Ad Code

Responsive Advertisement

பள்ளி ஆய்வக உதவியாளர் பணிக்கு இன்று தேர்வு

தமிழகத்தில் பள்ளி ஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்கான தேர்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது. தமிழகம் முழுவதும் 1,800 மையங்களில் 8 லட்சத்து 96 ஆயிரம் பேர் தேர்வு எழுதுகின்றனர். தமிழகத்தில் உள்ள அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 4,362 ஆய்வக உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன.

இதற்கு விண்ணப்பிக்க குறைந்தபட்ச கல்வித் தகுதி 10-ஆம் வகுப்பு தேர்ச்சி ஆகும். 8.96 லட்சம் பேர்: இந்தப் பணியிடங்களுக்கு தேர்வு நடத்தி ஆய்வக உதவியாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர். போட்டித் தேர்வுக்கு ஏப்ரல் 24-ஆம் தேதி முதல் மே 6-ஆம் தேதி வரை இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது.

அந்தந்த மாவட்டங்களில் உள்ள சிறப்பு சேவை மையங்களில் இணையதளம் மூலம் விண்ணப்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. மாநிலம் முழுவதும் உள்ள 4,362 பணியிடங்களுக்கு மொத்தம் 8 லட்சத்து 96 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். 10-ஆம் வகுப்பு தேர்ச்சி என்ற கல்வி தகுதியைக் கொண்ட இந்தப் பணியிடங்களுக்கு முதுநிலை பட்டதாரிகளும், பொறியியல் பட்டதாரிகளும் ஆயிரக் கணக்கில் விண்ணப்பித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
1,800 மையங்கள்: பள்ளிக் கல்வித் துறை இந்தத் தேர்வை நடத்துகிறது.

தமிழகத்தில் மொத்தம் 1,800 மையங்களில் காலை 10 முதல் 12.30 மணி வரை தேர்வு நடைபெறும். தேர்வில் முறைகேடுகள் நடைபெறாமல் கண்காணிப்பதற்கு கல்வித் துறை அதிகாரிகள் தலைமையில் பறக்கும் படையும், அந்தந்த மாவட்ட ஆட்சியர் தலைமையில் வருவாய்த் துறை அதிகாரிகள் அடங்கிய பறக்கும் படையும் அமைக்கப்பட்டுள்ளன. மாவட்ட அளவில் தேர்வைக் கண்காணிக்க இயக்குநர்கள், இணை இயக்குநர்கள் என 25-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தேர்வு நடைபெறும் அனைத்து மையங்களுக்கும் பலத்த காவல்துறை பாதுகாப்பு அளிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
நேர்காணல்: பணி நியமனம் அந்தந்த மாவட்ட அளவில் நடைபெறும். ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் எழுத்துத் தேர்வில் வெற்றி பெறுவோரிலிருந்து 1:5 என்ற விகிதத்தில் தேர்வர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவர்.
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் உள்ளிட்டோர் நேர்முகத் தேர்வு நடத்தும் குழுவில் இடம்பெற்றிருப்பர்.
நேர்முகத் தேர்வு மொத்தம் 25 மதிப்பெண்ணுக்கு நடத்தப்பட உள்ளது. அதில் தேர்வு செய்யப்படுவோருக்கு பணி நியமன ஆணை வழங்கப்படும்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement