Ad Code

Responsive Advertisement

பிளஸ் 2 மறு கூட்டல்: விடைத்தாள் நகல்களை இன்று முதல் பதிவிறக்கம் செய்யலாம்

பிளஸ் 2 இயற்பியல், வேதியியல், உயிரியல், கணிதம் ஆகிய பாடங்களில் விடைத்தாள் நகல்களைக் கோரி விண்ணப்பித்த மாணவர்கள் வியாழக்கிழமை (மே 28) முதல் பதிவிறக்கம் செய்யலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

 பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 7-ஆம் தேதி வெளியிடப்பட்டன. மொத்தம் 8 லட்சத்துக்கும் அதிகமானோர் எழுதிய இந்தத் தேர்வில் 90.6 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். முக்கிய பாடங்களில் மதிப்பெண் குறைந்ததால், இந்த ஆண்டு விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 9 ஆயிரமாக அதிகரித்தது.

 விண்ணப்பித்தவர்களின் விடைத்தாள்களை ஸ்கேன் செய்யும் பணி கடந்த 2 வாரங்களாக நடைபெற்று வந்த நிலையில், இயற்பியல், வேதியியல், உயிரியல், கணிதம் ஆகிய பாடங்களுக்கான விடைத்தாள் நகல்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.
 இது தொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:-

 பிளஸ் 2 விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்த மாணவர்கள் வியாழக்கிழமை (மே 28) காலை 10 மணி முதல் scan.tndge.in என்ற இணையதளத்தில் தங்களது பதிவு எண், பிறந்த தேதியைப் பதிவு செய்து தாங்கள் விண்ணப்பித்த பாடங்களுக்குரிய விடைத்தாள் நகலைப் பதிவிறக்கம் செய்யலாம்.

 பிற பாடங்களுக்கான விடைத்தாள் நகல்களைப் பதிவிறக்கம் செய்யும் தேதி பின்னர் அறிவிக்கப்படும். விடைத்தாள் நகலினை பதிவிறக்கம் செய்த பிறகு மறுகூட்டல், மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க விரும்பினால், இதே இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும்.

 இந்த விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து, இரு நகல்கள் எடுத்து ஜூன் 1-ஆம்  தேதி மாலை 5 மணிக்குள் உரிய முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.   மறுகூட்டல், மறுமதிப்பீட்டிற்கான கட்டணத்தை முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் பணமாகச் செலுத்த வேண்டும்.

 விடைத்தாள் நகல், மறுமதிப்பீடு தொடர்பாக தேர்வர்களுக்கு எழும் சந்தேகங்களைத் தெளிவுப்படுத்த கட்டுப்பாட்டு அறைகள் திறக்கப்பட்டுள்ளன. 
 8012594109, 8012594119, 8012594124, 8012594126 ஆகிய எண்களில் கட்டுப்பாட்டு அறையைத் தொடர்புகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 22 ஆயிரம் பேர் கூடுதலாக விண்ணப்பம்: பி.இ., எம்.பி.பி.எஸ். போன்ற படிப்புகளில் சேருவதற்குரிய முக்கியப் பாடமான இயற்பியல் பாடத்தில் 200-க்கு 200 மதிப்பெண் எடுத்தவர்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு வெகுவாக சரிந்தது. முந்தைய ஆண்டில் 2,710 பேர் முழு மதிப்பெண் பெற்ற நிலையில், அது இந்த ஆண்டு 124 ஆகக் குறைந்துவிட்டது.

 பிற முக்கியப் பாடங்களான வேதியியல், உயிரியல் பாடங்களிலும் முழு மதிப்பெண் பெற்றவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு குறைந்துவிட்டது. பொறியியல், மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கு முக்கியப் பாடங்களில் ஒவ்வொரு மதிப்பெண்ணும் முக்கியம் என்பதால், இந்த ஆண்டு விடைத்தாள் நகல் கோரி 22 ஆயிரம் பேர் கூடுதலாக விண்ணப்பித்துள்ளதாக கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

 கடந்த ஆண்டு 87 ஆயிரம் மாணவர்கள் விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்தனர்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement