Ad Code

Responsive Advertisement

தமிழக பொறியியல் கல்லூரிகளுக்கு தொழில்நுட்பக் கல்வி இயக்குனர் நோட்டீஸ்

'உதவித் தொகை பெறும் மாணவர்களை தேர்வு எழுத அனுமதி மறுத்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, தனியார் பொறியியல் கல்லூரிகளுக்கு தொழில்நுட்பக் கல்வி இயக்குனரகம், 'நோட்டீஸ்' அனுப்பியுள்ளது.

தமிழகத்தில் உள்ள ஆதிதிராவிடர், பட்டியலினத்தவர், மதம் மாறிய பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு, போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித் தொகை திட்டம், 2011 முதல் அமலில் உள்ளது. ஆண்டுக்கு, 2.5 லட்சம் ரூபாய்க்கு மிகாமல், வருமானம் பெறும் குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு, உயர்கல்வி பராமரிப்புப் படி மற்றும் கட்டாயக் கல்விக் கட்டணத்தை, அரசு வழங்குகிறது. ஆனால், பொறியியல் கல்லூரிகளில், நடப்புக் கல்வி ஆண்டு முடியும் தறுவாயில், மாணவர்களுக்கு, 'ஹால் டிக்கெட்' வழங்காமல், தேர்வு எழுத அனுமதி மறுப்பதாக, ஆதிதிராவிடர் நலத்துறைக்கு புகார்கள் வந்தன. இது குறித்து, ஆதிதிராவிடர் நலத்துறை செயலர் கண்ணகி பாக்யநாதன் விசாரித்ததில், பல கல்லூரிகளில், விதி மீறல் இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, தமிழக தொழில்நுட்பக் கல்வி இயக்கத்துக்கு, இந்த புகார் அனுப்பப்பட்டு விசாரணை நடந்தது. இதில், பல கல்லூரிகள் அரசிடம் உதவித் தொகையும் பெற்று விட்டு, மாணவர்களை கூடுதல் கட்டணம் செலுத்துமாறு மிரட்டுவது தெரிய வந்துள்ளது. இதையடுத்து, தொழில்நுட்பக் கல்வி இயக்குனர் பிரவீன்குமார், அனைத்து தனியார் சுயநிதி பொறியியல் கல்லூரிகள் மற்றும் சிறுபான்மை பொறியியல் கல்லூரிகளுக்கு, 'நோட்டீஸ்' அனுப்பியுள்ளார். அதில், 'நடப்புக் கல்வி ஆண்டில், அனைத்து கல்லூரிகளிலும் இலவச மற்றும் கட்டண ஒதுக்கீட்டில், போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித் தொகைக்கு தகுதியுடைய அனைத்து மாணவர்களுக்கும், அரசிடமிருந்து கல்வி உதவித் தொகை அனுப்பப்பட்டது.


எனவே, மாணவர்களை தேர்வு எழுத அனுமதி மறுத்து, அவர்களுக்கு, 'ஹால் டிக்கெட்' தராமல் இழுத்தடிக்கும் சம்பவங்களை உடனே நிறுத்தி, தேர்வுக்கு மாணவர்களை அனுமதிக்க வேண்டும்' என, தெரிவித்துள்ளார். இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, 'மாணவர்களின் கல்வி உதவித் தொகையையும் பெற்று, கூடுதல் கட்டணமும் வாங்கும் தனியார் கல்லூரிகள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கான பட்டியல் தயாராகி வருகிறது' என்றனர்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement