Ad Code

Responsive Advertisement

10ம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வு வினாத்தாள் தயாரிப்பில் மாற்றம்

பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வுகள், மார்ச்சில் நடைபெற உள்ளன. அதற்கான, வினாத்தாள் தயாரிக்கும் பணியை, தேர்வுத் துறை துவங்கியுள்ளது. இதற்காக, ஐந்துக்கும் மேற்பட்ட ரகசிய குழு அமைத்து, ஒவ்வொரு பாடத்துக்கும், பகுதிவாரியாக கேள்விகள் தயாரிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. இவ்வினாத்தாள்கள் கடினமாக இருக்கும்படி அமைக்கப்படவுள்ளதாக தெரியவருகிறது.


இதுகுறித்து, பள்ளிக்கல்வி மற்றும் தேர்வுத் துறை வட்டாரங்கள் கூறியதாவது:

ஒவ்வொரு ஆண்டும், நுாற்றுக்கு நுாறு, 'சென்டம்' எடுக்கும் மாணவர்; மாநில, 'ரேங்க்' பெறும் மாணவர் எண்ணிக்கை அதிகரிக்கிறது. இதற்கு எளிமையான கேள்விகளும், மதிப்பெண்ணில் காட்டப்படும் தாராளமும் காரணம். எனவே, மாணவர்கள் பாடங்களை புரிந்து படித்துள்ளனரா அல்லது மனப்பாடம் செய்துள்ளனரா என, அறிய முடிவதில்லை. இதை, சோதனை செய்யும் விதமாக, இந்த ஆண்டு வினாத்தாள்களை சற்று கடினமாக தயாரிக்க, அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். அதனால், வினாத்தாள் தயாரிக்கும் ஆசிரியர்களுக்கு, பாடங்களின் உள் அம்சங்களில் இருந்து, புதிய கேள்விகள் கேட்குமாறு, உத்தரவிடப்பட்டு உள்ளது.

எனவே, 10 மற்றும் பிளஸ் 2 தேர்வு வினாத்தாள், கடினமாக இருக்கும் என்பது உறுதியாகி உள்ளது. எனவே, முந்தைய ஆண்டு தேர்வுகளின் வினாத்தாள், கெய்டுகள், புத்தகத்தில் பின்பக்கத்தில் அச்சிடப்பட்டுள்ள வினாக்களை படித்தால் மட்டும் போதாது. பாடப்புத்தகத்தில் உள்ள வழக்கமான கேள்விகள் மட்டுமின்றி, பாடத்தின் முழு சாராம்சத்தையும் புரிந்து படித்தால்தான், அதிக மதிப்பெண் பெற முடியும்.இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

இதற்கிடையில், பாடப்புத்தகம் முழுவதையும், மாணவர்களை படிக்க வைக்குமாறு, அனைத்து ஆசிரியர்களுக்கும், அரசு தேர்வுகள் துறை இயக்குனர் வசுந்தரா தேவி அறிவுறுத்தி உள்ளார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement