Ad Code

Responsive Advertisement

ஆசிரியர்களே உண்மையான கல்வி நிபுணர்கள்: மணீஷ் சிசோடியா

"ஆசிரியர்களே, உண்மையான கல்வியியல் நிபுணர்கள்' என்று தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கூறினார். தில்லியிலுள்ள தனியார் பள்ளிகளின் ஆசிரியர்களுடன், துணை முதல்வரும், கல்வித் துறை அமைச்சருமான மணீஷ் சிசோடியா, வெள்ளிக்கிழமை கலந்துரையாடினார்.

அப்போது, அவர் பேசியதாவது:

இந்திய கல்வி முறையிலுள்ள குறைபாடுகளுக்கு, மெக்காலேவை குறை கூறி வருகிறோம். இன்னும் எத்தனை காலத்துக்குதான், அவரை குறை கூறுவோம்? நமது சொந்தமான கல்விக் கொள்கையை உருவாக்க வேண்டிய தருணத்தில் இருக்கிறோம். தில்லியிலுள்ள அரசுப் பள்ளிகளில் எட்டாம் வகுப்பு வரையிலான பாடத் திட்டங்களில் 25 சதவீதத்தை குறைப்பது தொடர்பாக ஆசிரியர்களிடம் பரிந்துரைகளை கேட்டோம். சுமார் 40,000 பரிந்துரைகள் வந்தன.

பாடத் திட்டங்களை குறைக்கும் விவகாரத்தில், நிபுணர் குழுக்களை அமைக்குமாறு எனது உதவியாளர்கள் சிலர் யோசனை கூறினர். பொதுவாக, இதுபோன்று அமைக்கப்படும் குழுக்களில் இடம்பெறுவோர், இடதுசாரி, வலதுசாரி, இடைநிலைவாதி என வெவ்வேறு கொள்கைகளை கொண்டவர்களாக இருப்பதை நான் அறிந்து கொண்டேன். அவர்களால் ஒருங்கிணைந்து பணியாற்ற இயலாது. ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கும், ஆசிரியர்களே, பாடத் திட்டங்களை மறுஆய்வு செய்ய தகுதியுடைவர்கள். ஆசிரியர்களே, உண்மையான கல்வியியல் நிபுணர்கள்.

தற்போதுள்ள பாடத் திட்டங்களில், தேவையற்ற பாடப் பகுதிகள் நீக்கப்படும். அதுபோல தேவையான பகுதிகளும், மறுஆய்வு செய்யப்படும். மாணவர்களுக்கு கற்பிக்கப்படும் ஒவ்வொரு வார்த்தையும் மிகவும் முக்கியமானது. தற்போது தொழில்நுட்பங்கள் நிறைந்த காலக் கட்டத்தில், மாணவர்கள் வளர்ந்து கொண்டிருக்கின்றனர். அதற்கு ஏற்றபடி, அவர்களை தயார் செய்ய வேண்டிய அவசியம் உள்ளது. 

கூகுள் பயன்பாட்டின் மூலம் மாணவர்களுக்கு பயனுள்ள தகவல்களை கற்பிக்க இயலும். தனியார் பள்ளிகளையும், அரசுப் பள்ளிகளையும் வேறுபடுத்த நான் விரும்பவில்லை. அரசுப் பள்ளிகளில் எட்டாம் வகுப்பு வரையிலான பாடத் திட்டங்களில், 25 சதவீதத்தை குறைக்கும் திட்டத்தை, வரும் அக்டோபர் மாதம் முதல் அமல்படுத்த உள்ளோம். இந்த விவகாரத்தில் தனியார் பள்ளிகளின் உரிமையையும், சுதந்திரத்தையும் பறிக்க மாட்டோம் என்றார் மணீஷ் சிசோடியா.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement