Ad Code

Responsive Advertisement

மரங்களால் பூமியை பசுமையாக்க விதைப்பந்து தயாரிப்பு : களம் இறங்கிய பள்ளி மாணவர்கள்

மரங்கள் வளர்த்து பூமியை பசுமையாக்கும் நோக்கில் தேனி பள்ளி மாணவர்கள் விதைப்பந்து தயாரித்து இலவசமாக வழங்கி வருகின்றனர். மரங்களை வெட்டியதால் சுற்றுச்சூழல் பாதிப்பு, ஓசோன் மண்டலத்தில் ஓட்டையால் பருவநிலை மாற்றம், இயற்கை சீற்றம் என பல வகையில் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். ஆனாலும் இயற்கையை அழிக்கும் நிகழ்வுகள் தொடர்கிறது. இந்நிலையில் தேனி அருகே பள்ளி மாணவர்கள் பசுமையை பாதுகாக்க மரக்கன்றுகள் வளர்க்க புது முயற்சி மேற்கொண்டுள்ளனர்.

சின்னமனுார் அருகே காமாட்சிபுரம் இந்து நாடார் தொடக்க பள்ளி வளாகத்தில் வேப்பமரங்கள் அடர்ந்து வளர்ந்துள்ளன. இப் பள்ளி ஐந்தாம் வகுப்பு மாணவர்கள் ஏப்ரல், மே, ஜூனில் மரங்களில் இருந்து விழுந்த வேப்பம் பழத்தை சேகரித்து விற்று பள்ளிக்கு பொருட்கள் வாங்கினர்.

புதிய முயற்சி : பள்ளி ஆசிரியை கனிமதி, சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக பள்ளி வளாகத்தில் விழும் வேப்பம் பழங்களை மாணவர்கள் மூலம் சேகரித்து உலர வைத்து, விதைப்பந்து தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டார். இத் திட்டத்தினை ஜனவரி முதல் செயல்படுத்தினார்.

தயாரிப்பு முறை : விதைப்பந்து தயாரிப்பில் ஐந்தாம் வகுப்பு மாணவர்கள் நிவேதா, காயத்திரி, தேர்கரசன், கோபிநாத், வெங்கடேஷ் ஈடு பட்டனர். இவர்கள் முளைப்பு திறனுக்கு ஏற்ற மண், உலர்ந்த எரு குப்பை, நீர் சேர்த்து பிசைந்து உருண்டையாக்கி அதனுள் உலர்ந்த வேப்ப விதைகள் வைத்து பந்து வடிவமாக மாற்றினர். ஒவ்வொரு உருண்டையிலும் 6 முதல் 8 வேப்ப விதைகள் இருக்கும். இதனை மைதானத்தில் சில நாட்கள் உலர வைத்து விதைப்பந்து தயார் செய்தனர்.

விதை வினியோகம் : இந்த விதைப்பந்துகளை காகித பைகளில் வைத்து மாணவர்களிடம் கொடுத்தனர். இப்பையினை அவ்வழியாக கார், பைக், டிராக்டரில் செல்வோரிடம் மாணவர்கள் கொடுக்கின்றனர். 

அப்போது மாணவர்கள், “அதிக மரம் வெட்டியதால் வெப்பம் அதிகரித்துள்ளது. பூமியை பசுமையாக்குவது நம் கடமை. எனவே, இந்த விதைப்பந்தினை நீங்கள் போகும் வழியில் நீர் ஆதாரமான கண்மாய் கரை, ஓடைகள், ஆற்றோரங்களில் வீசி எறியுங்கள். ஈரப்பதமானசூழ்நிலையில் பந்தில் உள்ள விதை முளைத்துவிடும். அங்கு மரக்கன்று வளர்ந்து மரமாகிவிடும்,” என, வேண்டுகோள் வைக்கின்றனர். இதனை தட்டாமல் பலரும் வாங்கி செல்கின்றனர். அதனை பல இடங்களில் வீசிச்செல்கின்றனர். இப்படி வீசி சென்ற விதைகள் ஒரு சில இடங்களில் முளைத்துள்ளதாக அவர்கள் கூறுகின்றனர்.

பசுமை ஆக்குவோம் : தலைமை ஆசிரியை ஆரோக்கிய மேரி, ஆசிரியை கனிமதி கூறுகையில், “இந்த ஆண்டில் 200 வேப்ப விதைப்பந்து கொடுத்துள்ளோம். சில இடங்களில் முளைத்துள்ளதை கணக்கெடுக்க உள்ளோம். வரும் ஆண்டில் ஒரே வகையான விதை இன்றி பலவகை விதைகளை சேர்த்து விதைப் பந்து தயாரிக்க பயிற்சி அளிக்க உள்ளோம். கிராமத்தை சுற்றி மரங்கள் வளர்த்து பசுமையாக்குவதே நோக்கம்,” என்றனர்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement