Ad Code

Responsive Advertisement

சென்னை ஆர்.கே.நகரில் அரசு கலைக்கல்லூரியை ஜெயலலிதா தொடங்கி வைத்தார்

சென்னையில் 41 ஆண்டுகளுக்கு பிறகு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை ஆர்.கே.நகரில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார்.

சட்டசபையில் அறிவிப்பு

டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் தொகுதியில் ஒரு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி துவங்கப்படும் என்று முதல்-அமைச்சர் ஜெயலலிதா 29.9.2015 அன்று சட்டமன்றப் பேரவையில் அறிவித்திருந்தார்.

அதன் அடிப்படையில், சென்னை, டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் தொகுதி, தண்டையார் பேட்டையில் அமைந்துள்ள சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான நடுநிலைப் பள்ளியில் புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி 2015-2016 ஆம் கல்வியாண்டு முதல் செயல்படுவதற்கு ஜெயலலிதா உத்தரவிட்டு, ஆசிரியர் மற்றும் பணியாளர் பணியிடங்கள் உருவாக்குதல், மரத்தளவாடங்கள், புத்தகங்கள், கணினிகள் வாங்குதல், கல்லூரிக்கு புதிய கட்டடம் கட்டுதல் ஆகிய செலவினங்களுக்கு 8 கோடியே

28 லட்சத்து 57 ஆயிரத்து 800 ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து ஆணையிட்டார்.

ஜெயலலிதா திறந்து வைத்தார்

அதன்படி, டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் தொகுதிக்குட்பட்ட தண்டையார் பேட்டையில் புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை முதல்-அமைச்சர் ஜெயலலிதா நேற்று காணொலிக் காட்சி மூலமாகத் திறந்து வைத்து, 5 மாணவ-மாணவிகளுக்கு கல்லூரி சேர்க்கை அனுமதி கடிதங்களை வழங்கினார். 

அப்போது, முதலமைச்சர் ஜெயலலிதா, நன்றாக படித்து முன்னுக்கு வரவேண்டும் எனவும், ஒளிமயமான எதிர்காலம் அமைய வேண்டுமெனவும் மாணவ, மாணவிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார். 

முதல்-அமைச்சர் ஜெயலலிதாவினால் நேற்று டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் தொகுதி, தண்டையார்பேட்டையில் திறந்து வைக்கப்பட்ட புதிய அரசுகலை மற்றும் அறிவியல் கல்லூரியானது, சென்னையில் 41 ஆண்டுகளுக்கு பிறகு தொடங்கப்பட்ட அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியாகும்.

இந்தநிகழ்ச்சியில் உயர்கல்வித்துறை அமைச்சர் பி.பழனியப்பன், தலைமைச் செயலாளர் கு.ஞானதேசிகன், அரசு ஆலோசகர் ஷீலாபாலகிருஷ்ணன், உயர்கல்வித் துறைச் செயலாளர் அபூர்வா, மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement