Ad Code

Responsive Advertisement

பள்ளி வேன்கள், ஆட்டோக்கள்...விதிமீறல்:மாணவர்கள் ஆபத்தான பயணம்

அரசு உத்தரவுகளை பின்பற்றாமல், விதிகளை மீறி செயல்படும் பள்ளி வாகனங்களில் மாணவ, மாணவிகள் தினமும் ஆபத்தான பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. ராமநாதபுரம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் தினமும் காலை, மாலை நேரங்களில் பள்ளி வாகனங்கள் இயக்கப்படுகின்றன.

ஒரு சில தனியார் பள்ளி வாகனங்களில் அளவுக்கு அதிகமாக மாணவர்களை ஏற்றிச் செல்கின்றனர். பள்ளி வாகனங்களை எளிதில் அடையாளம் காணும் வகையில், மஞ்சள் நிற பெயின்ட் பூசி, "பள்ளி வாகனம்' என குறிப்பிட்டிருக்க வேண்டும். பள்ளி வாகனத்தில் வேக கட்டுப்பாட்டு கருவி பொருத்தி இருக்க வேண்டும். எந்த வழக்கும் இல்லை என்ற போலீசாரின் சான்றிதழ் பெற்ற ஓட்டுனரை பணி யமர்த்த வேண்டும், என பல்வேறு விதிமுறைகளை அரசு பிறப்பித்துள்ளது.

ஆனால், ராமநாதபுரம், பரமக்குடி, ஆர்.எஸ். மங்கலம்,தேவிபட்டினம் பகுதிகளில் மஞ்சள் நிறம் இல்லாமல் பல வண்ணங்களில் "பெயின்ட்' பூசப்பட்ட வாடகை வேன்களை சில தனியார் பள்ளிகள் பயன்படுத்தி வருகின்றன. நிரந்தர டிரைவர் இல்லாமல் அவ்வப்போது கிடக்கும் "ஆக்டிங்' டிரைவர்கள் மூலம் பள்ளி வாகனங்கள் இயக்கப்படுகின்றன. இது மட்டுமின்றி ஆட்டோக்கள், சரக்கு வேன்களில் அளவுக்கு அதிகமான குழந்தைகளை ஏற்றி செல்வதும் தொடர்கிறது.

இத்தகைய வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய போலீசார் கண்டும் காணாமல் இருந்து வருகின்றனர். வீதிகளை மீறி செயல்படும் பள்ளி வாகனங்களால் தங்களது குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படுமோ என்ற அச்சம் பல பெற்றோர்கள் மத்தியில் உள்ளது. அரசு விதிமுறைகளை பின்பற்றாத பள்ளி வாகனங்கள் மீது அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

*ராமநாதபுரம் வட்டாரப் போக்கு வரத்து அலுவலர் ஷேஹ் முகமது கூறுகையில், "" பள்ளி வாகனங்கள் வேலை நாட்களில் பழுதனால், அப்பள்ளியின் மாற்று வாகனத்தை மட்டும் பயன்படுத்த வேண்டும். மாற்று வாகனம் இல்லாத பள்ளிகள் அரசு பஸ்கள் மூலம் மாணவர்களை அழைத்து வர ஏற்பாடு செய்து கொள்ளலாம். வாகன வசதியில்லாத கல்வி நிறுவனங்கள் தனியார் வாகனங்களை ஒப்பந்த அடிப் படையில் வாடகைக்கு அமர்த்தினால், அந்த வாகனங்களை பள்ளி பணிக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

இருக்கைக்கு அதிகமாக மாணவர்களை ஏற்றிச்சென்றால் அபராதம் விதிக்கப்படும். இதே தவறு மீண்டும் தொடர்ந்தால்,அந்த வாகனம் பறிமுதல் செய்யப்படும்,'' என்றார்.

முதன்மைக்கல்வி அலுவலர் ஜெயக்கண்ணு கூறுகையில், ""மாணவர்களை பள்ளி வாகனங்களில் அழைத்துச் செல்வதை வட்டார போக்குவரத்து அலுவலர்கள் கண்காணிக்கின்றனர். இதில் கல்வித்துறையின் பங்கு எதுவும் இல்லை. வாகன ஆய்வின்போது சம்பிதாயத்திற்காக உடன் இருப்போம்,'' என்றார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement