Ad Code

Responsive Advertisement

டி.என்.பி.எஸ்.சி., அலுவலகத்தில் பார்வையாளர்களுக்கு தடை

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமான - டி.என்.பி.எஸ்.சி.,யின் பணிகளில், இடைத்தரகர் குறுக்கீடுகளைக் குறைக்க, டி.என்.பி.எஸ்.சி., தலைமை அலுவலகத்தில், பார்வையாளர் நுழைய தடை விதிக்கப்பட்டு உள்ளது.
தமிழக அரசுத் துறை காலிப் பணியிடங்களுக்கு, குரூப் - 1, 2 உள்ளிட்ட போட்டித் தேர்வுகள், நீதிமன்றப் பணியிட தேர்வுகள், டி.என்.பி.எஸ்.சி., மூலம் நடத்தப்படுகிறது. கடந்த காலங்களில், டி.என்.பி.எஸ்.சி., தேர் வில், வினாத்தாள் கசிவு, விடைத்தாள் காணாமல் போவது, இடைத்தரகர் ஆதிக்கம் போன்ற புகார்கள் எழுந்தன.

எனவே, கடந்த சில மாதங்களாக, டி.என்.பி.எஸ்.சி., நிர்வாகப் பணிகள் கணினி மயமாக்கப்பட்டு, வெளிப்படை யான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஆனாலும், தேர்வு முடிவுகள் வெளியிடும் போதும், தகுதிப்பட்டியல் தயாரித்தல், வேலைவாய்ப்பு பதிவு மூப்பு, இடஒதுக்கீடு முறையை பின்பற்றுதல், சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்முகத் தேர்வு போன்ற பல நடவடிக்கைகளில், சில தனிநபர் தலையீடு இருப்பதாக, அவ்வப்போது புகார்கள் வருகின்றன.

இதை கருத்தில் கொண்டு, டி.என்.பி.எஸ்.சி., தலைமை அலுவலகத்துக்குள், பார்வையாளர் நுழையத் தடை விதிக்கப்பட்டு உள்ளது.
ஆணைய தலைவர், செயலர், தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் ஆணைய உறுப்பினர்கள், இணை மற்றும் துணைச் செயலர் என, எந்த அதிகாரியையும், வெளியாட்கள் சந்திக்க அனுமதிக்கக் கூடாது என்று உத்தரவிடப்பட்டு உள்ளது.முன் அனுமதி பெற்று வருபவர்களும், மாலை 4:00 மணி முதல், 5:00 மணிக்குள் மட்டும் அனுமதிக்கப்படுகின்றனர். அனைத்து பாதைகளும் மூடப்பட்டு, அலுவலர்களுக்கு தனிப்பாதையும், முன் அனுமதியின் பேரில் வருவோருக்கு, வரவேற்பறை அருகில் தனிப்பாதையும் ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

சிபாரிசை தடுக்க...இதுகுறித்து, தேர்வாணைய உயரதிகாரிகள் சிலர் கூறியதாவது:
வெளியாட்களை உள்ளே அனுமதிப்பதால், அலுவலகப் பணிகள் பாதிப்பதுடன், பணி நியமன நடவடிக்கைகளில், அரசியல்வாதிகள் சிபாரிசுக்கு வரும் வாய்ப்புள்ளது.
இதனால், முறைப்படி விண்ணப்பித்து தேர்வு எழுதுவோர் பாதிக்கப்படுவதுடன், ஆணையத்தின் மீதான தேர்வர்களின் நம்பிக்கையும், தவறாகத் திசை திருப்பப்படும் நிலை உள்ளது.
இதை தடுக்க, பார்வை யாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement