Ad Code

Responsive Advertisement

தேர்தல் பணியில் கட்டாயம் ஈடுபட வேண்டும்: அரசு ஊழியர்-ஆசிரியர்களுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு.

தேர்தல் பணியில் அரசு ஊழியர்-ஆசிரியர்கள் கட்டாயம் ஈடுபட வேண்டும் என்றும் அவர்கள் தேர்தல் பணிகள் தொடர்பாக, மூன்று பயிற்சிக் கூட்டங்களிலும் பங்கேற்க வேண்டும் என்றும் தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார்.


சென்னை தலைமைச் செயலகத்தில் அவர் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது:-
இரண்டு தொகுதிகளுக்கு ஒரு பொதுப் பார்வையாளரும், 32 காவல் பார்வையாளர்களும் ஏப்ரல் 29-ஆம் தேதியன்று தமிழகம் வரவுள்ளனர். தொகுதிக்கு ஒருவர் என நியமிக்கப்பட்டுள்ள செலவினப் பார்வையாளர்களும் விரைவில் வருவர்.



வைப்புத் தொகை எவ்வளவு? 

வேட்புமனு தாக்கலுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக இருந்தால், வேட்புமனு தாக்கல் செய்வோரை அந்தத் தொகுதியைச் சேர்ந்த ஒருவர் முன்மொழிய வேண்டும். பதிவு செய்யப்பட்ட கட்சியாக இருந்தால் தொகுதியைச் சேர்ந்த 10 பேர் முன்மொழிய வேண்டும்.தனித் தொகுதியில் போட்டியிட ரூ.5 ஆயிரம் முன்வைப்புத் தொகை செலுத்த வேண்டும். பொதுத் தொகுதியிலும் தாழ்த்தப்பட்ட-பழங்குடியின வகுப்பைச் சேர்ந்தவர் போட்டியிட விரும்பினால், ரூ.5 ஆயிரம் முன்வைப்புத் தொகைசெலுத்தினாலே போதும். பொதுத் தொகுதியில் போட்டியிட பிற வகுப்பைச் சேர்ந்தவர்கள் ரூ.10 ஆயிரம் செலுத்த வேண்டும்.



போலி வாக்காளர்கள்: 
போலி வாக்காளர்கள் இருப்பதாக, பிற கட்சிகள் புகார் கூறியபோது பாமக எந்தப் புகாரையும் கூறவில்லை. இப்போது வாக்காளர் பட்டியல் அனைத்தும் இறுதி செய்யப்பட்ட சூழ்நிலையில், போலி வாக்காளர்கள் இருப்பதாக அந்தக் கட்சி புகார் தெரிவிக்கிறது.வாக்காளராக இல்லாத ஒருவரின் பெயர் பட்டியலில் இடம்பெற்றிருந்தால், அவருடைய பெயர் இடம் மாறியவர்-இறந்தவரின் பட்டியலில் வைக்கப்படும். இந்தப் பட்டியலில் ஏதேனும் ஆட்சேபனை இருந்தால் அரசியல் கட்சிகள் தெரிவிக்கலாம்.


இடம் மாறியவர்-இறந்தவரின் பட்டியலில் உள்ளவர்கள் வாக்கை செலுத்த வேண்டுமானால் வாக்காளர் அடையாள அட்டையுடன் கூடுதலாக ஒரு ஆவணத்தைச் சமர்ப்பிக்க வேண்டும்.மண்டல குழுக்கள்: வாக்குப் பதிவுக்குத் தேவையான அனைத்து இயந்திரங்கள், எழுதுபொருள்கள் ஆகியவற்றை வழங்கும் பணியை மண்டல குழுக்களே மேற்கொள்ளும். மேலும், வாக்குப் பதிவின்போது ஏதேனும் பிரச்னைகள் ஏற்பட்டால் அதனையும் இந்தக் குழுக்களே தீர்த்து வைக்கும். மொத்தமாக 5,916 குழுக்கள் வட்டாட்சியர்கள் தலைமையில் செயல்படும் என்றார் ராஜேஷ் லக்கானி.வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 22) தொடங்கி, ஏப்ரல் 29ஆம் தேதி வரை நடைபெறுகிறது.



இதற்கான அறிவிக்கையை அன்றைய தினம் காலையில் தேர்தல் ஆணையம் வெளியிடுகிறது.மனுக்கள் பரிசீலனை ஏப்ரல் 30ஆம் தேதி நடைபெறுகிறது. திரும்பப் பெற மே 2- ஆம் தேதி கடைசியாகும். வாக்குப் பதிவு 16-ஆம் தேதியும், வாக்கு எண்ணிக்கை 19-ஆம் தேதியும் நடைபெறுகிறது.வேட்புமனு அளிக்கும் போது, ஒவ்வொரு வேட்பாளரும் அஞ்சல்தலை அளவிலான புகைப்படத்தை அளிக்க வேண்டும். இந்த புகைப்படம் வாக்குப் பதிவின் போது, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் பயன்படுத்தப்படும்.மேலும், சொத்து விவரங்கள் அடங்கிய பிரமாணப் பத்திரங்களையும் தாக்கல் செய்ய வேண்டும். 



வேட்புமனு தாக்கல் செய்யும்போது மூன்று வாகனங்களில் வர வேண்டும். அதற்கு மேல் வந்தால் அதற்கான செலவு வேட்பாளரின் கணக்கில் சேர்க்கப்படும்.வேட்புமனு தாக்கலின்போது, வேட்பாளருடன் நான்கு பேர் உடனிருக்கலாம். வேட்புமனு தாக்கல் செய்துள்ள வேட்பாளரின் அடிப்படைத் தகவல்கள் உடனடியாக தேர்தல் துறையின் இணையதளத்தில் வெளியிடப்படும். அடுத்த 24 மணி நேரத்தில் அந்த வேட்புமனு அப்படியே பதிவேற்றம் செய்யப்படும். வங்கிக் கணக்கு விவரத்தையும் தெரிவிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement