Ad Code

Responsive Advertisement

'மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல்' பின்னடைவு ஏன் : பி.இ., - பி.டெக்., மாணவர் சேர்க்கை பின்னணி

அண்ணா பல்கலையின் இன்ஜி., பொது கவுன்சிலிங் ஜூன், 27ல் துவங்கியது. இதில், விளையாட்டு பிரிவு, மாற்றுத் திறனாளிகள் பிரிவு மற்றும் தொழிற்கல்வி பிரிவுக்கான அரசு இட ஒதுக்கீடு இடங்களை தவிர, பொதுப்பிரிவுக்கு, 1.83 லட்சம் இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இவற்றுக்கான கவுன்சிலிங் நடந்த இரு நாட்களிலும், பெரும்பாலான மாணவர்கள், குறிப்பாக மாணவியர், கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் இ.சி.இ., எனப்படும், 'எலக்ட்ரானிக்ஸ் அண்டு கம்யூனிகேஷன்ஸ்' துறையை தேர்வு செய்துள்ளனர். 


கவுன்சிலிங் துவங்கிய முதல் நாளிலேயே, சென்னை, அண்ணா பல்கலையின் கட்டுப்பாட்டிலுள்ள, கிண்டி இன்ஜி., கல்லூரி, குரோம்பேட்டை எம்.ஐ.டி., கல்லூரி, அரசு உதவி பெறும் கோவை பி.எஸ்.ஜி., கல்லூரி, மதுரை தியாகராஜா கல்லூரி போன்றவற்றில் இந்த படிப்புகளுக்கான இடங்கள் நிரம்பி விட்டன. மற்ற முன்னணி கல்லூரிகளிலும், இ.சி.இ., மற்றும் கம்யூ., சயின்ஸ் இடங்கள் நிரம்பி விட்டன. அதேபோல், 'எலக்ட்ரானிக்ஸ் அண்டு இன்ஸ்ட்ரூமென்டேஷன்ஸ்' பிரிவிலும் மாணவர்கள் அதிக அளவில் சேர்கின்றனர். இ.சி.இ.,க்கு அடுத்தபடியாக, மெக்கானிக்கல் படிப்பில் மாணவர்கள் சேர்ந்தாலும், ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் இருந்தது போல், மெக்கானிக்கல் பிரிவுக்கு தற்போது அதிக போட்டி இல்லாத நிலை உள்ளது. எலக்ட்ரிக்கல் மற்றும் எல்க்ட்ரானிக்ஸ் துறைக்கும் பெரிய அளவில் போட்டி இல்லை.


மெக்கானிக்கல் படிப்பு பின்னடைவை சந்தித்ததற்கு, வேலை வாய்ப்பின்மையும், குறைந்த சம்பளமுமே காரணம் என, கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர்.


இதுகுறித்து, கல்வியாளர் ஜெயப்பிரகாஷ் காந்தி கூறியதாவது: கம்யூட்டர் சயின்ஸ் அறிமுகமான பின், அதற்கான மவுசு அதிகரித்த வண்ணம் உள்ளது. கடந்த, 11 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, இம்முறை மெக்கானிக்கல், சிவில் மற்றும் எலக்ட்ரிக்கலுக்கு அதிக போட்டி இல்லை. இந்த நிலைக்கு வேலைவாய்ப்பின்மையே காரணம். கடந்த கல்வியாண்டில், தரவரிசையில் முதலில் உள்ள, 50 கல்லுாரிகளில், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் சார்ந்த தொழிற்சாலை நிறுவனங்கள், வெறும், 8 சதவீதம் மட்டுமே வேலை அளித்துள்ளன. 


அடுத்த கட்டத்திலுள்ள கல்லுாரிகளில், 40 - 50 சதவீத மாணவர்கள் வேலைவாய்ப்பு பெற்றனர். அவர்களுக்கு மாதம், 8,000 ரூபாய் தான் சம்பளம் கிடைத்தது. முதல் தர கல்லூரிகளில், ஐ.டி., நிறுவன வேலைவாய்ப்பில், 25 ஆயிரம் ரூபாய்க்கும் அதிகமாக சம்பளம் கிடைத்துள்ளது. அவற்றில் ஐ.டி., நிறுவனங்களே அதிக வேலைவாய்ப்பை அளித்துள்ளன. அதனால் தான், மெக்கானிக்கல் பின்னுக்கு தள்ளப்பட்டு, கம்யூ., சயின்ஸ் மற்றும் அதை சார்ந்த படிப்புகள் முன்னிலைக்கு வந்துள்ளன, என்றார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement