Ad Code

Responsive Advertisement

5,513 காலியிடங்கள் நிகழாண்டில் நிரப்பப்படும்: ஆண்டு திட்ட அறிக்கையை வெளியிட்டது டி.என்.பி.எஸ்.சி

நிகழாண்டில் 33 பதவிகளில் காலியாகவுள்ள 5,513 காலிப் பணியிடங்களுக்கு தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இதற்கான திட்ட அறிக்கையை www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் அறியலாம் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய (டி.என்.பி.எஸ்.சி.) தலைவர் கே.அருள்மொழி கூறினார்.
 


சென்னையில் நிகழாண்டுக்கான திட்ட அறிக்கையை வெள்ளிக்கிழமை வெளியிட்ட அவர், செய்தியாளர்களிடம் மேலும் கூறியதாவது:-
 குரூப் 1 பிரிவில் 29 துணை ஆட்சியர்கள், 8 வணிக வரித்துறை உதவி ஆணையர்கள், 5 மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர்கள், 1 மாவட்டப் பதிவாளர் உள்பட 45 பணியிடங்களும், 65 உதவி சிறை அலுவலர் பணியிடமும், வட்டார சுகாதாரப் புள்ளியியலாளர் பணியில் 172 பணியிடங்களும் நிரப்பப்பட உள்ளன.
 


கிராம நிர்வாக அலுவலர், ஒருங்கிணைந்த குடிமைப் பணிகளில் அடங்கிய குருப் 2 தேர்வில் நேர்காணல், நேர்காணல் அல்லாத பணிகள் உள்ளிட்ட பல்வேறு காலியிடங்களின் விவரங்கள் வர வேண்டியுள்ளது. இதுவும் வரப்பெற்றால் இந்த ஆண்டில் 10 ஆயிரம் பணியிடங்களை நிரப்ப தேர்வுகள் நடத்தப்படும்.
 


புதிய பணியிடங்கள்: இந்த ஆண்டு முதல்முறையாக சுற்றுலா வளர்ச்சித் துறையில்  5 அதிகாரிகளையும், எல்காட் நிறுவனத்தில் துணை மேலாளர்களாக 12 பேரையும் பணியில் அமர்த்த தேர்வுகள் நடத்தப்படும். குருப் 3 பிரிவில் நேர்காணல் இல்லாத பணியில் 36 இடமும், குருப் 4 பணியிடத்தில் 4,931 காலியிடங்கள் என 5,513 பணியிடங்கள் நிரப்புவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. 


2015-ஆம் ஆண்டு நடைபெற வேண்டிய 9 தேர்வுகள் மழையின் காரணமாக தள்ளிவைக்கப்பட்டன. அவற்றுக்கான தேர்வுகளும் நடத்தப்பட உள்ளன. கடந்த அக்டோபர் 14-ஆம் தேதி பொறுப்பேற்றது முதல் 3 மாதங்களில் 12 தேர்வுகளின் முடிவுகள் வெளியிடப்பட்டு, 6 ஆயிரத்து 54 பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன என்றார்.


பேட்டியின்போது தேர்வாணையச் செயலாளர் விஜயகுமார், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் சோபனா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement