Ad Code

Responsive Advertisement

'வாட்ஸ் - அப்'பில் வினாத்தாள்: விசாரணையை திசை திருப்ப சதி?: பள்ளிக்கல்வி அலுவலர்கள் குற்றச்சாட்டு

'வாட்ஸ் அப்'பில், பிளஸ் 2 வினாத்தாள், 'லீக்' ஆன விவகார விசாரணையில், பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டுள்ளதாக, கல்வித் துறை அலுவலர்கள், குற்றம் சாட்டி உள்ளனர். அதிகாரிகளை விட்டு விட்டு, அப்பாவி ஊழியர்களை பழி வாங்குவதாக, புகார் தெரிவித்துள்ளனர்.

'சஸ்பெண்ட்'
கடந்த, மார்ச், 18ம் தேதி பிளஸ் 2 கணிதத் தேர்வில், ஓசூர், பரிமளம் மெட்ரிக் பள்ளி தேர்வு மையத்தில், விஜய் வித்யாலயா பள்ளி ஆசிரியர் கோவிந்தன் மற்றும் மகேந்திரன் ஆகியோர், 'வாட்ஸ் - அப்'பில், வினாத்தாளை லீக் செய்தனர். 

தேர்வு அறைக் கண்காணிப்பாளர்களான இருவரும் கைது செய்யப்பட்டு, போலீஸ் விசாரணை நடக்கிறது. இப்பிரச்னையில், ஓசூர் மாவட்டக் கல்வி அதிகாரி வேதகன் தன்ராஜ், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார். 

தொடர்ந்து, ஓசூர் கல்வி அலுவலக ஊழியர்கள் சந்திரசேகர், ரமணா, கிருஷ்ணகிரி மாவட்டக் கல்வி அலுவலக ஊழியரான, மற்றொரு சந்திரசேகர் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகக் கண்காணிப்பாளர் அசோக்குமார் ஆகியோரும், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர்.
இந்த நடவடிக்கைக்கு கல்வித்துறை அலுவலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். அதிகாரிகளின் தவறுகளுக்கு, சாதாரண ஊழியர்கள் மீது பழி போட்டு, விசாரணையை முடக்க சதி நடப்பதாக புகார் எழுந்துள்ளது.

இதுகுறித்து, பள்ளிக் கல்வி நிர்வாக அலுவலர்கள் கூறியதாவது:தேர்வுப் பணிகளில் பெரும் குளறுபடி ஏற்பட்டுள்ளது. பிளஸ் 2 தேர்வென்றால் அதில் முதுகலை ஆசிரியர்கள் மட்டும் ஈடுபடுவர் என்றும், 10ம் வகுப்பு என்றால், அதில் பட்டதாரி ஆசிரியர்கள் மட்டும் ஈடுபடுவர் என்றும், ஒரு மறைமுக கூட்டு அமைத்து செயல்படுவது, கடந்த பல ஆண்டுகளாக நீடிக்கிறது. இதில், 'பூனைக்கு யார் மணி கட்டுவது' என்ற அடிப்படையில், எந்த தேர்வுத்துறை இயக்குனரும், செயலரும் மாற்றம் கொண்டு வர முயற்சித்தது இல்லை.

அவசரகதியில்...
மாறாக, தவறு நடந்தால், பள்ளிக்கல்வி ஊழியர்களை மட்டும் பழிவாங்கும் போக்கு உள்ளது. இந்த ஆண்டு தேர்வு நடக்கும் போதே, விடைத்தாள் திருத்தும் பணி துவங்கியதால், முதுகலை மொழிப்பாட ஆசிரியர்கள், திருத்தப் பணிக்கு அனுப்பப்பட்டனர்.அதனால், முக்கியப் பாட தேர்வுப் பணிக்கு ஆசிரியர் பற்றாக்குறை ஏற்பட்டது. இதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காமல், அவசர கதியில், தனியார் மெட்ரிக் பள்ளி ஆசிரியர்களை பணிக்கு எடுக்கின்றனர்.தனியார் பள்ளி அனுப்பும் ஆட்களை தேர்வுப் பணிக்கு அனுப்பி விட்டு, பின் முன் தேதியிட்டு, பணி நியமன உத்தரவு கேட்கும் சம்பவங்கள் நடந்துள்ளன.ஆனால், தனியார் பள்ளி சார்பில் வருபவர் நல்லவரா, முன் அனுபவம் உள்ளவரா, உண்மையில் அவர் ஆசிரியரா என்று அதிகாரிகள் ஆய்வு செய்வதில்லை. அதனால், முறைகேடுகள் சாதாரணமாகி விட்டன. இதன்படியே, ஓசூர் விவகாரத்தில், கல்வி அலுவலக ஊழியர்கள் மீது பழி போட்டு, அதிகாரிகள் தப்பிக்கப் பார்க்கின்றனர். இதை அனுமதிக்க மாட்டோம்.இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.

'சஸ்பெண்ட்' ரத்து செய்யாவிட்டால் போராட்டம்

ஓசூர் பிரச்னை தொடர்பாக, கல்வித்துறை ஊழியர்கள், இன்று டி.பி.ஐ., வளாகத்தில் உணவு இடைவேளையில் கண்டனக் கூட்டம் நடத்துகின்றனர். இதுகுறித்து, நிர்வாக அலுவலர்கள் சங்க பொதுச் செயலர் ராஜேந்திர பிரசாத் கூறியதாவது:ஓசூரில், தனியார் பள்ளி ஆசிரியர்களை, 'ஆர்டர்' இன்றி, தேர்வறைக்கு வினாத்தாள், விடைத்தாள் கட்டுகள் கொடுத்து அனுப்பியது, தேர்வு மைய கண்காணிப்பாளர் மற்றும் தேர்வு மையப் பொறுப்பாளரின் தவறு. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. ஆனால், சம்பந்தமே இல்லாத அலுவலக ஊழியர்களை பலிகடாவாக்கி, விசாரணையை திசை திருப்பப் பார்க்கின்றனர். எனவே, ஊழியர்கள் மீதான, 'சஸ்பெண்ட்' நடவடிக்கையை ரத்து செய்யாவிட்டால், கிருஷ்ணகிரி மாவட்டத்திலும், பின் மாநில அளவிலும் போராட்டம் நடத்துவோம்.இவ்வாறு அவர் கூறினார். -

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement