Ad Code

Responsive Advertisement

இன்று 67வது குடியரசுதினம்: இந்திய தேசம்... இளைஞர்களின் நேசம்

''நாட்டுப்பற்று மிக்க நுாறு இளைஞர்களை தாருங்கள். இந்தியாவையே உயர்த்திக்காட்டுகிறேன்'' என்றார் சுவாமிவிவேகானந்தர். இன்றைக்கு உலகில் அதிக இளைஞர்கள் வாழும் நாடாக இந்தியா திகழ்கிறது. இந்த இளம் படை சாதிக்கும் பட்டாளமாக உருவெடுக்க வேண்டுமென குடியரசு தினத்தில் சபதம் ஏற்போம்.


இந்தியாவுக்கு 1947 ஆக., 15ல் சுதந்திரம் கிடைத்தாலும் உண்மையான சுதந்திரம் என்பது, நமது அரசியலமைப்பு சட்டம் நடைமுறைக்கு வந்த 1950 ஜன., 26 தான். அன்றுதான் இந்தியா முழு ஜனநாயக நாடாக உருவெடுத்தது. அப்போது முதல் தன் ஜனநாயக பாதையில் சிறிதும் விலகாமல் வீறு நடை போட்டுக் கொண்டிருக்கிறது. இன்று 67வது குடியரசு தினம் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.



இளைஞர்களிடம் தான் சாதிக்க வேண்டும் என்ற தாகம் அதிகளவு இருக்கும். அறிவு, புதிய சிந்தனை, கற்பனை வளம், எதிர்கால தலைவர் என அனைத்து திறமைகளும் இருப்பதால் நாட்டின் வளர்ச்சிக்கு இளைஞர்கள் அவசிய தேவையாக உள்ளனர். உலகில் அதிக இளைஞர்களைக் கொண்ட நாடு இந்தியா. இங்கு 10 முதல் 24 வயது வரை உள்ள இளைஞர்கள் 35.6 கோடி பேர் உள்ளனர்.


மக்கள்தொகையில் முதலிடத்தில் இருக்கும் சீனா, இதில் 2ம் இடத்தில் தான் இருக்கிறது. அங்கு 26.9 கோடி இளைஞர்கள் தான் உள்ளனர். உலகின் வல்லரசு நாடான அமெரிக்கா 4வது இடத்தில் உள்ளது. அங்கு 6.5 கோடி இளைஞர்கள் உள்ளனர்.


மோடி திட்டம் :


வருங்கால இந்தியா இளைஞர்கள் கையில் தான் உள்ளது. இவர்களது திறமை பளிச்சிடும் தருணம் தற்போது வந்துள்ளது. இளைஞர் சக்தியை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்த பிரதமர் மோடி முழு கவனம் செலுத்தி வருகிறார். இந்த குடியரசு தினத்தின் சிறப்பம்சமாக 'ஸ்டார்ட்அப் இந்தியா, ஸ்டேண்ட் அப் இந்தியா' ஆகிய திட்டங்களை துவக்கியுள்ளார். இது இளைஞர்களின் திறமையை வெளிப்படுத்தும் விதமாகவும், வேலைவாய்ப்பளிக்கும் விதமாகவும் உள்ளது.



வேலைவாய்ப்பு பெருகும் :

'ஸ்டார்ட் அப்' இந்தியா திட்டத்தின் மூலம் இளைஞர்கள் தொழில் தொடங்க வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. நவீன அறிவியல், தொழில்நுட்ப சிந்தனைகளுடன் புதிதாக துவக்கப்படும் நிறுவனங்கள், 'ஸ்டார்ட்அப் நிறுவனங்கள்' எனப்படுகின்றன. இந்நிறுவனங்களுக்கு முதல் மூன்று ஆண்டு வரிச்சலுகை, நிறுவனத்தை 'ஆப்' மூலம் பதிவு செய்தல், நிறுவனங்கள் கண்டுபிடிக்கும் பொருட்களுக்கு காப்புரிமை பெறும் வசதி, வங்கிகள் மூலமாக எளிதாக நிதியுதவி உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகின்றன. அதே போல இன்றைய தினம் 'ஸ்டேண்ட்அப்' இந்தியா என்ற திட்டமும் தொடங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் பெண்கள் வங்கிகளில் கடன் பெற முடியும். அரசின் இந்த திட்டங்களை இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.


சோர்ந்து விட்டால்
உனைச் சுற்றி சுவரெழுப்பி விடுவார்கள்
புறப்பட்டு விட்டால் -
நீ
போகிற பாதையை
யாரும்
பூட்டி வைக்க முடியாது!
அழுவதன் மூலம்
எதையும் அடைந்துவிட முடியாது
எழுவதன் மூலம்
எதுவும் இயலும்
என்ற கவிஞர் மு. மேத்தாவின் வரிகளுக்கு ஏற்ப இளைஞர்கள் எழுச்சி கண்டால், அப்துல் கலாம் கண்ட 'வல்லரசு' நாடாக இந்தியா மிக விரைவில் உருவெடுக்கும்.



இரண்டு நாள் அரசு விடுமுறை:


* 1950 ஜன., 26ல் காலை 10.24 மணிக்கு குடியரசு தின நிகழ்ச்சி துவங்கும் முன், ஜனாதிபதியாக ராஜேந்திர பிரசாத் பதவியேற்பு.


* இந்திய வரலாற்றில் குடியரசு தினத்தன்று ஜனாதிபதி ஒருவர் பதவியேற்றது இந்த ஒருமுறை தான்.

* 1950 ஜன., 26 காலை 10.30 மணிக்கு 31 குண்டுகள் முழங்க, குடியரசு நாடு என ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு அறிவித்தார்.

* அப்போது போல புல்லட் புரூப் வாகனத்தில் ஜனாதிபதி வரவில்லை. சாரட் வண்டியில் தான் அணிவகுப்பை பார்வையிட்டார்.

* தற்போது தேசிய மைதானமாக இருக்கும் இர்வின் மைதானத்தில் முதல் குடியரசு தின அணிவகுப்பு நடந்தது. 15 ஆயிரம் பேர் நிகழ்ச்சியை பார்வையிட்டனர். 1955 முதல் ராஜ்பாத்தில் நடக்கிறது.

* முதல் வெளிநாட்டு விருந்தினராக, இந்தோனேசியாவின் முதல் அதிபர் சுகர்னோ பங்கேற்பு.

* முதல் குடியரசு தினத்துக்கு 2 நாள் அரசு விடுமுறை அளிக்கப்பட்டது.

* அணிவகுப்பில் பள்ளி குழந்தைகள் கலந்து கொள்ளவில்லை. ராணுவத்தினர் மட்டுமே பங்கேற்றனர்.



நிஜமான எஜமான் :


இந்திய சுதந்திரத்திற்கு முன் 1946 டிச. 9ல் அரசியல் நிர்ணய சபை கூட்டப்பட்டது. தலைவராக டாக்டர் ராஜேந்திர பிரசாத் பொறுப்பேற்றார். இந்தியா, பாகிஸ்தான் பிரிவினைக்கு பின், இந்தியாவுக்கு அரசியலமைப்பு சட்டம் உருவாக்க 1947 ஆக.29ல் வரைவுக்குழு அமைக்கப்பட்டது. அதன் தலைவராக அம்பேத்கர் பொறுப்பேற்றார். பல்வேறு ஆய்வுகளுக்குப் பின், பலமுறை திருத்திய பின், அக்குழு தந்த வரைவினை, அரசியல் நிர்ணய சபை 1949 நவ.26ல் ஏற்று கொண்டது. 1950 ஜன., 26 காலை 10.18 மணிக்கு அரசியல் சாசனம் அமலுக்கு வந்தது. இதை தயாரிப்பதற்கு 2 ஆண்டுகள் 11 மாதம் 18 நாட்கள் ஆனது. அரசியல் சாசனமே நாட்டின் எஜமான். இது ஒரு நீண்ட எழுதப்பட்ட ஆவணம். இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே எழுதப்பட்டுள்ளது. அப்போது 80 ஆயிரம் வார்த்தைகள் இடம் பெற்றிருந்தது. ஒருநாளில் இதை வாசித்துவிட முடியாது . இதில் முகவுரை, விதிகள், அட்டவணைகள், பிற்சேர்க்கை, திருத்த மசோதாக்கள் போன்ற சிறப்புக்களை பெற்றது.



வரலாறு முக்கியம்:


மன்னராட்சி இல்லாமல், தேர்தல் மூலம் மக்களே ஆட்சியாளர்களை தேர்ந்தெடுத்துக் கொள்ளும் முறைக்கு குடியரசு என பெயர். மக்களாட்சி நடைபெறும் நாடு, குடியரசு நாடு என அழைக்கப்படுகிறது. இதன் மூலம் அரசின் நடவடிக்கையில் மக்கள் பங்கேற்கின்றனர். குடியரசு நாட்டின் தலைவர், குடியரசு தலைவர் அல்லது ஜனாதிபதி என அழைக்கப்படுகிறார். சில நாடுகளில், நேரடியாகவே மக்களால் குடியரசு தலைவர் தேர்ந்தெடுக்கப்படுகிறார். சில நாடுகளில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியாளர்கள் மூலம் குடியரசுத் தலைவர் தேர்ந்தெடுக்கப்படுகிறார். இம்முறைதான் இந்தியாவில் பின்பற்றப்படுகிறது. 1947 ஆக., 15ல் சுதந்திரம் பெற்ற போது, பிரிட்டிஷ் அரசு இந்தியாவுக்கு டொமினியன் அந்தஸ்து தான் வழங்கியது. அதன்படி, பிரிட்டிஷார் சார்பில் நியமிக்கப்பட்ட கவர்னர் ஜெனரல் தான் நாட்டின் தலைவராக இருந்தார். சுதந்திரத்துக்குப் பின், மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் ஆட்சியாளர்கள், தங்கள் விருப்பத்துக்கு செயல்படக் கூடாது என்பதற்காக அரசியலமைப்பு உருவாக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி அரசியலமைப்பு, 1950, ஜன., 26ல் நடைமுறைக்கு வந்தது. பிரிட்டிசாரின் கவர்னர் ஜெனரல் பதவி நீக்கப்பட்டு, புதிதாக ஜனாதிபதி பதவி உருவாக்கப்பட்டது.



பயங்கரவாதத்திற்கு பதிலடி:


ஐ.எஸ்., உள்ளிட்ட பயங்கரவாதிகளுக்கு எதிராக தீவிரமாக போராடும் பிரான்ஸ் அதிபர் பிரான்காயிஸ் ஹோலண்டே, குடியரசு தின சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் பயங்கர வாதத்தை ஒழிப்பதில் இந்தியா தீவிரமாக உள்ளது என்பதையும் பிரதமர் மோடி உலகுக்கு சுட்டிக் காட்டியுள்ளார்.



ஏன் வித்தியாசமானது


மக்களுக்கு பயன்படக்கூடிய, சந்தையில் இடம்பிடிக்கத்தக்க புதுமை படைப்பு, அதை நுகர்வோர்க்கு ஏற்றதாக மேம்படுத்துதல் ஆகிய மூன்றும் இருந்தால் தான் 'ஸ்டார்ட் அப் இந்தியா' திட்டத்தின் கீழ் ஏற்றுக் கொள்ளப்படும். மாறாக ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள பொருட்களை மேம்படுத்தும் திட்டமாகவோ, ஏற்கனவே இயங்கிக் கொண்டிருக்கும் நிறுவனத்தில் இருந்து பிரிந்து வந்ததாகவோ இருக்கக்கூடாது. மேலும் இத்திட்டத்தின் சிறப்பம்சம் என்பது வரிச்சலுகையோ, 10 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடோ, காப்புரிமை சலுகையோ அல்ல. இளைஞர்கள் மத்தியில் எழுப்பப்பட இருக்கும் உற்சாகமும், உத்வேகமும் தான் இத்திட்டத்தின் தனிச்சிறப்பு.



பிரான்ஸ் கவுரவம்


ஒவ்வொரு குடியரசு தினத்தின் போதும், வெளிநாட்டு தலைவர் ஒருவர், விருந்தினராக பங்கேற்பது வழக்கம். இந்தியாவுடன் மல்லுக்கு நிற்கும் பாகிஸ்தான், சீனா நாடுகளில் இருந்தும் தலைவர்கள் கலந்து கொண்டது சிறப்பு. அதிகபட்சமாக பிரான்சிலிருந்து ஐந்து முறை அழைக்கப்பட்டுள்ளனர். இரண்டாவது இடத்தில் பூடா னில் இருந்து நான்கு முறை விருந்தினர்கள் பங்கேற்றுள்ளனர்.



யார் அதிகம்


அதிக முறை குடியரசு தின விழாவில் பங்கேற்ற ஜனாதிபதி என்ற பெருமை டாக்டர் ராஜேந்திர பிரசாத் பெறுகிறார். இவர் 13 குடியரசு தின விழாக்களுக்கு (1950 - 62) தலைமை வகித்துள்ளார்.



யார் குறைவு


நாட்டின் 3வது ஜனாதிபதியாக இருந்த ஜாகிர் உசேன், குறைந்த பட்சமாக 2 குடியரசு தின விழாவுக்கு (1968,69) மட்டுமே தலைமை வகித்தார். ஏனெனில் இவர் பதவியில் இருக்கும் போதே மறைந்தார்.



பின்னணி என்ன


சுதந்திரம் வழங்கப்படுவதற்கு முன்னரே, 1930 ஜன.26ஐ, சுதந்திர தினமாக அப்போதைய தலைவர்கள் கொண்டாடினர். காந்தி அறிவிப்பின் பேரில் அன்று எடுத்துக் கொண்ட உறுதிமொழி,'இந்திய நாட்டின் அரசியல், பொருளாதாரம், கலாசாரம், ஆன்மிகம் ஆகியவற்றுக்கு தீங்கு விளைவிக்கும் அரசாட்சிக்கு அடிபணிந்து நடப்பது மக்களுக்கும், இறைவனுக்கும் செய்யும் துரோகம்' என்பது தான். சுதந்திரம் பெற்ற பின் நேரு அமைச்சரவை குடியரசு தினத்தை காந்தி ஏற்கனவே அறிவித்த ஜன.26ல் கொண்டாடுவது என முடிவு செய்தது.



தேசிய கீதம்


தேசிய கீதம் முதன்முதலில் 1911, டிச.27 அன்று கோல்கட்டா காங்கிரஸ் மாநாட்டில் பாடப்பட்டது. தற்போது நுாற்றாண்டுகளை கடந்து அனைவரது உணர்விலும் கலந்துள்ளது. இப்பாடல் 1950 ஜன.24ல் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதனை 52 விநாடிகளில் பாடி முடிக்க வேண்டும். தேசிய கீதம் வங்காள மொழியில் 'பாரத விதாதா', ஆங்கிலத்தில் 'தி மார்னிங் சாங் ஆப் இந்தியா' என அழைக்கப்படுகிறது.



பாசறை திரும்புதல்


குடியரசு தின விழா முடிந்து, ஜன., 29ம் தேதி மாலை, படைகள் பாசறை திரும்பும் நிகழ்ச்சி நடக்கும். மூன்று படை களும் இவ்விழாவில் பங்கேற்கும். ராஷ்டிரபதி பவனில் விஜய் சவுக் என்ற பகு தியில் நடக்கிறது. தரைப்படை, கடற்படை, விமா னப்படையின் 'பேண்டு' வாத்திய இசையுடன் விழா துவங்கும். ஜனாதிபதி தனது பரிவாரங்களுடன் விழாவுக்கு தலைமை ஏற்பார். ஜனாதிபதிக்கு 'சல்யூட்' அளிக்கப்பட்டு, 'பேண்டு' வாத்தியம், 'டிரம் பட்'டில் தேசிய கீதமும் இசைக்கப்படும். ஜனாதிபதி வணக்கம் செலுத்துவதுடன் படை திரும்புதல் நிகழ்ச்சி நிறைவடையும்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement