Ad Code

Responsive Advertisement

இந்திய ராணுவத்தில் சேர இன்று முதல் இணையம் மூலம் விண்ணப்பிக்கலாம்

இந்திய ராணுவத்தில் சேருவதற்கு இணையம் மூலம் வெள்ளிக்கிழமை (ஜூலை 31) முதல் விண்ணப்பிக்கலாம்.இணையம் மூலம் விண்ணப்பித்தவர்களுக்கு ஆள்சேர்ப்பு முகாமில் பங்கேற்க அனுமதிக் கடிதம் அனுப்பப்படும். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை ஆகிய ஏழு மாவட்டங்கள், புதுச்சேரி மாநிலத்தில் உள்ளவர்களும் ராணுவ ஆள் சேர்ப்பு முகாமில் பங்கேற்கலாம். இதற்கான தேர்வு வரும் செப்டம்பர் 4 முதல் 13 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

இந்தத் தேர்வுக்கு ராணுவத்தின் இணையதளத்தின் (www.joinindianarmy.nic.in) மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். ராணுவப் படை வீரர்கள், இளநிலை அலுவலர்கள் ஆகிய பணியிடங்களில் காலியாகவுள்ள 700-க்கும் மேற்பட்ட இடங்களுக்கு தேர்வு நடைபெறுகிறது. அதில் பங்கேற்க, ஆன்-லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.


இணையம் மூலம் விண்ணப்பிக்கும் இந்த வசதி ஜூலை 31-ஆம் தேதி தொடங்கி, ஆகஸ்ட் 19-ல் நிறைவடைகிறது. விண்ணப்பதாரர்கள் அதிகளவு விண்ணப்பித்தால், கடைசி தேதி நீட்டிக்கப்படும். செல்லிடப்பேசி, கையடக்கக் கணினி ஆகியவற்றை பயன்படுத்தியும் ராணுவ இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க முடியும்.ராணுவ இணையதளத்தின் மூலம் விண்ணப்பித்தவுடன், சில நாள்களில் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு அழைப்புக் கடிதம் அனுப்பப்படும். 

சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு மின்னஞ்சல் மூலம் அந்தக் கடிதம் அனுப்பி வைக்கப்படும். அதனைப் பதிவிறக்கம் செய்து ஆள்சேர்ப்பு முகாம் நடைபெறும் இடத்துக்கு எடுத்து வர வேண்டும். விண்ணப்பதாரர்கள் முகாமில் பங்கேற்கும் தேதி, நேரம் ஆகியன அதில் குறிப்பிடப்பட்டிருக்கும்.தெளிவாகக் குறிப்பிட வேண்டும்: இணையதளத்தில் தகவல்களைப் பதிவு செய்யும் போது மிகவும் கவனமுடன் இருக்க வேண்டும். 

குறிப்பாக, கல்வித் தகுதி, பிறந்த தேதி, முகவரி ஆகிய விவரங்களைத் தெளிவாகக் குறிப்பிட வேண்டும். ஒருமுறை தகவல்களைப் பதிவு செய்தால் அதனை விண்ணப்பதாரர்கள் மாற்ற முடியாது. ஆள்சேர்ப்பு முகாமானது, புதுச்சேரியில் உள்ள இந்திரா காந்தி விளையாட்டு மைதானத்தில் நடைபெறுகிறது. ஆள்சேர்ப்பு முகாமில், முதல் கட்டத் தேர்வாக 1.6 கிலோமீட்டர் தூரத்தை 5.4 நிமிஷங்களில் ஓட வேண்டும். 
இதன்பின், உயரம், எடை, மார்பளவு ஆகியன அளவிடப்பட்டு மருத்துவ சோதனைக்கு உட்படுத்தப்படுவர். இதைத் தொடர்ந்து, எழுத்துத் தேர்வு நடைபெறும். இந்தத் தேர்வு அக்டோபர், நவம்பர் மாதங்களின் கடைசி ஞாயிறன்று நடத்தப்படும்.இந்தத் தகவல்களை ராணுவ ஆள்சேர்ப்புக்கான சென்னை மண்டல அலுவலக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement