Ad Code

Responsive Advertisement

கௌரவ விரிவுரையாளர்கள் ஊதியம்: இயக்குநர் அலுவலகம் நடவடிக்கை

தமிழகத்தில் புதிதாகத் தொடங்கப்பட்ட 12 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் பணிபுரியும் கௌரவ விரிவுரையாளர்களுக்கு ஊதியம் வழங்குவதற்கான நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டிருப்பதாக கல்லூரிக் கல்வி இயக்குநர் அலுவலக அதிகாரிகள் தெரிவித்தனர்.

பெரும்பாலும் வருகிற ஏப்ரலில் அவர்களுக்கான ஊதியம் முழுவதும் வழங்கப்பட்டு விடும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

தமிழகம் முழுவதும் உள்ள அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் பேராசிரியர்கள் பற்றாக்குறையைப் போக்கும் வகையில், ரூ. 10 ஆயிரம் தொகுப்பூதிய அடிப்படையில் கௌரவ விரிவுரையாளர்கள் நியமிக்கப்பட்டு, பணியாற்றி வருகின்றனர்.

இந்த நிலையில், பின்தங்கிய மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் அந்தந்தப் பகுதியிலேயே உயர் கல்வியைப் பெறும் வகையில் கடந்த 2013-14-ஆம் கல்வியாண்டில் புதிதாக 12 கல்லூரிகளை தமிழக அரசு தொடங்கியது.

இந்தக் கல்லூரிகளில் பேராசிரியர் பற்றாக்குறையைப் போக்குவதற்காக 60 கௌரவ விரிவுரையாளர்கள் நியமிக்கப்பட்டு பணியாற்றி வருகின்றனர்.

இந்தக் கௌரவ விரிவுரையாளர்கள் ஒவ்வோர் ஆண்டும் ஜூன் மாதம் முதல் 11 மாதங்கள் பணியில் அமர்த்தப்படுவர்.

பின்னர், விடுவிக்கப்பட்டு, அடுத்த ஆண்டு புதிதாக நியமனம் செய்யப்படுவார்கள்.

கல்லூரிகள் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையில் தாங்களாகவே இவர்களை நியமித்துக்கொண்டு, அதன் பிறகு அவர்களின் நியமனத்துக்கான ஒப்புதலை அரசிடம் பெற்று, ஊதியத்துக்கான நிதி ஒதுக்கீட்டையும் பெறுவது வழக்கம்.

இதுபோல, புதிதாக தொடங்கப்பட்ட 12 கலை, அறிவியல் கல்லூரிகளில் 2013-14-ஆம் கல்வியாண்டில் இருந்து 60 கௌரவ விரிவுரையாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு கடந்த 10 மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை.

இதனால், அவர்கள் மிகுந்த பாதிப்புக்கு ஆளாகியிருப்பதாக புகார் எழுந்தது.

இதுகுறித்து கல்லூரிக் கல்வி இயக்குநர் அலுவலக உயர் அதிகாரிகள் கூறியதாவது:

புதிதாகத் தொடங்கப்பட்ட 12 கலை, அறிவியல் கல்லூரிகளில் பணிபுரிந்து வரும் 60 கௌரவ விரிவுரையாளர்களுக்கு கடந்த 10 மாதங்களாக ஊதியம் வழங்கவில்லை என்பது உண்மைதான்.

நிர்வாகரீதியிலான காரணங்களால் இந்தச் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதைச் சரி செய்வதற்கான நடவடிக்கைகள் இப்போது எடுக்கப்பட்டுவிட்டன.

இதுதொடர்பாக, அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

மார்ச் மாதம் நிதியாண்டின் இறுதி மாதம் என்பதால், ஏப்ரல் முதல் வாரத்தில் அரசிடம் இருந்து இவர்களுக்கான ஒப்புதல் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒப்புதல் கிடைத்தவுடன், நிலுவையில் உள்ள ஊதியம் முழுவதும் அவர்களுக்கு வழங்கப்பட்டுவிடும் என்றார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement