Ad Code

Responsive Advertisement

தொடங்கியது பி.எட். கலந்தாய்வு: முதல் நாளில் 78 பேருக்கு சேர்க்கைக் கடிதம்

ஆசிரியர் கல்வியியல் இளநிலை பட்டப் படிப்பான பி.எட். மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு திங்கள்கிழமை தொடங்கியது. முதல் நாளில் 78 பேர் சேர்க்கை கடிதங்களைப் பெற்றனர்.

மாணவர் சேர்க்கையை உயர் கல்வித் துறை அமைச்சர் பி.பழனியப்பன் தொடங்கி வைத்து, மாணவர்களுக்கு சேர்க்கைக் கடிதங்களை வழங்கினார்.

தமிழகம் முழுவதும் 21 அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் உள்ள 1,777 இடங்களில் 2015-16 கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வை விலிங்டன் சீமாட்டி கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம் நடத்துகிறது.

கலந்தாய்வின் முதல் நாளான திங்கள்கிழமை மாற்றுத் திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள் உள்ளிட்ட சிறப்புப் பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டுள்ள 98 இடங்களுக்கான சேர்க்கை நடத்தப்பட்டது.

கலந்தாய்வில் பங்கேற்க மொத்தம் 153 பேர் அழைக்கப்பட்டனர். அவர்களில் 78 பேர் இடங்களைத் தேர்வு செய்து சேர்க்கை கடிதங்களைப் பெற்றுச் சென்றனர். மீதமுள்ள 20 இடங்களுக்கு இந்த வார இறுதியில் கலந்தாய்வு நடத்தப்படும் என்று பி.எட். சேர்க்கை செயலர் பாரதி கூறினார்.கலந்தாய்வின் இரண்டாம் நாளான செவ்வாய்க்கிழமை கணிதப் பாடப் பிரிவினருக்கான பி.எட். சேர்க்கை நடத்தப்பட உள்ளது. மொத்தம் 346 இடங்களைக் கொண்ட இந்தப் பிரிவுக்கு 520 பேர் அழைக்கப்பட்டுள்ளனர்.

செப்டம்பர் 30-ஆம் தேதி இயற்பியல், வேதியியல் பிரிவினருக்கும், அக்டோபர் 1-ஆம் தேதி தாவரவியல், விலங்கியல் பிரிவினருக்கும், 3-ஆம் தேதி தமிழ், ஆங்கிலப் பாடப் பிரிவினருக்கும், 5-ஆம் தேதி காலையில் வரலாறு, புவியியல் வணிகவியல் பிரிவினருக்கும், மதியம் பொருளாதாரம், மனை அறிவியல் பிரிவினருக்கும் கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது.

கல்விக் கட்டணம் விரைவில் மாற்றியமைப்பு: கலந்தாய்வை தொடங்கிவைத்த உயர் கல்வித் துறை அமைச்சர் பழனியப்பன், பத்திரிகையாளர் கேள்விக்குப் பதிலளிக்கையில், சுயநிதி ஆசிரியர் கல்வியியல் கல்லூரிகளுக்கு கட்டணம் நிர்ணயம் செய்வது தொடர்பாக நீதிபதி பாலசுப்பிரமணியன் குழு ஆய்வு செய்து வருகிறது. விரைவில் கல்விக் கட்டணம் மாற்றியமைக்கப்படும் என்றார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement