Ad Code

Responsive Advertisement

பள்ளி கழிப்பறை பராமரிப்பு மகளிர் குழுக்களிடம் ஒப்படைப்பு: இம்மாதத்திற்குள் பணியாளர்களை நியமிக்க முடிவு

அரசு பள்ளிகளின் கழிப்பறைகளை துப்புரவு செய்து பராமரிக்கும் பொறுப்பை, ஊரக வளர்ச்சி துறை நிர்வாகம், மகளிர் குழுக்களிடம் ஒப்படைத்து உள்ளது. இந்த மாதம் இறுதிக்குள், புதிய துப்புரவு பணியாளர்கள் நியமிக்கப்படுவர் என, ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில், 1,068 தொடக்கப் பள்ளிகள்; 302 நடுநிலைப் பள்ளிகள், 162 உயர்நிலைப் பள்ளிகள்; 146 மேல்நிலைப் பள்ளிகள் என, மொத்தம், 1,678 பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகளின் வளாகங்களை,திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் உள்ள துாய்மைக் காவலர்கள் துப்புரவு செய்து வருகின்றனர். ஆனால், பெரும்பாலான தொடக்கப் பள்ளிகளில், கழிப்பறைகளை துப்புரவு செய்யும் பணியாளர்களை அரசு நியமிக்கவில்லை. ஒரு சில, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில், கழிப்பறைகளை துப்புரவு செய்யும் பணியாளர்கள் பணியிடங்கள், காலியாக உள்ளன என, கல்வி துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். 


இதையடுத்து, ஊரகப் பகுதியில் இயங்கும் அரசு பள்ளிகளில், கழிப்பறைகளை துப்புரவு செய்யும் பணியாளர்களை, மகளிர் குழுக்கள் மூலம் நியமிக்க, மாவட்ட நிர்வாகம்,ஊரக வளர்ச்சி துறைக்கு ஒப்புதல் அளித்து உள்ளது.அதன்படி, ஊரக வளர்ச்சி துறை நிர்வாகம், கிராம வறுமை ஒழிப்பு சங்க நிர்வாகிகளான மகளிர் குழுக்களிடம், பள்ளி கழிப்பறைகளை பராமரிக்கும் பொறுப்பை ஒப்படைத்து உள்ளது.



வழிகாட்டி நெறிமுறை:

ஏற்கனவே துப்புரவு பணியாளர்கள் இருப்பினும், புதிய ஆட்களை கல்வி குழுவினர் நியமிக்க வேண்டும் பள்ளியின் கிராமக் கல்விக் குழு கணக்கில், வட்டார வளர்ச்சி அலுவலரால் ஊதியப் பணம் விடுவிக்கப்படும்பள்ளி தலைமை ஆசிரியரால், சம்பந்தப்பட்ட மகளிர் குழுக்களுக்கு ஊதியம் விடுவிக்கப்படும்முதற்கட்டமாக, ஒன்றிய பொது நிதியில், மூன்று மாதத்திற்கு உரிய ஊதியத்தை கல்வி குழு வங்கி கணக்கில் இருப்பு வைக்க வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

இதுகுறித்து, ஊரக வளர்ச்சி துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:


அரசு பள்ளிகளில் கழிப்பறைகளை சுத்தமாக வைத்திருக்கும் பொறுப்பு மகளிர் குழுக்களிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.இந்த மாத இறுதிக்குள், அனைத்து பள்ளிகளிலும் கழிப்பறைகளை துப்புரவு செய்யும் பணியாளர்களை நியமித்து, சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.அவர்களுக்கு மாத ஊதியத்துடன் கழிப்பறைகளை சுத்தம் செய்ய தேவைப்படும் பொருட்களை கொள்முதல் செய்ய தேவைப்படும் பணமும் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. பள்ளிகளுக்கு தக்க பணியாளர்களின் ஊதியம், துப்புரவுக்குத் தேவைப்படும் பொருட்கள் கொள்முதல் செய்ய வழங்கப்படும் தொகையும் மாறுபடும்.இவ்வாறு அவர் கூறினார். 

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement