Ad Code

Responsive Advertisement

அரசு பள்ளி தேர்ச்சி சரிந்ததால் கலக்கம்! விசாரணை நடத்த அதிரடி உத்தரவு

 திருப்பூர் மாவட்டத்தில், தேர்ச்சி குறைந்த அரசு பள்ளிகளில், கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளதால், ஆசிரியர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.

கடந்த, 7ல் பிளஸ் 2 தேர்வு முடிவும், 21ல் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவும் வெளியாகின. கடந்தாண்டை விட, சில மாவட்டங்கள் தேர்ச்சி விகிதத்தில் முன்னேற்றம் அடைந்துள்ளன. பல மாவட்டங்களில் மாணவ, மாணவியர் மாநில அளவில் முதல் மூன்று இடங்களை பெற்றது, கல்வித்துறை அதிகாரிகளை உற்சாகமடைய செய்துள்ளது. எனினும், சில மாவட்டங்களில் கடந்தாண்டை காட்டிலும், பொதுத்தேர்வுகளில் தேர்ச்சி விகிதம் குறைந் துள்ளது. கடந்த முறை நூறு சதவீத தேர்ச்சி பெற்ற பள்ளிகள், இம்முறை அவ்வாய்ப்பை இழந்துள்ளன.

பொதுத்தேர்வில் தேர்ச்சி விகிதம் அதிகரிக்க, மூன்று மாவட்டங்களுக்கு ஒருவர் வீதம், மாநிலம் முழுவதும் பள்ளி கல்வித்துறை இணை இயக்குனர்கள் நியமிக்கப்பட்டனர். அவர்களது தலைமையில், மாவட்டம் வாரியாக ஆலோசனை கூட்டங்கள் நடத்தப்பட்டு, தேவையான ஆலோசனைகள் வழங்கப்பட்டன. அப்படியிருந்தும், அரசு பள்ளி களில் தேர்ச்சி விகிதம் குறைந்திருப்பதால், விசாரணை நடத்தி ஆய்வறிக்கை தருமாறு, இணை இயக்குனர்களுக்கு பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

அதன்படி, மாவட்டம் வாரியாக இணை இயக்குனர்கள் விரைவில் விசாரணை நடத்த உள்ளனர். இணை இயக்குனர்களின் அறிவுறுத்தல்களை முறையாக பின்பற்றாமல், தேர்ச்சி விகிதத்தில் பின்தங்கிய கல்வி மாவட்ட அதிகாரிகள், குறிப்பிட்ட பள்ளி தலைமை ஆசிரியர் மீது பள்ளி கல்வித்துறை நடவடிக்கை எடுக்கவும் வாய்ப்புள்ளதால், ஆசிரியர்கள் பலர் கலக்கத்தில் உள்ளனர்.

திருப்பூர் மாவட்டத்தை பொறுத்தவரை, பிளஸ் 2 தேர்வில் மாநில அளவில் முதலிடம்; பத்தாம் வகுப்பு தேர்வில் மாநில அளவில் முதல் மூன்று இடங்களை, 37 மாணவ, மாணவியர் பிடித்தது, நூறு சதவீத தேர்ச்சியில் அரசு பள்ளிகள் எண்ணிக்கை உயர்வு போன்றவை பக்கபலமாக உள்ளன. இருந்தாலும், அரசு பள்ளிகளில் கடந்த முறை நூறு சதவீதம் தேர்ச்சியடைந்த, 13 பள்ளிகள் இம்முறை அவ்வாய்ப்பை நழுவ விட்டுள்ளன. அதனால், தேர்ச்சி விகிதத்தில் பின்தங்கிய நிலையில் இருக்கும் பள்ளி ஆசிரியர்கள் கவலையில் உள்ளனர்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement