாணவர்கள் மனப்பாடம் செய்வதை தவிர்க்கும் வகையில் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க தமிழக அரசும், பள்ளிக்கல்வித்துறையும்முடிவு செய்தது.இதனையடுத்து நேற்று சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டி.பி.ஐ. வளாகத்தில் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில் ஆசிரியர்களுக்கு இந்த பயிற்சி அளிக்கப்பட்டது.

104 ஆசிரியர்கள்

பயிற்சியில் ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் நிபுணத்துவம் பெற்ற 104 ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.அவர்களுக்கு எப்படி பாடங்களை கற்பிக்க வேண்டும்? என்று பயிற்சி அளிக்கப்பட்டது.இந்த பயிற்சியில் மாணவர்கள் பாடம் தொடர்பாக அவர்களாகவே சிந்தித்து கேள்விகள் கேட்க வேண்டும். மனப்பாடம் செய்வதை தவிர்க்க வேண்டும். ஆசிரியர்கள் எந்த பாடத்தை கற்பிக்கிறாரோ? அந்த பாடம் தொடர்பாக பார்த்தல், கேட்டல், பேசுதல், படித்தல், படைப்பாற்றல் ஆகியவற்றில் மாணவர்களை ஈடுபடுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.

வல்லுனர்கள்

இந்த பயிற்சி இன்றுடன் (வெள்ளிக்கிழமை) முடிவடைகிறது.மற்ற பாடங்களுக்கும் விரைவில் பயிற்சி நடத்தப்பட உள்ளது.நேற்று நடைபெற்ற தமிழ் பாடத்திற்கான பயிற்சியை வல்லுனர்கள் மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தை சேர்ந்த எல்.ராமமூர்த்தி, ந.நடராஜபிள்ளை, பி.ரத்தினசபாபதி, மு.பாலகுமார், து.சேதுபாண்டியன், வி.இளங்கோவன், சாம் மோகன்லால், மதுரை புலவர் சங்கரலிங்கனார் உள்பட பலர் பயிற்சி அளித்தனர்.

பயிற்சிக்கான ஏற்பாடுகளை மாநில கல்வியியல் ஆராய்ச்சிமற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர் வி.சி.ராமேஸ்வரமுருகன் செய்து இருந்தார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement