Ad Code

Responsive Advertisement

கட்டாயக் கல்விச் சட்டத்தில் விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் பள்ளிகளுக்கு விண்ணப்பிக்க செவ்வாய்க்கிழமை (மே 31) கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தனியார் பள்ளிகளில் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் 25 சதவீத இடங்களை நிரப்ப அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, அரசு நிர்ணயித்துள்ள பொருளாதாரத் தகுதி உடையவர்கள் தங்கள் வசிப்பிடங்களுக்கு அருகே உள்ள தனியார் பள்ளிகளில் தங்கள் குழந்தைகளைச் சேர்க்க விண்ணப்பிக்கலாம்.


அதன்படி, மதுரை மாவட்டத்தில் 154 மெட்ரிக். பள்ளிகளில் கட்டாயக் கல்விச் சட்டத்தின் கீழ் 2,459 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதுவரை 1,950 விண்ணப்பங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன் கீழ் விண்ணப்பிக்க செவ்வாய்க்கிழமை (மே 31) இறுதி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.


கட்டாயக் கல்வி சட்டத்தின் கீழ் விண்ணப்பித்தவர்களுக்கு ஜூன் 4-ஆம் நடைபெறவுள்ள தேர்வுக்கூட்டத்தில் ஆய்வு செய்து அறிவிக்கப்படும். இதில் விண்ணப்பித்துள்ள பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ. 1 லட்சத்துக்கு கீழ் இருக்க வேண்டும்.


கடந்த 2013-14 கல்வி ஆண்டில் கட்டாயக் கல்விச் சட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட இடங்களில் 1,153 மாணவர்கள் சேர்க்கப்பட்டனர். 2014-15 ஆம் கல்வி ஆண்டில் 187 பள்ளிகளில் ஒதுக்கப்பட்ட 2,676 இடங்களில், 1,795 பேர் சேர்க்கப்பட்டனர். 2015-16-ஆம் கல்வி ஆண்டில் 188 பள்ளிகளில் ஒதுக்கப்பட்ட 2624 இடங்களில் 1,873 மாணவர்கள் சேர்க்கப்பட்டனர் என கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement