Ad Code

Responsive Advertisement

எம்.பி.பி.எஸ்., விண்ணப்பம் இன்று முதல் வினியோகம் ஜூன் 20ல் முதல் கட்ட கலந்தாய்வு

பொது நுழைவுத் தேர்வுக்கான சிக்கல் தீர்ந்ததால், தமிழகத்தில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கு, இன்று முதல் விண்ணப்பங்கள் வினியோகிக்கப்படுகின்றன. 'ஆன்லைன்' வழியேயான விண்ணப்ப வினியோகம், நேற்று துவங்கியது.


'மருத்துவப் படிப்புகளுக்கு, அகில இந்திய அளவில், பொது நுழைவுத் தேர்வு நடத்த வேண்டும்' என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதால், தமிழகத்தில், பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்துவதில் சிக்கல் எழுந்தது. தமிழகம் உட்பட, பல மாநிலங்கள் எதிர்ப்பால், பொது நுழைவுத் தேர்வில் இருந்து, இந்த ஆண்டுக்கு விலக்கு அளிக்கும் வகையில், மத்திய அரசு அவசர சட்டம் பிறப்பித்துள்ளது.



சிக்கல் தீர்ந்ததால், தமிழகத்தில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கான விண்ணப்ப வினியோகம், இன்று துவங்குகிறது. இதுகுறித்து, மருத்துவக் கல்வி இயக்குனர் விமலா கூறியதாவது:



எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கு, பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்படும். மாணவர், பெற்றோர் தேவையின்றி அச்சப்படத் தேவையில்லை. விண்ணப்ப வினியோகம், இன்று துவங்குகிறது. தமிழகம் முழுவதும் உள்ள, 20 அரசு மருத்துவக் கல்லுாரிகள், சென்னை பல் மருத்துவக் கல்லுாரியிலும் விண்ணப்பம் வழங்கப்படும். ஜூன், 6 வரை விண்ணப்பங்கள் கிடைக்கும்.



இது தவிர, www.tnhealth.org மற்றும், www.tn.gov.in என்ற இணையதளங்களில் இருந்தும், விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, ஜூன், 7க்குள் சமர்ப்பிக்க வேண்டும். தரவரிசை பட்டியல், ஜூன், 17ல் வெளியிடப்படும்.



முதல் கட்ட கலந்தாய்வு ஜூன், 20ல் துவங்கி, 25ம் தேதி வரை நடக்கும். இரண்டாம் கட்ட கலந்தாய்வு, ஜூலை, 18ல் நடக்கும்; ஆக., 1ல் வகுப்புகள் துவங்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement