Ad Code

Responsive Advertisement

இது சமமான கல்வியா? சுசித்ரா..

இனி பள்ளிக்குச் செல்லும்போது முதுகில் கூன் விழும்படியாகப் புத்தகப் பொதி மூட்டையைத் தூக்கிச் செல்ல வேண்டியதில்லை. பரிட்சையோ, மதிப்பெண்களோ நீங்கள் யார் என்பதைத் தீர்மானிக்காது. அறிவியல், கணிதப் பாடங்கள் படிப்பதும் ஆடி, பாடி, விளையாடுவதும் ஒரே அளவுகோலில் பார்க்கப்படும். 

உச்சபட்ச மதிப்பெண்கள் பெற்றால் மட்டும் அறிவியல், கணிதப் பாடம் படிக்கத் தகுதியானவர்; அடுத்த நிலையில் சுமாரான மதிப்பெண்கள் பெற்றால் கலை, இலக்கியம் பாடங்கள் படிக்க வேண்டும் எனும் நிலை இனி இல்லை. சொல்லப்போனால் அறிவியல் படிப்புதான் உயர்ந்தது கலைகள் சார்ந்த படிப்பு இரண்டாம் பட்சம் எனும் பாகுபாடு இனி இல்லை. உங்கள் திறன் எதுவோ அதைச் சரியாகக் கண்டறிந்தால் அத்துறையைத் தேர்ந்தெடுத்துப் படிக்கலாம்.

இப்படி ஒரு நிலை கல்வி உலகில் வந்தால் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும்?
ஆனால் அதற்கு “எல்லோருக்கும் ஒரே விதமானக் கல்வி அளிக்கப்பட வேண்டும் எனும் கல்விக் கொள்கையில்தான் சிக்கல் தொடங்குகிறது என்பதைப் புரிந்து கொள்ளவேண்டும்” என்கிறார் கார்டனர். எல்லோருக்கும் சமமாகக் கல்வி வழங்கப்பட வேண்டும் என்பது மிகச் சரியான அணுகுமுறை. ஆனால் எல்லோருக்கும் ஒரே மாதிரியான கல்வி என்பது சரியா எனக் கேள்வி எழுப்புகிறார்.

உனக்கு இடமில்லை
எல்லோரும் ஒரே விதமான கல்வி வழங்குவதன் மூலம் சமத்துவத்தை நிலை நாட்டுவதாகக் கூறும் கல்வித்திட்டம் அறிவுலகத்துள் ஏற்றத்தாழ்வை ஏற்படுத்தி வருகின்றது எனக் குற்றம் சாட்டுகிறார் கார்டனர். மேலோட்டமாகப் பார்த்தால் இந்தத் திட்டம் சரி போலத் தோன்றும் ஆனால் கணிதம்- தர்க்கம் மற்றும் மொழித்திறன் கைவரப்பெற்றவர்களை மட்டுமே இந்தக் கல்வி அமைப்பு அங்கீகரிக்கிறது. அவை அல்லாது வேறுவிதமான அறிவுத்திறன் கொண்டவர்களை ஒதுக்குகிறது.

உதாரணமாக, இன்றும் கல்லூரியில் எம்.பி.பி.எஸ் எனும் மருத்துவப் படிப்புக்குத்தான் முதல் மரியாதை வழங்கப்படுகிறது. அத்தகைய அங்கீகாரத்துக்கு மூலக் காரணம் உலகின் தலை சிறந்த சேவைகளுள் ஒன்று மருத்துவச் சேவை எனலாம்.

ஆனால் ஒருவர் மருத்துவராவதைத் தீர்மானிப்பது அவர் 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பில் அறிவியல் பாடங்கள் மற்றும் கணிதப் பாடங்களில் பெறும் மதிப்பெண்கள்தான். யோசித்துப் பாருங்கள் கணிதம், இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் பாடப் பிரிவில் உயர்ந்த மதிப்பெண்கள் பெற்றவரெல்லாம் மருத்துவராகும் திறன் படைத்தவர்களா? மருத்துவசிகிச்சை அளிக்க அந்தத் துறை சார்ந்த புத்தக அறிவு மட்டும் போதுமா? கார்டனரின் ஆய்வின்படி மனிதத்தொடர்பு அறிவாற்றல், இயற்கை ரீதியான அறிவுத்திறன் மற்றும் உடல் ரீதியான அறிவுத்திறன் மிக்கவர்களே நோய் தீர்க்கும் திறன்படைத்தவர்களாக ஒளிரமுடியும்.

யார் மருத்துவர்?
மருத்துவம் என்பது தொழில்துறை அல்ல அது ஒரு சேவைத்துறை. அப்படியிருக்க, சக மனிதரின் மனவோட்டத்தைப் புரிந்து கொண்டு, தன்னைப் பிறருடைய நிலையில் பொருத்திப்பார்த்து செயல்படக்கூடிய ஒருவரால்தான் மருத்துவத்தைத் தொழிலாகப் பார்க்காமல் சேவையாகப் பார்க்க முடியும்.
அத்தகையவர் இயல்பிலேயே சக மனிதனின் நிலையை உணர்ந்து கொள்ளுவார். அப்படியானால் மருத்துவரின் அடிப்படை அறிவு மனிதத் தொடர்பு அறிவுத்திறன். அதே போலத் தாவரவியல், விலங்கியல் போன்ற பாடங்கள் வழியாக மட்டும் இயற்கையைப் புரிந்துகொள்ள முயல்பவருக்கும் இயற்கையின் தரிசனத்துக்காகவே நாளை ரசித்துத் தொடங்குபவருக்கும் வித்தியாசம் இல்லையா?

இயற்கை அறிவுத் திறனை இயல்பாகக் கொண்ட ஒருவரால் ஒவ்வொரு உயிரினத்தையும் துல்லியமாகப் பிரித்து அறிய முடியும். உயிரினங்களின் தனித்துவத்தை நுணுக்கமாகப் புரிந்துகொள்ள முடியும். அப்படிப்பட்டவர் சிறந்த மருத்துவ ஆய்வாளராகவும் விளங்க முடியும். பிசியோதெரபி, அக்குபஞ்சர், தொடு வர்மம் போன்ற உடல் சிகிச்சை முறைகளுக்கு மருத்துவ அறிவு மட்டும் போதாது. உடற் ரீதியான அறிவுத்திறன்தான் இதுபோன்ற மருத்துவச் சிகிச்சைகளுக்கு அடிப்படை.

நீண்ட நெடிய ஆய்வுக்குப் பின்னரே கார்டனர் இத்தகைய பரிந்துரையை வழிமொழிகிறார். அவை உலகின் பல்வேறு கல்விக்கூடங்களில் சோதிக்கப்பட்டும் வருகின்றன.

நீதிக்கானக் குரல்
சமூக நடைமுறையில் உள்ள சிக்கலை சரி செய்து அதற்கான தீர்வை கண்டறிவதுதான் அறிவு. இத்தகைய புரிதல் எழும்போது இவ்வுலகம் எல்லோருக்குமானதாக மாறும் எனும் சமூக நீதிக்கானக் குரலுக்குச் சொந்தக்காரர் கார்டனர். ஆரம்பத்தில் உளவியல் ரீதியாக மட்டுமே அறிவின் எல்லையை ஆராய்ந்தார் அவர்.

அவ்வாறு நிகழ்த்தப்பட்ட ஆய்வுகளின் ஊடே அறிவை அடித்தளமாக வைத்து மனிதர்கள் இடையே காலங்காலமாகக் கட்டி எழுப்பப்பட்டிருக்கும் படிநிலை வெளிப்பட்டது. அதனைத் தொடர்ந்து அறிவின் பிற சாத்தியப்பாடுகளும் வெளிப்பட்டன. இப்போது அவருடைய பன்முக அறிவுத்திறன் கல்வியாளர்களால் தத்தெடுக்கப்பட்டுக் கொண்டாடப்படுகிறது. பன்முக அறிவுத்திறன் கல்வி உலகில் இன்னும் பல மாற்றங்கள் ஏற்படுத்திவருகிறது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement