Ad Code

Responsive Advertisement

அனைத்து நாள்களிலும் பள்ளிகளில் ஆதார் சிறப்பு முகாம்கள்: பள்ளிக் கல்வி இயக்ககம் உத்தரவு

பள்ளிகளில் விடுமுறை நாள்கள் உள்பட அனைத்து நாள்களிலும் மாணவர்களுக்கு ஆதார் அட்டை பதிவுக்கான சிறப்பு முகாம்கள் நடத்த வேண்டும் என பள்ளிக் கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.


இதுதொடர்பாக அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக் கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன் செவ்வாய்க்கிழமை அனுப்பியுள்ள சுற்றறிக்கையின் விவரம்: ஒரு பள்ளியில் ஆதார் எண்ணுக்குப் பதிவு செய்யாத மாணவர்களின் எண்ணிக்கை 100 அல்லது அதற்கு மேல் இருந்தால், அந்தப் பள்ளியில் ஆதார் எண் பதிவு செய்வதற்கான சிறப்பு முகாம் நடத்த உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.


அனைத்து வகைப் பள்ளிகளிலும் இந்தப் பணியை சிறப்பாக நடத்திட மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் முதன்மை ஒருங்கிணைப்பாளராக இருந்து, மாவட்டக் கல்வி அலுவலர்கள், மெட்ரிக் பள்ளி ஆய்வாளர்கள் ஆகியோருடன் இணைந்து மேற்கொள்ள வேண்டும். பள்ளி வேலைநாள்களில் பள்ளி தொடங்கும் நேரம் முதல் மாலை 5.30 மணி வரையில் முகாம் நடத்தப்பட வேண்டும். விடுமுறை உள்பட அனைத்து நாள்களிலும் நடத்த வேண்டும். பள்ளி வேலை நாள்களில் வேலை நேரம் முடிந்த பின்பும், அனைத்து விடுமுறை நாள்களிலும் பொதுமக்கள் ஆதார் எண் பதிவு செய்வதற்கு அனுமதிக்கப்பட வேண்டும்.

பள்ளி ஆசிரியரையும், வகுப்பறையும் ஒதுக்க வேண்டும்: ஆதார் முகாம்களுக்கான ஒருங்கிணைப்பாளராக ஆசிரியர்களில் ஒருவரை அந்தப் பள்ளியின் தலைமையாசிரியர் நியமிக்க வேண்டும்.ஆதார் எண் பதிவு செய்யும் கருவிகளைப் பொருத்த ஒரு வகுப்பறைகளை ஒதுக்கி தேவையான வசதிகளைச் செய்ய வேண்டும். பதிவுகளை மேற்கொள்வதற்கான கால அட்டவணையையும் தயாரிக்க வேண்டும்.

பதிவு செய்யப்பட வேண்டிய மாணவர்களின் எண்ணிக்கை 100-க்கும் குறைவாக இருக்கிற பள்ளிகளைக் கண்டறிந்து, அந்தப் பள்ளிகளுக்கு அருகில் நடைபெறும் ஆதார் பதிவு செய்யும் முகாமை தொடர்பு மையமாக அமைத்து, இந்த மாணவர்களுக்கு ஆதார் பதிவுகள் மேற்கொள்ள வேண்டும்.

அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகளில் 100-க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பள்ளிகளின் எண்ணிக்கையைக் கண்டறிந்து அந்தப் பள்ளிகளுக்கு அருகில் நடைபெறும் எந்த முகாமில் அவர்கள் பங்கேற்க வேண்டும் என்ற கால அட்டவணையை மாவட்டக் கல்வி அலுவலர், மெட்ரிக் பள்ளி ஆய்வாளர் ஆகியோர் தயார் செய்ய வேண்டும். அந்தப் பள்ளிகளுக்கும் அட்டவணையை முன்கூட்டியே அளிக்க வேண்டும்.

முக்கியமான இந்தப் பணியில் தனிக் கவனம் செலுத்தி, தங்கள் மாவட்டத்தில் பயிலும் அனைத்து மாணவர்களும் ஆதார் அட்டை பெற்றுள்ளார்களா என்பதை உறுதி செய்து 100 சதவீத இலக்கை அடைந்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement