Ad Code

Responsive Advertisement

தமிழக கல்வித்துறைக்கு 4 ஆண்டுகளில் ரூ.85,680 கோடி ஒதுக்கீடு:அமைச்சர் கே.சி.வீரமணி

நாட்டில் எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் தமிழக அரசு கல்வித்துறை வளர்ச்சிக்காக, கடந்த நான்கு ஆண்டுகளில் இதுவரை ரூ.85,680 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது என தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி குறிப்பிட்டார்.

பள்ளிக் கல்வித்துறை சார்பில் 33-ஆவது மாநில அளவிலான பாரதியார் தின குழு விளையாட்டுப் போட்டிகள் தொடக்க விழா, ராசிபுரம் பாவை கல்வி நிறுவன வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியர் வி.தட்சிணாமூர்த்தி தலைமை வகித்தார். பள்ளிக் கல்வித்துறை இணைச் செயலர் பொன்னையா வரவேற்றார். போட்டிகளை அமைச்சர்கள் கே.சி.வீரமணி மற்றும் எஸ்.சுந்தர்ராஜ் ஆகியோர் தொடக்கி வைத்தனர்.

சென்னை, கடலூர், திருச்சி, மதுரை, கன்னியாகுமரி, சேலம், நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களின் அரசு மற்றும் தனியார் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் 19 வயதுக்குள்பட்ட மாணவ-மாணவியர், விளையாட்டு விடுதி வீரர்கள் என மொத்தம் 4,210 பேர் பங்கேற்றனர்.

கால் பந்து, கூடைப் பந்து, கையுந்து பந்து, ஹாக்கி, கோ-கோ, கபாடி, கைப்பந்து, எறிபந்து, பூப்பந்து, இறகுப் பந்து, மேஜைப் பந்து, டென்னிஸ் உள்ளிட்ட 12 வகையான விளையாட்டுப் போட்டிகள் நடைபெறுகின்றன. இப்போட்டிகளில் வெற்றிபெறுவோர் தேசிய அளவிலான குழுப் போட்டிகளில் விளையாடத் தகுதி பெறுவர்.

போட்டிகளைத் தொடக்கி வைத்து அமைச்சர் கே.சி.வீரமணி பேசியது: தமிழக முதலமைச்சர் ஒரு லட்சியத்தோடு தமிழகத்தை வழி நடத்தி வருகிறார். தொலைநோக்குத் திட்டம்-2020 என்ற இலக்குப் பாதையில் கொண்டு செல்கிறார். குறிப்பாக, கல்வித்துறை வளர்ச்சியடைய வேண்டும் என செயலாற்றி வருகிறார்.

தமிழகத்தில் ஏழ்மை, வறுமையால் கல்வி பாதிக்கக்கூடாது என்ற நோக்கில், அனைத்து வசதியும் மாணவர்களுக்கு செய்து தரப்படுகிறது. தரமான மாணவர்களை உருவாக்க புதிதாக 72,833 ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தனியார் பள்ளிகளுக்கு இணையாகத் தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இது போன்ற நடவடிக்கையால், கடந்த ஆண்டு 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில், மாநிலத்தில் 1163 அரசுப் பள்ளிகளும் பிளஸ் 2 தேர்வில் 150 அரசுப் பள்ளிகளும் 100 சதவீத தேர்ச்சி அடைந்தன.

2011-இல் முதலமைச்சர் பொறுப்பேற்றவுடன் மாணவர்களுக்கு மடிக்கணினித் திட்டம் அறிவித்து செயல்படுத்தினார். சர்வதேச அளவிலான போட்டிக்கு கணினித் துறையில் மாணவர்களை உயர்த்த வேண்டும் என இது போன்ற திட்டம் தொடங்கப்பட்டது. எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் 16 வகையான திட்டங்களை மாணவர்கள் வளர்ச்சிக்காக கொடுப்பது இங்கு மட்டும் தான். இதே போல், உடல்கல்வியிலும் கவனம் செலுத்தி மாணவர்கள் திறனை வெளிக்கொணர விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுகின்றன.

விளையாட்டுத் துறைக்கென ஆண்டுக்கு ரூ.10 கோடி ஒதுக்கப்படுகிறது. இதனால், விளையாட்டுத் துறையில் தேசிய அளவில் 12-ஆம் இடத்தில் இருந்த தமிழகம் 6-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. இது போன்ற வாய்ப்புகளை மாணவர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார்.

விழாவில், விளையாட்டுத்துறை அமைச்சர் எஸ்.சுந்தர்ராஜ் பேசியது: தமிழகத்தில் மாணவர்களுக்கு தனியாக 28 விளையாட்டு விடுதிகள் நிறுவி, சத்தான உணவு வழங்கப்படுகிறது. சீருடை, உபகரணங்கள் கொடுத்து ஊக்கப்படுத்துகிறது. சர்வதேச போட்டியில் பங்கேற்கும் அளவுக்கு மாணவர்களுக்கு பயிற்சியும், ஊக்கமும் அளிக்கப்படுகிறது என்றார்.

சட்டப்பேரவை உறுப்பினர்கள் கே.பி.பி.பாஸ்கர், ஆர்.சாந்தி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ச.கோபிதாஸ், பாவை கல்வி நிறுவனங்களின் தலைவர் என்.வி.நடராஜன், நாமக்கல் நகர்மன்றத் தலைவர் ஆர்.கரிகாலன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement