Ad Code

Responsive Advertisement

தங்கம் விலை தொடர்ந்து சரிவு: பவுன் ரூ.18,864 -க்கு விற்பனை - விலை நிலவரம்

ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.216 குறைந்து, புதன்கிழமை ரூ.19 ஆயிரத்துக்கும் கீழ் விற்பனை செய்யப்பட்டது. மாலை நிலவரப்படி, ஒரு பவுன் ரூ.18,864-க்கு விற்பனையானது.

சர்வதேச சந்தையில் நிலவிய மாற்றத்தால், நிகழாண்டில் ஜனவரி முதல் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கமாகவே காணப்பட்டு வந்தது. கடந்த நான்கு மாதங்களுக்கும் மேலாக இதே நிலை நீடித்து வந்தது. ஜூன் மாதத்தில், ஒரு பவுன் தங்கம் ரூ.20 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரத்து 500 வரை விற்பனையானது.

அதன் பின்னர், தங்கம், வெள்ளி விலை படிப்படியாகக் குறைந்து வந்தது. இந்த நிலையில், ஜூலை மாதம் தொடக்கம் முதலே தங்கம் விலை சரிவைக் கண்டு வருகிறது. திங்கள்கிழமையன்று, ஒரே நாளில் பவுனுக்கு ரூ.256 குறைந்து, ரூ. 19,216-க்கு விற்பனையானது. அதைத் தொடர்ந்து, செவ்வாய்க்கிழமை பவுனுக்கு ரூ.136-ம், புதன்கிழமை 216-ம் குறைந்து காணப்பட்டது.

இதுகுறித்து சென்னை தங்கம், வைர வியாபாரிகள் சங்க பொதுச் செயலாளர் எஸ்.சாந்தகுமார் கூறியதாவது: இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் தங்கம் விலை கடும் சரிவைக் கண்டு வருகிறது. கடந்த நான்கு நாள்களில் மட்டும் பவுனுக்கு ரூ.608 வரை குறைந்துள்ளது. கிரீஸ் நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டதால், ஐரோப்பிய பங்கு சந்தையில் முன்னேற்றம் கண்டு வருகிறது.

இதன் காரணமாக, சர்வதேச அளவில் தங்கத்தின் விலை எதிர்பாராத அளவுக்கு வீழ்ச்சியடைந்து வருகிறது. கடந்த ஓரிரு மாதங்களாக, 1,225 டாலர்களாக இருந்த ஒரு அவுன்ஸ் தங்கம், புதன்கிழமை 1,092 டாலர்களாக குறைந்தது. இதுவே பிரதான காரணமாகும்.

பொதுவாக, ஆடி மாதத்தில் தங்கத்தின் தேவை குறைவாக இருப்பதால், அவற்றின் விலை குறைந்திருக்கும். அந்த மாதத்தின் 2-ஆவது வாரத்திலிருந்து, மீண்டும் தங்கம் விலை அதிகரிக்கத் தொடங்கும். இதே நிலை கடந்த ஐந்து ஆண்டுகளாக நீடித்து வருகிறது. அடுத்து வரும் நாள்களில், தங்கம் விலை மேலும் குறைய வாய்ப்புள்ளது என்றார் அவர்.

 புதன்கிழமை  விலை நிலவரம் (ரூபாயில்)
 ஒரு கிராம் தங்கம் 2,358
 ஒரு பவுன் தங்கம் 18,864
 ஒரு கிராம் வெள்ளி 36.20
 ஒரு கிலோ வெள்ளி 33,825
 செவ்வாய்க்கிழமை 
 விலை நிலவரம் (ரூபாயில்)
 ஒரு கிராம் தங்கம் 2,385
 ஒரு பவுன் தங்கம் 19,080
 ஒரு கிராம் வெள்ளி 36.40
 ஒரு கிலோ வெள்ளி 34,030

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement