Ad Code

Responsive Advertisement

தலைக் கவசம் சில சந்தேகங்கள்...?

இரு சக்கர வாகன ஓட்டுநர்களும், பின்னால் அமர்ந்திருப்பவர்களும் தலைக்கவசம் அணிவது அவசியம் என்ற அறிவிப்பு அனைவரையும் அதிருப்தி அடையச் செய்துள்ளது. தமிழகம் முழுவதும் ஜூலை 1 முதல் இருசக்கர வாகன ஓட்டுநர்களும், அவருடன் பின்னால் அமர்ந்திருப்பவர்களும் தலைக்கவசத்தை கண்டிப்பாக அணிய வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டுள்ளது. 

 இதன்படி, தலைக்கவசம் அணியாதவர்களின் வாகன ஓட்டுநர் உரிமம், வாகன உரிமப் புத்தகம் உள்ளிட்ட ஆவணங்கள் பறிமுதல் செய்யப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

 பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் விடுவிக்கப்பட வேண்டும் எனில், வாகன ஓட்டிகள் ஐஎஸ்ஐ முத்திரையுடன் கூடிய தலைக்கவசம், அதற்கான ரசீதை கொண்டு வந்து காட்டி ஆவணங்ளைப் பெற்றுச் செல்லலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 இதுதொடர்பான உத்தரவை செயல்படுத்த போலீஸாரும், மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலத்தினரும் மும்முரமாக, பிரசாரம் மேற்கொண்டுள்ளனர். 

 இந்த நிலையில், தலைக்கவச அறிவிப்பு அனைத்துத் தரப்பினரின் அதிருப்தியை சந்தித்துள்ளது என்பதே உண்மை என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

 வாகனங்களைப் பறிமுதல் செய்யும் அதிகாரம் கிடையாது!

 இதுகுறித்து வழக்குரைஞர்கள் சிலர் கூறியதாவது:

 தலைக்கவசம் அணியவில்லை என்றால் மோட்டார் வாகனச் சட்டப்படி அபராதம் மட்டுமே விதிக்க முடியும். வாகனத்தையோ, ஓட்டுநர் உரிமத்தையோ பறிமுதல் செய்யவோ, ரத்து செய்யவோ முடியாது. இதைவிடுத்து, வாகனங்களைப் பறிமுதல் செய்வோம் என மிரட்டுவது தவறானது என்றனர்.

 பள்ளிக் குழந்தைகளுக்கு எப்படி தலைக்கவசம் அணிவிப்பது?
 பள்ளிகளில் குழந்தைகளை அனுப்பச் செல்லும்போது, அவர்களுக்கு எப்படி தலைக்கவசம் அணிவிப்பது என்று பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:

 வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணிவது கட்டாயம். அதற்கு மறுப்பு தெரிவிக்க முடியாது. ஆனால் பின்னால் அமர்ந்திருப்பவரும் அணிய வேண்டும் என்பது மக்களை நெருக்கடிக்கு ஆளாக்கும் செயலாகும். 
 ஒருவர் தங்களது இரு பிள்ளைகளை பள்ளிக்கு இரு சக்கர வாகனத்தில் அழைத்துச் செல்லும்போது தினசரி அவசரத்தில் அவர்களுக்கு தலைக்கவசம் அணிவித்து, பின்னர் அதை பத்திரமாக வாகனத்தில் தொங்க விடுதல், அல்லது பள்ளியில் பிள்ளைகள் அதைப் பாதுகாத்தல் போன்ற பல நடைமுறை சிக்கல்கள் உள்ளன. ஆகையால் அதை ரத்து செய்ய வேண்டும் என்றனர்.

 இரண்டு தலைக்கவசத்தையும் எடுத்துச் செல்ல முடியுமா?
 இதுதொடர்பாக சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: வாகன ஓட்டிகள் தலைக் கவசம் அணிவது கட்டாயம் என்ற அறிவிப்பு மகிழ்ச்சியானது.

 ஆனால் பின்னால் அமருபவர்கள் அணிய வேண்டும் என்பது நடைமுறையில் சாத்தியமற்றது.

 ஒரு நபர் அவருக்கும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு 2 தலைக்கவசம் வீட்டில் வைத்திருந்தாலும் வெளியில் செல்லும்போது தொழில் நிமித்தமாகவோ, அல்லது வேறு ஏதாவது அவசரத்திலோ வெளி நபர்களை தங்களது இரு சக்கர வாகனத்தில் அழைத்துச் செல்லும் கட்டாயம் ஏற்படும். 

 அந்த நேரத்தில் அவருக்கு தலைக்கவசத்தை தேடுவதும், அது இல்லை என்பதால் அவரை ஏற்றிச் செல்லாமலும் இருக்க முடியாது. இது நடைமுறைக்கு ஒத்து வராது.

 உதவி செய்யவும் முடியாது?

 ஒருவர் வாகனத்தில் செல்லும்போது, தெரிந்தவரோ அல்லது தெரியாதவோ வழியில் தங்களை அழைத்துச் சென்று செல்லும் பாதையில் விட்டுவிடுமாறு "லிப்ட்' கேட்பதும் உண்டு. பேருந்துக்காகவும், ஆட்டோக்காகவும் சில மணி நேரம் நின்று அவை கிடைக்காமல் போகும்போது, "லிப்ட்' கேட்டு பலரும் செல்வர்.

 உதவி செய்ய வரும் வாகன ஓட்டி "லிப்ட்' கேட்டு வருவோருக்கு எப்படி தலைக்கவசம் தருவார்? 

 அரசு மதுபானக் கடைகளை மூடுதல், மத்திய, மாநில நெடுஞ்சாலைகளை அகலப்படுத்தி சீரமைப்பதும் விபத்தைத் தவிர்க்கும் வழியாகும். 

 மேலும் 15 வயது சிறுவர்கள் ஓட்டுநர் உரிமம் பெறும் தகுதி பெறாத நிலையிலேயே பள்ளிக்கு இரு சக்கர வாகனங்களில் வருவதும், அதுவும் 3 அல்லது 4 நபர்களாக வருவதையும் தடுத்தாலே விபத்துகள் பெருமளவு குறையும். 

 4 பேர் அமரக் கூடிய ஆட்டோவில் 10 பேரை அடுக்கிச் செல்லும் ஆட்டோக்களை கட்டுப்படுத்தினாலும் விபத்துக்கள் குறையும். இதுகுறித்து அரசும் உயர் நீதிமன்றமும் மறு ஆய்வு செய்ய வேண்டும் என்றனர்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement