Ad Code

Responsive Advertisement

மேலும் 220 பள்ளிகளில் "ஸ்டெம்' பயிற்சித் திட்டம்..

மாணவர்களுக்கான செய்முறைக் கற்பித்தல் பயிற்சியான "ஸ்டெம்' பயிற்சித் திட்டம், நிகழ் கல்வியாண்டில் மேலும் 220 பள்ளிகளில் தொடங்கப்படுகிறது. அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டம் (ஆர்எம்எஸ்ஏ) சார்பில், கடினமான பாடங்களான அறிவியல், கணிதம், தொழில்நுட்பம், பொறியியல் ஆகியவற்றை, ஆசிரியர்கள் எளிதாக மாணவர்களுக்குக் கற்பிப்பதற்கான "ஸ்டெம்' திட்டம் கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது.


முதல் கட்டமாக கோவை, தருமபுரி, ஈரோடு, கரூர், கிருஷ்ணகிரி, ராமநாதபுரம், சேலம், சிவகங்கை, திருவாரூர், திருவண்ணாமலை ஆகிய 10 மாவட்டங்களில் 10 அரசுப் பள்ளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து, அறிவியல் பாடத்துக்கான கருத்துருக்கள் செய்முறைப் பயிற்சிகளாக நிபுணர்களைக் கொண்டு வடிவமைக்கப்பட்டன. இந்தச் செய்முறைப் பயிற்சிகளுக்கான உபகரணங்கள், ஆசிரியர்களுக்கான வழிகாட்டுதல் கையேடு ஆகியவை ஆர்எம்எஸ்ஏ மூலம் வழங்கப்பட்டன. குறிப்பாக, ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு, மூன்றாம் வகுப்பு முதலான பாடங்களின் அடிப்படையில் செயல் திட்டங்கள் வடிவமைக்கப்பட்டன. பின்னர், ஆசிரியர்களுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டு, ஒன்பது, பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு ஸ்டெம் செய்முறைப் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. 220 பள்ளிகளுக்கு விரிவாக்கம்: நிகழ் கல்வியாண்டில் இந்தத் திட்டம், மேலும் 220 பள்ளிகளில் செயல்படுத்தப்படவுள்ளது.

இதுகுறித்து கல்வித் துறை அதிகாரிகள் கூறியதாவது: மாணவர்களை புத்தாக்கச் சிந்தனைகளுடனும், மாறுபட்டு சிந்திக்கத் தூண்டும் வகையிலும் "ஸ்டெம்' திட்டம் தொடங்கப்பட்டது. எளிமையான செய்முறைப் பயிற்சிகளை ஆசிரியர்கள் முதலில் செய்து காட்டுவார்கள். பின்னர், இந்தப் பயிற்சிகளை மாணவர்கள் தாங்களாகவே செய்து பார்ப்பதால், கடினமான அடிப்படைக் கருத்துருக்கள் எளிதில் புரியும். இந்தத் திட்டத்தின் மூலம், மாணவர்கள் மனப்பாடக் கல்வி முறையைத் தாண்டி, செயல்வழிக் கற்றலுக்கு பற்றுவிக்கப்படுகிறார்கள். எனவே, முக்கியப் பாடங்களான கணிதம், அறிவியல் பாடங்களுக்கு உபகரணங்களைக் கொண்டு செய்முறைப் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. இந்தக் கல்வி ஆண்டில் மேலும் 220 பள்ளிகளில் இந்தத் திட்டம் தொடங்கப்படுகிறது. இதன்மூலம், மாணவர்களின் புரிந்துகொள்ளும் திறன் மேம்படும் என்றனர்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement