Ad Code

Responsive Advertisement

மாணவர்கள் அச்சமடையும் வகையில் பறக்கும்படையினர் செயல்படக் கூடாது - அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவுரை

பிளஸ் 2 தேர்வின்போது மாணவர்கள் அச்சமடையும் வகையில் செயல்படக் கூடாது என பறக்கும்படையினருக்கு அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவுறுத்தியுள்ளது.

பிளஸ் 2 பொதுத்தேர்வுக்கு 4 ஆயிரத்துக்கும் அதிகமான உறுப்பினர்களைக் கொண்ட பறக்கும் படைகளும், பத்தாம் வகுப்புத் தேர்வுக்கு 5 ஆயிரத்துக்கும் அதிகமான உறுப்பினர்களைக் கொண்ட பறக்கும் படைகளும் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றுக்கு அரசுத் தேர்வுகள் இயக்ககம் வழங்கியுள்ள அறிவுரைகளின் விவரம்:

தேர்வு எழுதும்போது மாணவர்கள் அச்சமடையும் வகையில் செயல்படக் கூடாது. தேர்வர்களின் மன நிலை, உடல் நிலை, தேர்வு எழுதும் நேரம் பாதிக்காத வகையில் செயல்படுதல் வேண்டும். தேர்வர்கள் கண்ணியமாக நடத்தப்படுதல் வேண்டும். சந்தேகத்துக்குரிய தேர்வர்களிடம் மட்டும் சோதனை நடத்தினால் போதுமானது. அனைவரையும் கட்டாயமாகச் சோதிக்க வேண்டிய அவசியம் இல்லை. தேர்வு மையங்களில் ஒழுங்கீனச் செயல்களில் ஈடுபடும் தேர்வர்கள் கண்டறியப்பட்டால், அவர்களது வினாத்தாள், விடைத்தாள், கைப்பற்றப்பட்ட இதர ஆவணங்களை முதன்மைக் கண்காணிப்பாளர், துறை அலுவலர்களிடம் ஒப்படைக்க வேண்டும்.

ஒழுங்கீனச் செயலில் ஈடுபட்ட தேர்வர்கள் அன்றைய தேர்வைத் தொடர்ந்து எழுத முடியாது. தொடர்ந்து வரும் இதர தேர்வுகளை எழுத அனுமதிக்கலாம். தவறு செய்தவர், தவறு செய்த மாணவரைப் பிடித்தவர் ஆகிய இரண்டு பேரின் வாக்குமூலமும் வழங்கப்பட வேண்டும். ஆள்மாறாட்டம் செய்திருந்தால் உடனடியாகக் காவல் துறையினரிடம் புகார் தெரிவிக்க வேண்டும்.

அனைத்துத் தேர்வு மையங்களுக்கும் 10 அறைகளுக்கு ஒருவர் என்ற விகிதத்தில் தேர்வு மையத்திலேயே நிலையான கண்காணிப்புப் படையும் இருக்க வேண்டும் என்பன உள்ளிட்ட அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement