Ad Code

Responsive Advertisement

அடங்காத மாணவர்களை கண்டு அலறும் ஆசிரியர்கள்

புதுச்சேரி பிளஸ்2 தேர்வில் அரசு பள்ளிகளின் தேர்ச்சி சதவீதம் வெகுவாக குறைந்து போனது. இதனால் அரசு பள்ளிகளில் பிள்ளைகளை சேர்க்க பெற்றோர்கள் தயக்கம் காட்டி வருகின்றனர். நடந்து முடிந்த பத்தாம் வகுப்பு தேர்வில் அரசு பள்ளிகளின் மொத்த தேர்ச்சி சதவீதம் 87.07 ஆக இருந்தது. 

இதில் அரசு பள்ளிகளில் கடைசி மூன்று இடங்களை குருசுக்குப்பம் என் கேசி 56.25 சதவீதமும், திருவிக உயர்நிலைப்பள்ளி- 51.90 சதவீதமும், மாநில அள வில் சுபாஷ் சந்திரபோஸ் பள்ளி 29.41 சதவீதத்தை பெற்று கடைசி இடத்தை பெற்றுள்ளது. அரசு பள்ளிகளின் தேர்ச்சி சதவீதம் குறைவதற்கு தரத்தை மட்டுமே காரணமாக கூறப்படுகிறது. ஆனால் அதில் உண்மையில்லை.

 தனியார் பள்ளிகளை விட அரசு பள்ளிகளில் அனைத்து வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளது. ஒரு பள்ளியின் மாணவன் அந்த பள்ளி தலைமையாசிரியர், பாடம் நடத்தும் ஆசிரியர்கள் கட்டுப்பாட்டின் கீழ் இருக்க வேண்டும். ஆனால் ஒரு சில அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் கட்டுப்பாட்டின் கீழ் மாணவர்கள் இல்லை. மாணவர்களுக்கு பயப்படும் நிலையில் ஆசிரியர்கள் உள்ளனர். இந்த பள்ளிகளில் ஆசிரியர் பணியிடத்துக்கு பலர் விரும்புவதில்லை. அதில் பெரியார் நகரில் உள்ள சுபாஷ் சந்திரபோஷ் பள்ளியின் பெயரை கேட்டாலே ஆசிரியர்கள் அலறுகின்றனர். வகுப்புகள் நடக்கும் போது மாணவர்கள் வெளியே சென்று விளையாடுவதை அங்கே பார்க்க முடியும். 

அவர்களை எந்த ஆசிரியரும் கண்டிக்க முடியாது. இப்படி கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு மாணவனை கண்டித்த ஆசிரியரை ஒரு குறிப்பிட்ட கட்சி பிரமுகர்கள் பள்ளிக்கே வந்து மிரட்டி சென்றுள்ளனர். இந்த சம்பவத்துக்கு பிறகு மாணவர்கள் தலைமையாசிரியர் உள்ளிட்ட எவரையும் மதிப்பதில்லை. தலைமை ஆசிரியரின் முன்னிலையிலே அறை வாசல் கதவில் ஊஞ்சல் ஆடுவது, வகுப்பறையில் விளையாடுவது, தட்டிக் கேட்கும் ஆசிரியர்களை ஆபாச வார்த்தைகளால் அர்ச்சிப்பது என எல்லை மீறிக் கொண்டிருக்கிறார்கள் மாணவர்கள். இப்படி அடங்காமல் சுற்றும் மாணவர்களை கண்டிக்கும் வகையில் கண்டிப்பான தலைமை ஆசிரியர் இல்லாமல் போனதே இதற்கெல்லாம் மூலக் காரணம் என தெரியவந்துள்ளது. 

அடங்காத மாணவர்களை பள்ளியில் இருந்து வெளியேற்றும் கண்டிப்பான ஆசிரியர்களை அங்கே நியமிக்க வேண்டும். பள்ளியில் ஆய்வு நடத்தினால் இந்த உண்மைகள் எல்லாம் வெளிவரும் என மாணவர்கள் நலனில் அக்கறை கொண்டவர்கள் கூறுகின்றனர். அரசு பள்ளிகளில் கல்வித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து தவறுகளை களைய வேண்டும். ஆசிரியர்களுக்கு உரிய பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். சுபாஷ் சந்திரபோஸ் அரசு பள்ளியில் 1ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை 53 பேர் படிக்கின்றனர். நடந்து முடிந்த தேர்வில் 17 பேரில் 5 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். தற்போது பத்தாம் வகுப்பில் 18 பேர் உள்ளனர். இதே நிலை நீடித்தால் அடுத்தாண்டு தேர்ச்சி சதவீதம் பூஜ்யமாகிவிடும் என தெரிவிக்கின்றனர். 

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement