Ad Code

Responsive Advertisement

பல வங்கிகளில் கணக்குகள் வைத்திருந்தால் தெரிவிப்பது கட்டாயம்: வெளிநாட்டு பயண விவரமும் தர வரிகள் வாரியம் உத்தரவு!

வெளிநாடுகளில் உள்ள வங்கிகளில், இந்தியர்கள் பதுக்கியுள்ள கறுப்பு பணத்தை மீட்க, பல நடவடிக்கைகளை எடுத்துள்ள மத்திய அரசு, உள்நாட்டில் கறுப்பு பண புழக்கத்தை கட்டுப்படுத்தவும், வியூகங்களை வகுத்து வருகிறது. அவற்றில் ஒன்றாக, 'ஒன்றுக்கு மேற்பட்ட வங்கி கணக்குகளை வைத்திருப்போர், பல வங்கிகளில் கணக்கு வைத்திருப்போர் அவை குறித்த விவரங்களை வருமான வரித் துறைக்கு தெரிவிக்க வேண்டும். இது, கட்டாயம்' என, மத்திய நேர்முக வரிகள் வாரியம் அறிவித்துள்ளது.


நடப்பு, 2015 - 16ம் நிதியாண்டிற்காக, புதிய வருமான வரி தாக்கல் படிவத்தை, மத்திய நேர்முக வரிகள் வாரியம் தயாரித்துள்ளது. அதில், ஏற்கனவே அமலில் உள்ள படிவத்தில் இடம் பெறாத, பல புதிய அம்சங்களை சேர்த்துள்ளது. 


தொகை விவரம்:

அதன்படி, புதிய ஐ.டி.ஆர்., -1 மற்றும் ஐ.டி.ஆர்., - 2, படிவங்கள் வாயிலாக, வருமான வரி கணக்கு தாக்கல் செய்வோர், எத்தனை வங்கிகளில், தங்களுக்கு கணக்குகள் உள்ளன என்பதையும், கடந்த மார்ச் மாத நிலவரப்படி, அந்தக் கணக்குகளில் இருந்த தொகை குறித்த விவரத்தையும் தெரிவிக்க வேண்டும். கடந்த நிதியாண்டில், புதிதாக துவக்கப்பட்ட அல்லது முடிக்கப்பட்ட வங்கி கணக்குகளும் இதில் அடங்கும்.வங்கியின் பெயர், கிளை, கணக்கு எண், ஐ.எப்.எஸ்.சி., குறியீடு எண், கூட்டு கணக்கா அல்லது தனிநபர் கணக்கா என்பதை தெரிவிக்க வேண்டும். அத்துடன், கடந்த நிதியாண்டில் வெளிநாடு சென்றிருந்தால் அதுபற்றிய விவரங்கள், பாஸ்போர்ட் எண், பாஸ்போர்ட் வழங்கிய அலுவலகம், சென்ற நாடுகள், பயணங்களின் எண்ணிக்கை, பயணச் செலவுகள், அவற்றுக்கான நிதியாதாரம் போன்ற விவரங்களையும் கட்டாயம் குறிப்பிட வேண்டும். இதுதவிர, 'ஆதார்' எண் விவரத்தையும் குறிப்பிட, தனி பிரிவும், படிவங்களில் சேர்க்கப்பட்டு உள்ளது. 
மேல் நடவடிக்கை:

இந்த விவரங்கள் மூலம், வரி செலுத்துவோரின் முழு விவரங்களையும், வருமான வரித்துறை சுலபமாக அறிந்து கொள்ளலாம். அதனடிப்படையில் உரிய மேல் நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும்.
வலைதளத்தில் வெளியீடு:


* மத்திய நேரடி வரிகள் வாரியமானது, 2014-15ம் நிதியாண்டிற்கான புதிய வருமான வரி கணக்கு தாக்கல் படிவத்தை, அதன் வலைதளத்தில் வெளியிட்டுள்ளது. 
*படிவம் 1-ல், பல்வேறு வங்கிகளில் உள்ள கணக்கு விவரங்களை தெரிவிக்க வேண்டும்.
*படிவம் 2-ல், வெளிநாட்டு பயண விவரங்களை அளிக்க வேண்டும்.
*வெளிநாடுகளில் இருந்து வருவாய் பெறுவோர், படிவம் 1 மற்றும் படிவம் 4எஸ் போன்றவற்றை பயன்படுத்த முடியாது. 
*5 லட்சம் ரூபாய்க்கு மேல் வருமானம் ஈட்டினாலும், மிக மூத்த குடிமக்கள், காகித வடிவில், வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பாஸ்போர்ட்டை திரும்ப பெறுவர்:

வருமான வரி துறையின் புதிய நடைமுறையால், வெளிநாடு வாழ் இந்தியர்கள், தங்களின் அயல்நாட்டு பயணங்கள் குறித்த விவரங்களை தெரிவிக்க வேண்டும். இதை, அவர்கள் விரும்ப மாட்டார்கள். பலர், தங்களின் இந்திய பாஸ்போர்ட்டை திரும்ப பெற்றுக் கொண்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. அதுபோல், முந்தைய இரு ஆண்டுகளில், மூலதன ஆதாய கணக்கு திட்டத்தில் டெபாசிட் செய்த தொகையின், செலவழிப்பு விவரங்கள் கோரப்படுவதால், அன்னிய நிதி நிறுவனங்களின் முதலீடு குறைய வாய்ப்புள்ளது. 
மிதில் சோக் ஷி 
பங்குதாரர், சோக் ஷி அண்டு சோக் ஷி நிறுவனம்.
'ஆதார்' எண் இருந்தால்...:


* புதிய வருமான வரி கணக்கு தாக்கல் படிவங்களில், ஆதார் எண்ணுக்கு தனி பிரிவு ஒதுக்கப்பட்டுள்ளது.
* வரி செலுத்துவோரின் ஆதார் எண், மின்னணு ஆய்வு சான்றிதழ் சரிபார்ப்பின்படி உறுதிப்படுத்தப்படும். 
* இச்சான்று பெற்றோர், வருமான வரி கணக்கு தாக்கல்படிவத்தை, காகித வடிவில் செலுத்த தேவையில்லை.
* தற்போது, மின்னணு முறையில் வருமான வரி படிவம், 5ஐ தாக்கல் செய்தாலும், அதன் கையொப்ப பிரதியை, வருமான வரித் துறைக்கு நேரடியாக அனுப்ப வேண்டும். 
* இதற்கான அத்தாட்சியை, வருமான வரித் துறை, 120 நாட்களுக்குள் வழங்கும். 
* இதற்கு மாற்று வழியாக, ஆதார் மின்னணு ஆய்வு சான்றிதழ் முறை அறிமுகப்படுத்தப்படுகிறது. 
மறுபரிசீலனை:

புதிய வருமான வரி தாக்கல் படிவத்திற்கு வரி வல்லுனர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். வரி செலுத்துவோரை மேலும் சிரமப்படுத்தும் புதிய படிவம் குறித்து பன்னாட்டு நிதியத்தின் கூட்டத்தில் பங்கு கொள்ள வாஷிங்டன் சென்றுள்ள மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லியின் கவனத்திற்கு கொண்டு செல்லபட்டது. இதையடுத்து, 'புதிய வருமான வரி தாக்கல் படிவம் குறித்து மறுபரிசீலனை செய்யப்படும். எளிமையான படிவம் அறிமுகப்படுத்தப்படும்' என, அருண் ஜெட்லி தொலைபேசி மூலம் தெரிவித்ததாக, நிதிச் செயலர் சக்தி காந்ததாஸ் கூறியுள்ளார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement