Ad Code

Responsive Advertisement

இப்போதே திட்டமிட்டால் அதிக மதிப்பெண்: மாநில ரேங்க் மாணவிகள் திட்டவட்டம்

"தேர்விற்காக கடைசி நேரத்தில் அவசரகதியில் மாங்கு... மாங்கு... என படித்து பதட்டத்துடன் தயாராவதை விட கல்வியாண்டு துவக்கம் முதல் திட்டமிட்டு படித்தால் அதிக மதிப்பெண் பெறுவதுடன் தேவையில்லாத அவஸ்தையை தவிர்க்கலாம்" என மதுரை சாதனை மாணவிகள் பார்வதி, சசிகலா தெரிவித்தனர்.

பிளஸ் 2 தேர்வில் பிறமொழி பாடப் பிரிவில் மாநில அளவில் இரண்டாம் இடம் பெற்ற மதுரை ஜீவனா பள்ளி மாணவி பார்வதி கூறியதாவது: பிளஸ் 2 என்றால் 1200க்கு இத்தனை மதிப்பெண்கள் எடுக்க வேண்டும் என்பது தான் மாணவர்கள் லட்சியமாக இருக்கும். இந்த எண்ணத்தில் மாற்றம் வேண்டும். அதாவது பாடவாரியாக 200க்கு இத்தனை மதிப்பெண் பெற வேண்டும் என்ற சிறிய குறிக்கோளை ஏற்படுத்தினால் நாம் நினைத்த வெற்றி எளிதில் கிட்டும். படிப்பதற்கு அதிகாலையை தேர்வு செய்வது நல்லது. பிளஸ் 2 வந்தவுடன் கல்லூரியில் எந்த படிப்பை தேர்வு செய்ய வேண்டும் என்பதை தீர்மானித்து அப்பாடத்தில் ஆர்வத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும். படிப்பதில் 'விருப்பம்' என்பது முக்கியம். அடிக்கடி எழுதிப் பார்க்கலாம். அறிவியல் பகுதியில் படங்களை வரைந்து பழகிக்கொள்ள வேண்டும். எப்படி தான் படித்தாலும் கேள்விக்கு விடை எழுதுவது மிக முக்கியம். கையெழுத்து நன்றாக இருக்க வேண்டும். பிழை, அடித்தல் திருத்தல் இருக்கக் கூடாது. பெற்றோரும், பள்ளி நிர்வாகமும் மாணவர்களுக்கு படிக்கும் சூழலை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். மொழிப்பாடங்களை முதலில் படித்து விட்டு மெயின் பாடங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து படிக்க வேண்டும்.

பத்தாம் வகுப்பில் மாநில முதலிடம் பிடித்த டி.கல்லுப் பட்டி வெங்கடேஸ்வரா மெட்ரிக் பள்ளி மாணவி சசிகலா கூறியதாவது: ஆசிரியர்கள் அன்றாடம் வகுப்பில் நடத்தும் பாடங்களை வீட்டிற்கு சென்று படிப்பதை வழக்கமாக கொள்ளவேண்டும். சந்தேகம் இருப்பின் அதை குறித்துக்கொண்டு மறுநாள் ஆசிரியரிடம் விளக்கம் கேட்டு தெளிவடைந்தால் அந்த சந்தேகம் நமக்கு மறக்காமல் இருக்கும். படிப்பின் மீதான ஆர்வத்தை நாம் முதலில் வளர்த்துக்கொள்ள வேண்டும். அறிவியல் பாடங்களில் நேரம் கிடைக்கும் போதெல்லாம் படங்களை வரைந்து பாகங்களை குறித்துப் பார்க்கலாம். 5 மதிப்பெண் மற்றும் நெடு வினாக்களை குறிப்பிட்ட நேரத்திற்குள் எழுதி முடிக்க பலமுறை நேரம் வைத்து எழுதிப் பார்க்கலாம். பள்ளியில் நடக்கும் திருப்புதல் தேர்வுகளை மாணவர்கள் தவறவிடக் கூடாது. 'புக்பேக்' வினாக்கள் தவிர பாடங்களை முழுவதும் படித்து, நாமே வினாக்களை உருவாக்கி படிக்கலாம். ஆசிரியர்களின் ஆலோசனைகளை அலட்சியப்படுத்தாமல் படித்தாலே அதிக மதிப்பெண்ணை எட்டிப் பிடிக்கும் சாத்தியம் எளிதில் கிட்டும். இவ்வாறு தெரிவித்தார். புதிய கல்வி ஆண்டில் காலடி வைக்கும் மாணவர்களுக்கு, மாநில ரேங்க் மாணவிகளின் வாழ்த்துக்கள்!

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement