Ad Code

Responsive Advertisement

பள்ளி வாகனங்களை ஆய்வு செய்யுங்க: போக்குவரத்து துறைக்கு கண்டிப்பு

சென்னை, சேலையூரில் உள்ள, சியோன் பள்ளியில், தொடக்க கல்வி படித்து வந்தவர், சுருதி, 4; பள்ளியின் பஸ்சில் இருந்த ஓட்டை வழியாக கீழே விழுந்ததில், சிறுமி பலியானாள். இச்சம்பவம், 2012 ஜூலையில் நடந்தது.

பஸ்சுக்கு, தகுதிச் சான்றிதழ் வழங்கியது தொடர்பாக, விசாரணை நடந்தது. தாம்பரம், மண்டல போக்குவரத்து அதிகாரியாக பணியாற்றி வந்த, பட்டப்பசாமி, 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து, அவருக்கு, 'மெமோ' வழங்கப்பட்டது. போக்குவரத்து ஆணையர் அனுப்பிய, 'மெமோ'வில், 'மோட்டார் வாகன ஆய்வாளர் வழங்கிய தகுதிச் சான்றிதழை சரிபார்க்க, ஆர்.டி.ஓ., தவறிவிட்டார். கடமையை சரிவர செய்யவில்லை' என, கூறப்பட்டது.

இதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், பட்டப்பசாமி, மனு தாக்கல் செய்தார். நீதிபதி சசிதரன் பிறப்பித்த உத்தரவு: கல்வி நிறுவனங்கள், கட்டணம் பெற்றுக் கொண்டு தான், வாகனங்களை இயக்குகின்றன; தர்மத்துக்காக இயக்கவில்லை. இருந்தாலும், பழைய, ஓட்டை உடைசல் பஸ்களை, பராமரிக்கின்றனர். இதனால், மாணவர்களுக்கு தான் ஆபத்து ஏற்படுகிறது. இந்த வாகனங்களை எல்லாம், போக்குவரத்து அதிகாரிகள் மற்றும் போலீசார், அரிதாகவே சோதனை செய்கின்றனர். அதனால், பல நேரங்களில் விபத்துகள் ஏற்படுகின்றன. அதிகாரிகள், தங்கள் கடமையை உணர வேண்டும். அவ்வப்போது, பள்ளி வாகனங்களை பரிசோதித்து, விதிகளை பூர்த்தி செய்கின்றனரா என்பதை, போக்குவரத்து மற்றும் போலீஸ் துறைகள், உறுதி செய்ய வேண்டும். அதிகாரிகளின் அஜாக்கிரதையால், சுருதிக்கு ஏற்பட்டது போல், மற்றொரு சம்பவம் நடக்கக் கூடாது. இம்மனு, தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு, நீதிபதி சசிதரன் உத்தரவிட்டுள்ளார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement