Ad Code

Responsive Advertisement

இடியாப்ப' கேள்விகளால் மாணவர்கள் திணறல்: வேதியியலில் 'சென்டம்' சரியும்?

பிளஸ் 2 மாணவர்களுக்கு நேற்று நடந்த வேதியியல் தேர்வில், பலகேள்விகள், சுற்றி வளைத்து கேட்கப்பட்டதால், மாணவ, மாணவியர், திணறினர். இதனால், இந்த பாடத்தில், 'சென்டம்' சரியலாம் என கூறப்படுகிறது.
பொறியியல், மருத்துவ படிப்புகளில் சேர, கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல் தேர்வுகளில் பெறப்படும் மதிப்பெண் முக்கியம். இந்நிலையில், நேற்று வேதியியல் தேர்வு நடந்தது. இதில், மாணவர்கள் எதிர்பார்த்த அளவுக்கு கேள்விகள் வரவில்லை. அத்துடன், பல கேள்விகள், நேரடியாக கேட்காமல், சுற்றி வளைத்து, மாணவர்களை குழப்பும் வகையில் கேட்டதால், சரிவர பதிலளிக்க முடியாமல், மாணவ, மாணவியர் திணறினர். இதனால், சேலம் மாவட்டத்தில், பல மையங்களில், அழுதபடியே மாணவர்கள் வெளியே வந்தனர்.
இதுகுறித்து, வேதியியல் ஆசிரியர் ஒருவர் கூறியதாவது:
* ஒரு மதிப்பெண் வினா பகுதியில், 'ஏ' வகை வினாத்தாளில், 10 மற்றும் 22ம் எண்ணுள்ள வினாக்களும், 'பி' வகை வினாத்தாளில், 2, 19ம் எண்ணில் கேட்கப்பட்ட வினாக்களுக்கும், சரியான விடை, 'ஆப்ஷனாக' வழங்கவில்லை.
* இதனால், இரண்டு மதிப்பெண், 'போனசாக' கிடைக்க வாய்ப்புள்ளது.
* ஒரு மதிப்பெண் வினாக்களில், 23 கேள்விகள், பாடத்தின் இறுதிப்பகுதியில் உள்ள பயிற்சி வினாக்கள் என்ற பகுதியில் இருந்து, அப்படியே கேட்கப்படும். இந்த முறை, 17 கேள்விகள் மட்டுமே, அப்படி கேட்கப்பட்டன.
* மூன்று மதிப்பெண் வினாக்களில், எதிர்பார்க்காத வினாக்களே அதிகம் இடம் பெற்றிருந்தது. ஐந்து மதிப்பெண் வினாவில், 63வது கேள்வியாக கேட்கப்பட்ட, 'நுண்ணுயிரிகளை குறித்து எழுதுக' என்ற வினாவுக்கான பதில், பெரியதாக இருக்கும். அதிலும், கூடுதல் தகவல்களை கேட்டுள்ளதால், அதற்கு பதில் அளிக்க மாணவர்கள் திணறியுள்ளனர்.
* பத்து மதிப்பெண் கட்டாய வினாவிலும், 70 'பி' வினா, மிகப்பெரிய பதிலை கொண்டது. இதனால், வேதியியல் தேர்வை எளிதானதாக கருத முடியாது. அதே சமயம், பாட பகுதிகளில் இருந்து, கேள்விகள் விலகிச்செல்லவும் இல்லை.
* எதிர்பாராத கேள்விகளும், சுற்றி வளைத்த கேள்விகளும், பல மாணவர்களுக்கு, 'சென்டம்' பாதிக்கும். கடந்த ஆண்டை விட, நடப்பு ஆண்டு, வேதியியல் பாடத்தில், 200க்கு, 200 எடுக்கும் மாணவர் எண்ணிக்கை குறையும். இவ்வாறு, அவர் கூறினார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement